india

img

ஆராய்ச்சி - வளர்ச்சி உத்திகளுடன் பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் உற்பத்தியை அதிகப்படுத்துக... அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்....

புதுதில்லி;
இந்தியாவின் தடுப்பூசி  தேவைகளை ஈடுகட்ட உடனடியாக பொது மற்றும் தனியார் துறை உற்பத்தியையும் அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உத்திகளோடு விரிவாக்கம் செய்யவேண்டும் என்றும் புதிய நடைமுறை ஏற்பாடுகளுடன் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு  வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

இப்போதுள்ள இந்திய மக்கள்தொகை யான 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட310 கோடி டோசுகள் (3.1 பில்லியன் டோசுகள்) அல்லது 18 வயதிற்கு மேற்பட்டமக்களுக்கு தடுப்பூசி போட நடைமுறையில் ஏற்படும் 15 சதவீத இழப்புகளையும் சேர்த்து 218.5 கோடி டோசுகள் தேவைப்படும். இது அவ்வளவு எளிதான பணிஅல்ல. இருப்பினும் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தடுப்பு  மருந்து தயாரிப்பில்இந்தப் பெருந்தொற்று காலத்திற்கு முன்பே முன்னோடியாகவும் தடுப்பு மருந்து ஏற்றுமதியில் முன்னணியிலும் இருந்த இந்தியா ஏன் கோவிட் 19 தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோ டெக்ஆகிய  வெறும் 2 உள்நாட்டு   தனியார் தயாரிப்பாளர்களை  மட்டுமே சார்ந்து இருக்கிறது என்பது சரியானதல்ல. இதுவே இன்றைய வலிமிகுந்த சிரமத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தியாவில் தற்போது உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ள பல அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் உள்ளன. தற்போது புனேயில் இருக்கும் சீரம் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின்கோவிஷீல்ட் மற்றும் ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின்கோவாக்சின் ஆகிய  2  தடுப்பூசிகள் மட்டுமே விநியோகத்திற்கு கிடைக்கின்றன. கோவாக்சினுக்கான தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே பாரத் பயோடெக் நிறுவனமும் சுகாதாரம் மற்றும்குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும்பொதுத்துறை ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனமான, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி உடன் இணைந்து  வளர்த்து எடுக்கப்பட்டதாகும். எனவே மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாரத் பயோடெக் நிறுவனத்தை மூன்று பொதுத்துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மாற்றங்களை கொடுத்து உதவச் செய்ததைப் போல,  பிற அரசு நிறுவனங்களுக்கு உதவலாம்.

2000 ஆவது ஆண்டு வரை அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் 80 சதவீத தடுப்பூசிகள் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தே பெறப்பட்டது. தற்போது 90 சதவீதம் தடுப்பூசிகள் தனியார் துறையிடம் இருந்தே பெறப்படுகிறது. அதுவும் அதிக விலைக்கு. பிரேசில்,  கியூபா, சீனா ஆகிய நாடுகள் பொதுத்துறை கம்பெனிகள் மற்றும்  வளர்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்தி தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசி தயாரிப்பதோடு மற்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றன. மாறாக இந்தியா தன்னுடைய பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்து விட்டது. இந்தியாவிடம் அதிக எண்ணிக்கை யில் சில பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் நிறுவனங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய கட்டுமானங்களும் உள்ளன. மத்திய, மாநில அரசுகள்இந்த வசதிகளைப் பயன்படுத்தி தன்னுடைய covid-19க்கான தடுப்பூசிகளை தயாரிப்பதை அதிகப்படுத்தலாம். தற்போது இந்தியாவிடம் பதினோருபொதுத்துறை தடுப்பூசி தயாரிக்கும் யூனிட்டுகள் உள்ளன. அவற்றில் சில உடனே தயாரிப்பை தொடங்கும் நிலையில் உள்ளன. சில தேர்ந்தெடுக்கப்பட்ட யூனிட்கள் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்      2016  இலேயே கட்டி முடிக்கப்பட்டுதற்போது நூறு கோடி ரூபாய் செலவும் சிறிதளவு முயற்சியும் செய்தால் அங்கே கோவிட்  தடுப்பூசி தயாரிப்பை துவங்கிடமுடியும்.

பயாலஜிக்கல் இ, ஹைதராபாத், பனேசியா பயோடெக், சோலன் போன்ற ஏராளமான தனியார் துறை நிறுவனங்களும் உள்நாட்டில் கோவிட் தடுப்பூசி தயாரிக்க உதவக் கூடிய நிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தவிர்த்து உயிரி பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளும் உள்ளன. இவற்றை மாற்றங்கள் செய்து தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தலாம். ஏற்கனவே டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் மற்றும் குறைந்தது 5  உயிரிப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களு டன் இணைந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள். மொத்தத்தில்இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கக்கூடிய வசதிகளோடு இருக்கின்றன. அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி  தயாரிப்புகள் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு சர்வதேச ஒப்பந்தங்களை குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா முன்பணம் பெற்று ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் வழிவகுக்கும். ஏற்கனவேஅனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை வெளிநாட்டு  தனியார் நிறுவனங்களிலிருந்து வாங்குவதும் ஒரு வழிமுறையாகும்.

