india

img

வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.

மேலும், முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து பல நாள்கள் ஆகியும் தொகுதிவாரியாக வாக்காளர்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாததை எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ஆம் தேதியும் நடந்து முடிந்தன.

ஆனால், முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து 11 நாள்களுக்கு பிறகும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 4 நாள்களுக்கு பிறகும் ஏப்ரல் 30 ஆம் தேதி தான் இரண்டு கட்டத்திலும் பதிவான மொத்த வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.அதன்படி, முதல்கட்டத்தில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், ஒவ்வொரு தொகுதிவாரியாக வாக்காளர்கள் விவரங்களை இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

வாக்குப்பதிவு நிலவரத்தை அறிவிக்க தொடர்ந்து தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி இதுகுறித்து பேசியுள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரத்துக்குள் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், 2014 ஆம் ஆண்டு வரை இதுவே நடைமுறையில் பின்பற்றுப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது, வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏற்றுக்கொள்ள முடியாது. முழுமையான வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்திருப்பது வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம், அந்த தரவுகளை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்.2014 வரை இதுதான் நடைமுறையில் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் தரவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது தரவுகள் வெளியிடுவதே நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஆணையம் வெளியிடப்பட்ட 347 தொகுதிகளின் வாக்குப்பதிவு தரவுகளும், வாக்குகள் எண்ணப்பட்ட தரவுகளுக்கு முரண்பாடு ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தரவுகளை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொகுதிவாரியாக வாக்காளர்களின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடாதது குறித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு சதவிகிதங்களை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவிகிதங்கள் அனைத்தும் தோராயமானவை. தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடைபெறுவதற்கான சாத்தியங்களை இது உருவாக்குகிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

மேலும், ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்காளர்கள் விவரங்களை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;