tamilnadu

img

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்.... தமிழக உழைப்பாளி மக்களுக்கு சிஐடியு வேண்டுகோள்....

சென்னை:
கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க  முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு  தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக உழைப்பாளி மக்களுக்கு சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:கொரோனா பெருந்நோய் தொற்று பாதிப்பு அதிதீவிரமடைந்து மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மருத்துவ மனைகளை நாடி செல்வதும், அங்கு சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நிரம்பி ஒரு பகுதி மக்கள் சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்திருக்கக்கூடிய நிலைமைஏற்பட்டுள்ளது.புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஒருவார காலமாக கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்கான போதிய படுக்கைகள், பிராணவாயு அவசர சிகிச்சைகள்என அனைத்து மருத்துவ ஏற்பாடுகளி லும் கவனம் செலுத்தி வருகிறது.

நாடு முழுவதும் மக்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை இல்லாமல் கொத்துக் கொத்தாக சாய்ந்து மடிந்து வருவதை தடுக்கவும், மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க தேவைப்படும் நிதியினை ஒதுக்கவும் மனமில்லாத மத்திய மோடி அரசு, பிரதமருக்கும், மத்திய அரசு துறைகளுக்கும் நவீன கட்டிடத்தை கட்ட ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கிகட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசுக்கு வேண்டுகோள் வைத்தும் மத்திய பாஜக அரசு காதில் வாங்கவில்லை.
மத்திய அரசுக்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் தடுப்பூசிதயாரிக்காமல் தனியார் மருந்து நிறுவனங்கள் லாபமீட்டும் நடவடிக்கையைத் தான் மோடி அரசு செய்தது.  தடுப்பூசி தேவை அதிகரித்ததை தொடர்ந்து மருந்துநிறுவனங்கள் ஒரே மருந்துக்கு மூன்று விலைகளை நிர்ணயித்த போதும்அதை தட்டி கேட்காமல் மத்திய அரசு இருந்தது. பிராணவாயு உற்பத்தி மற்றும் வினியோகம் செய்ய போதிய முனைப்பும் காட்டவில்லை.

மாநில அரசுகள் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கூடுதலாக தேவைப்படும் படுக்கைகள், பிராணவாயு, தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்டஅத்தியாவசிய மருத்துவ தேவை களுக்கு மத்திய அரசையே நம்பியிருக்கவேண்டிய நிலைமையில் தமிழ்நாடு அரசுதடுப்பூசி மருந்துகளை வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகப்படுத்தவும், பிராணவாயு உற்பத்தி செய்யவும் என மக்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள நிதி உதவி செய்திட தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு முதலாம் கொரோனா அலையின் போதும் தமிழக உழைப்பாளி மக்கள் தங்களால் இயன்ற நிதி உதவி செய்து அரசுக்கு துணை நின்றுள்ளனர். அது போன்று தற்போதைய மருத்துவ பேரிடரில் அரசுக்கு துணை நிற்கும் வகையில் தமிழக உழைப்பாளி மக்கள் தாராளமாய் நிதி உதவியினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட வேண்டும். சிஐடியு இணைப்பு சங்கங்கள் இப்பணியினை முழுமையாக செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;