articles

img

பொய்யர்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அண்ணாமலை! - வே. தூயவன்

பல்லடத்தில் செவ்வாயன்று பாஜக ஊழியர் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியிருக்கிறார்.  “ஆனைமலை, நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.10ஆயிரம் கோடி வேண்டும். அந்த திட்டத்தை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த வேட்பாளரால் பெற்றுத்தர முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.” என்று கூறியிருக்கிறார்.  

முழுப் பொய்

முதலில் இது, ஏற்கெனவே தமிழகம் - கேரளம் இடையே உள்ள பிஏபி திட்ட ஒப்பந்தப்படி நிறைவேற்ற வேண்டிய துணைத் திட்டம் ஆகும். ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டிய திட்டமல்ல. ஆகவே அண்ணாமலை பேசியது முழுப்பொய். மேலும் ரூ.10 ஆயிரம் கோடியை பெற்றுத் தருவாராம். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழக, கேரள மாநிலங்களுக்குத் தர வேண்டிய வரிப் பங்கீட்டையே முழுமையாக ஒன்றிய அரசு தராதபோது வாய் திறக்காத அண்ணாமலை இப்போது வாயில் வடை சுடுகிறார்.

பல்லடத்தின் நிலைமை தெரியுமா அண்ணாமலைக்கு!

“பல்லடத்தில் யாரெல்லாம் தொழில் செய்யப் போறீங்களோ இரண்டாண்டில் இரட்டிப்பு ஆக போகிறது” என்றும் அண்ணாமலை அளந்து விட்டிருக்கிறார். விசைத்தறி தொழில் மையமான பல்லடம் வட்டாரத்தில் ஜவுளித் தொழில் நலிவடைந்து, தறிகளை பழைய விலைக்கு விற்றால்கூட, கழற்றி லாரியில் ஏற்றி அனுப்புவதற்குச் செலவாகும் என்று, புல்டோசர்களை வைத்து விசைத்தறிகளை உடைத்து அள்ளிப்போட்டு பழைய இரும்புக்கு விற்கும் நிலைதான் உள்ளது. இந்த வேதனை நிலையைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சமும் கூசாமல் இரட்டிப்பு ஆக்குவேன் என்று பொய் சொல்கிறார்.

இதுவரை மேலே இருந்தது  நீங்கள் தானே!

“உங்கள் தொகுதி பிரச்சனைகளை மேலே கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை. குறைந்தபட்சம் நான் சொல்லக்கூடியதை அவர்கள் கேட்டு அதன் பிறகு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டியதை செய்ய வைப்பது என் கடமை” என்கிறார். இதுவரை பாஜக ஆட்சிதானே மேலே இருந்தது. அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாமே? இதுவரை ஏன் செய்யவில்லை அண்ணாமலை?

கோழிகளுக்குத்தான் தெரியாது; எங்களுக்கு தெரியுமே!

“வட அமெரிக்காவில் மக்காச்சோளம் விலை குறைவு. எனவே, அங்கிருந்து இறக்குமதி செய்ய வரியை குறைத்தால் விலை குறைவாகும். இது போன்றதை புரிந்து கொள்ள ஒரு நபர் வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்தால் இன்னும் குறைவாகவே கிடைக்கும். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒருவர் தேவை” என்று மூளையில் பொங்கி வழியும் அறிவுடன் பேசியிருக்கிறார்.

கொங்கு மண்டலத்தில் உள்ள கோழி உற்பத்தி மையங்களுக்கு தீவனத்திற்காக வட அமெரிக்காவில் விலை குறைந்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு வரியைக் குறைத்திருக்க வேண்டியதுதானே? ஏன் இதுவரை செய்யவில்லை? ஏதோ 10 ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை ஆண்டது போலவும், இவர்கள் இனிமேல்தான் ஆட்சிக்கு வந்து வரியைக் குறைப்பது போலவும் சொல்வது, யாரை ஏமாற்றுவதற்கு? இது போன்றதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு நபர் வேண்டுமாம்! அதாவது இங்கிருக்கும் யாருக்குமே இது புரியாது, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஏகாம்பரமாக உளறியிருக்கிறார். அதைவிடவும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மக்காச்சோளம் விலை குறைவாக கிடைக்குமாம்! ஏற்கெனவே அங்கிருந்தும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ரயில்கள் மூலம் மக்காச்சோளம் வாங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள். வழக்கத்தில் உள்ள விசயத்தை புதிய கண்டுபிடிப்புப் போல் பேசுவது அண்ணாமலைக்கு கைவந்த கலை!

