tamilnadu

கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்

ரபேல் போர் விமான பேரத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை தொகுத்து பாரதி புத்தகாலயத்தின் சார்பில் ‘நாட்டையே உலுக்கும் ரபேல் ஊழல்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (2.4.19) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்து என்.ராம் அவர்களும், லெப்டினன்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குநர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெயராணி ஆகியோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துவக்கத்தில் கவிக்கோ மன்றத்தில் வெளியீட்டு விழா நடத்த அனுமதி கோரிய போது காவல்துறை அனுமதி மறுத்ததால், கேரள சமாஜத்திற்கு இடம் மாற்றி வெளியீட்டு விழா நடைபெற அனுமதி கோரப்பட்டது. அதற்கும் காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இறுதியாக செவ்வாய் (2.4.19) மாலை பாரதி புத்தக வளாகத்திலேயே வெளியீட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதி பறக்கும்படை அதிகாரி எஸ்.கணேஷ் மற்றும் இ 3 இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மதியம் ஒரு மணி வாக்கில் பாரதி புத்தகாலயத்திற்கு வந்து புத்தக வெளியீட்டு விழா நடத்தக்கூடாது எனவும், நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்து விட்டு, புத்தகாலயத்திலிருந்த ரபேல் ஊழல் புத்தகப் பிரதிகள் அனைத்தையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அராஜகமானதாகும். ஏற்கெனவே பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்த ரபேல் ஊழல் சம்பந்தமான விவரங்களை தொகுத்து புத்தகமாக வெளியிடுவதற்கு அனுமதி மறுப்பது எந்தவிதமான சட்ட வரைமுறைக்கும் உட்பட்டதல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக மாறி செயல்படுவதின் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நடவடிக்கையாகும். சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையிலிருந்து

;