india

img

பெண் என்பதால் சர்வதேச போட்டிகளில் புறக்கணிப்பதா - உயர்நீதிமன்றம் கேள்வி

தகுதிப் போட்டியில் தகுதி பெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சமீஹா பர்வீன். இவர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், போலந்து நாட்டில் நடைபெறவுள்ள தேசிய காது கேளாதோர் தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் மேலும் 4 வீரர்கள் தகுதி பெற்று உள்ளனர். ஆனால் போட்டிக்குத் தகுதி பெற்றும் சமீஹாவுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.  

இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே பெண்கள் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். ஒரு பெண்ணை மட்டும் அழைத்துச் செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாகத் தமிழ்நாடு விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

இதை எதிர்த்து சமீஹா பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தகுதி போட்டிக்குத் தகுதி பெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதா எனக் கேள்வியெழுப்பியது.  மேலும், இதுகுறித்து நாளைக்குள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவிட நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.   

;