districts

img

குற்றமிழைத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வேலூர், மே 10- குற்றம் இழைத்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் குகையநல்லூர் சரத்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், சாதிரீதியாக இழிவுபடுத்திய மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம்.பி.ராமசந் திரன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் பேசுகையில், “மேல்பாடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சரத்குமார் மரணத்தில் தவறு செய்திருக்கும் காவல் உதவி ஆய்வாளரை கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். சரத்குமார் குடும்பத்திற்கு வன் கொடுமை சட்டத்தின் (எஸ்சி மற்றும் எஸ்டி) கீழ் ரூ.12 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் 50 விழுக்காடு நிதியை உடனே வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும்,  3 சென்ட் வீடும், 2 ஏக்கர் நிலமும் வழங்க  வேண்டும். வழக்கை 6 மாதத்திற்குள் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். வன்கொடுமையால் இறந்த சரத்குமார் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

;