headlines

img

துச்சாதனர்களும் துரியோதனர்களுமா பாதுகாப்பு?

கோவையில் உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு கேலிக்கூத்தாகிவிடும் என்று பேசியிருப்பதுதான் நகைக்கத்தக்கது. 

அவரது மாநிலம் தான் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அவரது ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை தேசிய குற்றப்பதிவு ஆவணங்களே எடுத்துக் காட்டுகின்றன.பணிப்பெண்ணின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்எல்ஏ  மீது  புகார் செய்யப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் தந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்திலேயே மர்மமான முறையில் சாகடிக்கப்பட்டார். பாஜக எம்எல்ஏவின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார் கொடுத்துள்ளார். இவைதான் பெண்களுக்கு அவரது ஆட்சியும் கட்சியும் கொடுத்த பாதுகாப்பு.

இவற்றுக்கெல்லாம் மகுடம் போன்றது தான் அண்மையில் ஹத்ராஸில் நடந்த சம்பவம். இந்தநிகழ்வுகளையெல்லாம் தமிழக மக்கள் நினைவில்வைத்திருக்க மாட்டார்கள் என்று ஆதித்யநாத் நினைத்திருக்கிறார் போலும். ஆனால் அப்படிப்பட்டவர் தமிழ்நாட்டில் வந்த பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது தான் கேலிக்குரியது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் இவரது கட்சியைச் சேர்ந்தவர்களின் யோக்யதையையும் பார்க்கலாம். கரூரில் குளிக்கும் பெண்ணை வீடியோஎடுத்தவர் பாஜக மாவட்டத்தலைவர், சிவகங்கைமாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவர்பாஜவின் கலை, கலாச்சாரப்பிரிவு மாவட்டத்தலைவர். இவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பையா கொடுத்தார்கள்?

அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சிக் கொடுமையை நிகழ்த்தியவர்கள் மீது, குமரி மாவட்டத்தில் இளம்பெண்களை மோசடி செய்துபாலியல் பலாத்காரம் செய்த கும்பல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அத்துடன் பெண் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன?

பொள்ளாச்சி நிகழ்வு கடந்த மக்களவை தேர்தலின் போது பேசும் பொருளானது. ஆனால் அப்போதும் கூட அந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஏனென்றால் அதில் சிக்கியவர்கள் அதிமுக பிரமுகர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்களாம். அடுத்தவரை ஒருவிரல் நீட்டி குற்றம்சாட்டும்போது மூன்று விரல்கள் அவரை நோக்கி இருப்பதை ஆதித்யநாத் அறியவில்லையா?பெண்களின் பாதுகாப்புக்கு இவர்கள் தான்எதிரிகள். ஆனால் துச்சாதனர்களும் துரியோதனர்களும் பெண்கள் மீது கரிசனம் கொண்டவர்கள் போல் நடித்தால் பாஞ்சாலிகள் நம்பமாட்டார்கள். தமிழகப் பெண்களும் மக்களும் மகாபாரதம் பற்றி தெரியாதவர்கள்  அல்ல. இந்த தேர்தல்போரில் பாஜக - அதிமுக கூட்டணி படுதோல்வியையே சந்திக்கும். தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. 

;