tamilnadu

திருப்பூர் மற்றும் உடுமலை முக்கிய செய்திகள்

பல்லடம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகைக் கொள்ளை

திருப்பூர், மே 8 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் சிலையில் இருந்த தாலியை திருடிச் சென்றனர். இதுகுறித்து பல்லடம் காவல் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பூஜைகள் முடிந்து செவ்வாயன்று இரவு பூட்டப்பட்டது. இந்நிலையில், புதனன்று அதிகாலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த தாலியை மட்டும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ஆனால் ஐம்பொன் சிலைகள் மற்றும் கோயில் உண்டியல் ஆகியவை பத்திரமாக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். 


திருப்பூரில் கஞ்சா வியாபாரி கைது

 திருப்பூர், மே 8-திருப்பூர் மாநகர், திருமுருகன்பூண்டி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போதைபொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.திருமுருகன்பூண்டி, பாரதிநகர் பகுதியை சேர்ந்த ராஜாமாணிக்கம் (20). இவர், ஆந்திராவில் உள்ள நண்பர் மூலமாக, திருப்பூருக்கு கஞ்சா பொட்டலங்களை வரவழைத்து திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையிலான காவல்துறையினர் திருப்பூர் பகுதியில் ராஜாமாணிக்கத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ராஜாமாணிக்கத்தை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடமிருந்து ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாமாணிக்கத்தை, திருப்பூர் இடைநிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  


உடுமலையில் சர்வதேச தடகள தினம்

உடுமலை, மே 8-உடுமலை நேதாஜி மைதானத்தில் சர்வதேச தடகள தினம் செவ்வாயன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி, ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாதெமி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளப் பயிற்சிகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் தாஸ் இதற்கான பயிற்சிகளை வழங்கினார். மேலும், தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;