districts

img

கோவையில் அண்ணாமலைக்கு வெற்றியா? - அம்பலமான பாஜகவின் கருத்துக் கணிப்பு செட்டப் செல்லப்பா!

கோடை வெயிலை போலவே நாடாளுமன்ற தேர்தல் களமும் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  கோவை நாடாளுமன்ற தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதற்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியன் பொலிட்டிக்கல் டெமாக்ரடிக் ஸ்டாடிஸ்டிக்ஸ் (ஐ.பி.டி.எஸ்) நிறுவனம் திங்களன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட உள்ளதாக வாட்சப் குழுக்களில் பாஜக செய்தி தொடர்பாளர்கள் மூலம் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு கருத்துக்கணிப்பு வெளியிடும் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில் அழைப்பு எதுவும் வராமல் பாஜக தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு அழைப்பு வந்தது பத்திரிக்கையாளர்களிடேயே சந்தேகத்தை கிளப்பியது. அதேவேளை மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட அனுமதி மறுக்க வேறு வழியில்லாமல் பத்திரிகையாளர் மன்ற வாயிலில் வைத்து அந்த நிறுவனத்தினர் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர்.

அப்போது பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் உடன் வந்திருந்தனர். இது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை உணர்த்துவதைப் போல இருந்தது. ஐ.பி.டி.எஸ் அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் பிரபாகர் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டார்.

அதில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38.9 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்பு முடிவு குறித்து செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.  கடந்த 10 நாட்களில் வெறும் 3000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்விக்கு தகுதி பெற்ற நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதாக பதில் அளித்து சமாளித்தார் அந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு. தகுதி வாய்ந்த நபர்கள் யார் என செய்தியாளர்கள் பதில் கேள்வி எழுப்ப பதில் சொல்ல முடியாமல் தவித்த அவர், ஜூன் 5ஆம் தேதி இந்த முடிவு வரவில்லை என்றால் எங்களிடம் வந்து கேளுங்கள் என தெரிவித்தார். டேட்டா சயின்ஸ், ஏ.ஐ தொழில்நுட்பம் மற்றும் மனித ஆற்றலை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்தது அங்கிருந்த செய்தியாளர்களை திகைப்புக்கு உள்ளாக்கியது.

நீங்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதற்கு பாஜகவினர் ஏன் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர் என செய்தியாளர்கள் கேட்க என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஐ.பி.டி.எஸ் நிர்வாகிகள் திணறியது அவர்கள் பாஜகவின் செட்அப் செல்லப்பா என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது. அப்போது உங்கள் செய்தியாளர் சந்திப்புக்கு பாஜகவினர் ஏன் வந்திருக்கிறார்கள் என கேட்க உடனடியாக அங்கிருந்து பாஜகவினர் நைசாக நழுவி சென்றனர். இந்த நிலையில் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் கருத்துக் கணிப்பு முடிவுகளை சாலையில் வைத்து வெளியிடக்கூடாது என தெரிவித்ததால் ஐ.பி.டி.எஸ் நிறுவன நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உண்மையைச் சொன்ன எவன் கேட்கிறான் என்று புலம்பியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர். செய்தியாளர் சந்திப்பின் இடையே யார் அண்ணாமலை என அங்கிருந்த பொதுமக்கள் சிலர் பேசிக் கொண்டது நகைப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

;