tamilnadu

img

பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பாஜக

திருவில்லிபுத்தூர், மார்ச் 28 -  சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பாஜக தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர், தென் காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோ ருக்கு வாக்கு கேட்டு புதனன்று மாலை திருவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நாட்டின்  பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பா.ஜ.க. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய் கிறார்கள்? ஒன்றிய அரசு பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை! ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை!  நாம் கூறும் இதை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன்  கூறினார்! ஒன்றிய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்! பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான்.

 இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை – பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை - காலம் காலமாகத் தடுத்த இவர்கள் – இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள்.

அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது?  குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை!  ஏழை – நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு!  ஒன்றிய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக் கணித்து, இந்தித் திணிப்பு - சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலைகளைப்பறிக்கிறார்கள்! பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப்பார்க்கிறார்கள்.  

இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ.க.! அதனால் தான் கூறு கிறோம். பட்டியலினத்தவர் – பழங்குடியினர் – பிற்படுத்தப் பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. இத னால்தான் ஒன்றிய அளவில் மக்கள் தொகைக் கணக் கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதையும் மறுக்கிறார்கள்! இதனால்தான் கூறுகிறோம், நாட்டின் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பா.ஜ.க.தான் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்!  இவ்வாறு அவர் பேசினார்.

;