பொதுத்துறைகளுக்கு போதுமான அரசு உதவி இல்லை
அரசு தாமதமான நிதி ஒதுக்கீடு செய்தாலும்கூட தனியார் துறை அதிகமாகவே பெற்றிருக்கிறது. ஆனால் பொதுத்துறை இன்னும் போதுமான உதவிகளை அரசிடமிருந்து பெறவில்லை. மிகச் சமீபத்தில்தான் கோவாக்சின் தயாரிக்க அரசு சிறு நிதி  உதவிகளை அரசாங்க கம்பெனிகளான இந்தியா இம்முநோலோஜிகல் ஹைதராபாத், பாரத் இம்முநோலோஜிகல்ஸ் அண்ட் பயாலஜி கார்ப்பரேஷன் லிமிடெட் புலந்சாகர் மற்றும் மகாராஷ்டிரா   அரசின் நிறுவனமான ஹாப்கின் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு வழங்கியுள்ளது. எஸ்ஐஐ தானாகவே தொழில்நுட்பங்களை மாற்ற இயலாது.

ஏனெனில் அதுவே கோவிஷீல்டை ஆஸ்ட்ரா ஜெனகாவிடமிருந்து உரிமம் பெற்று தயாரித்துவருகிறது. ஆனால்அந்நிறுவனத்தை வேறு  நிறுவனங் களுக்கு துணை ஒப்பந்தங்கள் மூலமாக செய்ய வற்புறுத்தலாம். எஸ் ஐ ஐமற்றும் பாரத் பயோடெக் ஆகிய  நிறுவனங்களை மற்ற சிறு நிறுவனங்களுக்குவழிகாட்டியாக இருந்து செயல்படச் செய்வது அவர்கள் இந்திய அரசுக்கும்பொது துறைக்கும்  செலுத்தவேண்டிய நீண்டகால கடனை திரும்பச் செலுத்துவது போலாகும்.
தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கும் அதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி  மேம்பாட்டுக்கும் குறிப்பிட்ட சில பரிந்து ரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

$  தற்போது இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களையும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் புதுப்பித்து அவற்றின் தடுப்பூசி தயாரிக்கும் திறன்களை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்.

$  செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்படுத்தி  மாநில அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்  அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகியவைஒப்பந்த அடிப்படையில் இந்த வளாகத்தை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்க  தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

$  கட்டாய லைசென்ஸ்கள் மற்றும்  தேவையான சட்டங்கள் மூலம் ஆணைகள் வழங்கி எங்கெல்லாம் தேவையோ அங்கு விரும்பும் நபர்களுக்கு கோவிட்தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும்.

$   பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்திய அரசுக்கு உள்ள உள் நுழையும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரத் பயோடெக் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் உள்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப மாற்றங்களையும் வழிகாட்டுதல்களையும் செய்ய வைக்கலாம்.

$  ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்திய கம்பெனிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து உற்பத்தியைப் பெருக்க உதவ வேண்டும்.

$   சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, ஆஸ்டிரா ஜெனகா மற்றும் நோவாக்ஸ் ஆகிய நிறுவனங்களை உற்பத்தியைப் பெருக்க கூட்டு முயற்சிகள் மூலமாகவும் பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களுடன் கூட்டுறவுடன் செயல்பட்டு உள்நாட்டுத்தேவைகளுக்கும் ஏற்றுமதி (குறிப்பாக கோவாக்ஸ் பகுதிகளுக்கு) செய்யவும் தடுப்பூசிகள் தயாரிக்க ஊக்குவிக்க வேண்டும்.

$ ஆராய்ச்சி ஆய்வகங்களில், பொதுத்துறை தனியார்துறை நிறுவனங்களில் புதிய தடுப்பு மருந்துகள் தயாரிக்கும்முறைகள் மற்றும் பல்வேறு தடுப்பூசிகளை தயாரிக்க உதவுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். மரபியல் கண்காணிப்பு குறிப்பிடும் வகையில் அதிகரிக்க வேண்டும். அதை செயல்திறன் மற்றும்தொற்று நோய்கள் ஆராய்ச்சிகளோடு இணைத்து தடுப்பு மருந்துகளை தொடர்ச்சியாக உருமாற்றத்திற்கு  எதிரான அதன் செயல்திறனை ஆராய்ந்து பல்வேறு தயாரிப்பாளர்களுடன் இணைந்து மாற்றங்களை செய்ய ஏதுவாக ,குறிப்பாக தற்போதுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு ஏற்ற வகையிலும் பல்வேறு வயதினரிடையே குறிப்பாக குழந்தைகளிடையே அதன் தாக்கம் குறித்து ஆராய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தலைசிறந்த விஞ்ஞானிகளான ககன் தீப் காங்க்,  ஷாகித் ஷமில், டாக்டர் சுந்தரராமன், டாக்டர் டி.ஆர். கோவிந்தராஜன், சத்யஜித் ராத், தேஜேந்திர பால், பேரா. கௌதம் மேனன், ஜான் குரியன், முனைவர் ராமானுஜம், டாக்டர் கீதா, அசோக் பாண்டே (நேபாள்) உட்பட  கீழ் குறிப்பிட்டுள்ள 200க்கும் மேற்பட்ட  விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் ஆகிய நாங்கள்மேல் குறிப்பிட்டுள்ள அறிக்கையை ஏற்பு செய்கிறோம்.

;