tamilnadu

img

விஜயரங்கத்தைத் தமிழ்ஒளி ஆக்கிய மன்னர் மன்னன்

புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் புதல்வர் கோபதியும் பாரதிதாசனிடம் மாணவராக சேர்ந்த விஜயரங்கமும் இளம்வயதில்  அங்கே வாழ்ந்தனர்.

அவர்கள் பிரஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக இளம் வயதிலேயே கையெழுத்துப்  பத்திரிகையை நடத்தினார்கள்.  அந்தப் பத்திரிகை தமிழில் வெளிவந்தது . இதனை பிரஞ்சு அரசாங்கம் தடை செய்தது.  இதனால் கோபதியும் விஜயரங்கமும் காவலர்களால் பிடித்துச் செல்லப்பட்டனர்.  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது இருவருக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருந்ததால் அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர் . பிறகு வீடு திரும்பிய கோபதி விஜயரங்கம் ஆகியோரிடம் தகவலை விசாரித்து அறிந்த பாரதிதாசன் மாற்று யோசனையை தெரிவித்தார் . அரசுக்கு எதிராக ரகசியப் பத்திரிகை நடத்தும்போது உண்மையான முகவரியை கொடுக்கக்கூடாது ; இயற்பெயரை பத்திரிகைகளில் வெளியிட கூடாது என்று கூறினாராம் .  

இதன் பிறகு கோபதியை  அழைத்து நீ இனிமேல் ‘ மன்னர் மன்னன்’  என்று பெயர் வைத்துக் கொள் என்று கூறி இருக்கிறார். ஆனால்  விஜயரங்கத்துக்கு எந்த பெயரையும் வைக்கவில்லை.  இதன் பிறகு மன்னர் மன்னனான கோபதி  விஜயரங்கம் என்ற தனது நண்பருக்கு ‘தமிழ்ஒளி’ எனப்  பெயர் வைத்துள்ளார் . இந்தப்  பெயர்தான் இன்றும் நிலைத்து நீடிக்கிறது.  பொதுவுடமைச்  சிந்தனைக்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கும் ஒளி சேர்ப்பவராக தமிழ்ஒளியை உலவவிட்டுக் கொண்டிருக்கிறது .  மன்னர்மன்னன் மிகச்சரியாகவே பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது விளங்கும்.

மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மன்னர் மன்னன் இன்று நம்மிடையே இல்லை . அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்

===மயிலைபாலு=-==

;