உள்ளூர் மக்காச்சோளத்திற்கு என்ன விலை  மிஸ்டர் அண்ணாமலை?

இதில் சொல்லாத விசயம் ஒன்றிருக்கிறது. அண்மையில் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் இந்திய விவசாயத்தை, விவசாயிகள் நலனை பணக்கார நாடுகளுக்கு பணயம் வைக்கும் வேலையை பாஜக அரசு செய்திருக்கிறது. அங்கே துரோகம் செய்துவிட்டு இங்கே வந்து வடஅமெரிக்க மக்காச்சோள இறக்குமதி பற்றி பேசுகிறார். இதே பல்லடம் சுற்று வட்டாரத்தில் மக்காச்சோளத்துக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் சிக்கித் தவிக்கின்றனரே! இதற்குத் தீர்வு காண வாய் திறக்காதவர், போகாத ஊருக்கு வழி சொல்கிறார்.'

என்னே, பாசாங்கு!

இம்முறை மாற்றத்திற்காக நிற்கிறேன்.  அரசியல் கட்சியுடன் சண்டை போட நாம் இல்லை என்று உலக மகாபுனிதர் போல் போதனை செய்திருக்கிறார். எவ்வளவு கீழ்த்தரமாகப் பேச முடியுமோ, அவ்வளவு கீழ்த்தரமாக எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை வசைபாடி விட்டு இதைச் சொல்கிறார் என்றால், எத்தகைய பாசாங்குப் பேர்வழியாக இவர் இருக்கிறார் என்பதை சாமானியர்களும் புரிந்து கொள்ளலாம்!

“இந்த தேர்தலில் மோடி 400 தொகுதிகளில் வர வேண்டும்.  அப்போதுதான் நதி இணைப்பு கொண்டு வரப்படும். 3ஆவது முறை ஆட்சிக்கு வந்தால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். கால் நூற்றாண்டுக்கு முன்பு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்து பாஜக, நதிகள் இணைப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. அசுர பலத்துடன் தற்போது ஆட்சியில் இருக்கிறார்களே, ஏன் செய்யவில்லை?

56 இஞ்ச் வலிமையால்  சாதித்தது என்ன?

கோவைக்கு வேலையைச் செய்து கொடுப்பதற்கு வலிமையான மக்கள் பிரதிநிதி தேவை என்கிறார். 56 இஞ்ச் வலிமையான பிரதமர் இருந்து இந்த நாட்டுக்கு என்ன செய்தார்? பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டும்தான் அவர் வேலை செய்தார் என்பதை 10 ஆண்டு கால அனுபவம் காட்டிவிட்டது.

வெல்வீர்கள் என்றால் எதிர்க்கட்சிகளை முடக்குவது ஏன்?

“இது வித்தியாசமான தேர்தல், இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என தெரியும். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமர்வார் என தெரிந்து நடக்கும் தேர்தல்” என ஆணவத்துடன் கூறியிருக்கிறார்  அண்ணாமலை. ஆனால் பாஜகவின் தோல்வி கண்முன் தெரிவதால், என்ன செய்வதென்று தெரியாமல் நிலையிழந்து எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் தள்ளி ஜனநாயகரீதியான தேர்தல் போட்டிச்சூழலை முடக்கி, வெற்றி பெறலாம் என நப்பாசை கொண்டுள்ளது பாஜக.. இதை இந்திய மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

கோயபல்ஸ் பிரச்சாரம்

நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளை, மக்களின் வாழ்வாதார நெருக்கடிகளை திசை திருப்பி குழப்பிவிட்டு, குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறது பாஜக. எனவேதான் அவர்கள் தெரிந்தே பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். அந்த பொய்யர்களின் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக அண்ணாமலை இருக்கிறார். உண்மை அல்லாத விசயங்களை உண்மைகளாக கட்டமைத்து, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லி, அதையே உண்மை என மக்களை நம்ப வைத்து, வெற்றி பெறலாம் என்று பாஜகவும், அண்ணாமலை கூட்டமும் வெறித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் புதியதல்ல, ஹிட்லரும், கோயபல்ஸும் செய்த சித்து விளையாட்டுகள்தான்! 

 


 

;