india

img

தவறான விளம்பரங்கள் மூலம் மக்களை வழி நடத்துவதாக பதாஞ்சலி நிறுவனத்தின் மீது புகார் 

தவறான விளம்பரங்கள் மூலம் மக்களை தவறாக வழி நடத்துவதாக கேரளாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த விளம்பரங்களை ஒளிபரப்புவதிலிருந்து பதஞ்சலி நிறுவனம் பின் வாங்கியுள்ளது.  

கேரளாவில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துடன் தொடர்புடைய திவ்யா பார்மசி என்ற நிறுவனம் சில ஆயுர்வேத தயாரிப்புகள் குறித்து விளம்பரங்களை ஒளிபரப்பி வந்தது. அதன்படி நீரிழிவு நோய், இதய நோய், கல்லீரல் நோய் உள்ளிட்ட ஒருசில நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி பதஞ்சலி நிறுவனம் ஒளிபரப்பிய விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மருத்துவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், 1954 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் மருந்து நோய் எதிர்ப்பு பொருட்கள் தவறான விளம்பரங்கள் சட்டத்தின்படி இந்த விளம்பரங்கள் ஒளிபரப்புவது சட்டத்துக்குப் புறம்பானது என்றும், மக்களைத் தவறாக வழி நடத்துவதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்தி விட்டதாக திவ்யா பார்மசி நிறுவனம் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற பகுதியைச் சேர்ந்த மருத்தவர் கே.விபாபு என்பவர் தான் இந்த விளம்பரத்திற்கு எதிராக புகார் அளித்து உள்ளார் என்பதும் கடந்த மார்ச் மாதம் அவர் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து புகார் அளித்த மருத்துவர் கே.விபாபு கூறுகையில், ஒரு சில நோய்களை உடனடியாக குணப்படுத்துவதாக மருந்துகளை விளம்பரம் செய்யக் கூடாது என்றும், இந்த விளம்பரங்கள் பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருவதை தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு புகார் அனுப்பினேன். இதய பிரச்சனை மற்றும் ரத்த அமுதத்தை உடனடியாக சரி செய்யும் மருந்து என்றும், கொழுப்பு அளவை ஒரே வாரத்தில் குறைக்கும் மருந்து என்றும் விளம்பரத்தில் கூறியிருந்ததைச் சுட்டுக்காட்டினேன். இந்த புகார் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனா தொற்று நோயை குணப்படுத்தும் கொரோனில் என்ற மருந்து குறித்து விளம்பரம் செய்தது என்பதும், அதனை அடுத்து அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

;