districts

img

கோவை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மத்திய சிறைவாசிகள் 100% தேர்ச்சி!

கோவை மத்தியச் சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி அடைந்தனர்.

கோவை மத்தியச் சிறையில் சுமார் 2300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு சிறைத்துறை சார்பில் யோகா, கல்வி,  தொழிற்கல்வி போன்ற பல்வேறு மறுவாழ்வு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி  2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வைக் கோவை மத்தியச் சிறையில் உள்ள 50 ஆண் மற்றும் 4 பெண் சிறைவாசிகள் எழுதினர்.

இன்று தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கோவை மத்திய சிறையில் தேர்வெழுதிய 54 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.  இவர்களில் தண்டனை சிறைவாசி மணிகண்டன் 500க்கு 379 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,  கௌதம் 500க்கு 359 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,  ஜார்ஜ் அசோக்குமார் என்பவர் 500க்கு 358 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற அனைத்து சிறைவாசிகளுக்கு,  கோவை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் எம்.செந்தில் குமார் இனிப்புகள் வழங்கி கல்வியின் சிறப்பு மற்றும் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பின்னர் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கும்,  சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பாராட்டைத்  தெரிவித்தார். மேலும் கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு  வாழ்த்துக்களையும்,  சிறப்பாக பணியாற்றிய அனைத்து அலுவலருக்கும் பாராட்டைத் தெரிவித்தார்.

;