tamilnadu

img

ஜாமீனே கேட்காமல் இருந்து விடுகிறோம்... சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்ட முடியுமா?

புதுதில்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ்மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இதில், சிபிஐ தொடர்ந்த வழக்கில், ஏற்கெனவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, திங்களன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறையினர், ஐஎன்எக்ஸ் மூலம் பெற்ற ஆதாயம் அடைந்திருப்பதாக கூறப்படும் ப. சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு, கிரீஸ், மலேசியா, பிரிட்டீஷ் வெர்ஜின் ஐலேண்டு, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்பட 12 வெளிநாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் இருப்பதாக புதிய விவரங்களை வெளியிட்டனர். 

ஆனால், இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் கபில் சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதி கொடுத்ததன் மூலம்தான் ப. சிதம்பரம் சொத்து சேர்த்து இருக்கிறார்; அந்தசொத்துக்களையும், ஊலுக்கு ஆதாரமான மின்னஞ்சல் களையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகிறார். ஆனால், இதுகுறித்து முந்தைய 3 விசாரணைகளின் போது, ஏன் அமலாக்கத்துறை எதுவுமே தெரிவிக்கவில்லை?” என்று அவர்கேள்வி எழுப்பினார்.“வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள்? என்பதையும், அந்த ஆவணங்கள் என்ன?” என்பதையும், தான் அறிந்து கொள்ள விரும்புவதாகவும், “அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்திற்கு எந்தஆவணத்தையும் கொடுக்காமலோ அல்லது காண்பிக்காமலோ இருக்க முடியாது” என்றும் குறிப்பிட்டார்.மேலும், “ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு கொடுத்த அனுமதிமூலம் ப. சிதம்பரம் சொத்து சேர்த்து இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டினால், ஜாமீன் கோரும் மனுவையே திரும்பப்பெற்றுக்கொள்ளத் தயார்” என்றும் கபில் சிபல் சவால் விடுத்தார்.

;