science

img

அறிவியல் கதிர் 2023 சில முக்கிய கண்டுபிடிப்புகள் - ரமணன்

2023 ஆகஸ்ட் மாதம் இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்த சாதனையை செய்த நான்காவது நாடு என்கிற பெருமையைப் பெற்றது. அதற்கடுத்தாற்போல் சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்களை ஆய்வு செய்ய ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றி கரமாக ஏவியது.

சனிக்கோளின் பனிபடர்ந்த நிலவான என்செலாடஸ்சின் உட்பகுதியிலுள்ள கடலிலிருந்து வீசப்படும் பனித்துகள்களில் பாஸ்பரஸ் மூலகம் அதிக அளவில் காணப்படுகிறதாம். இந்த மூலகம் உயிரியக்கத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். ஆகவே அங்கு உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வடகிழக்கு சீனாவில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு படிமம் மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆவேசமான பாலூட்டி ஒன்று தாவர உண்ணியான ஒரு டைனோசரை தாக்குவதைக் காட்டுகிறது. அதன் மீது ஏறி தன் பற்களை அதன் விலாவில் பதிக்கிறது. இது 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியதாம்.

பயோமார்க்கர் எனப்படும் வேதிப்பொருட்கள் நம் உடலில் உள்ள திசுக்களின் நிலையை அறிவதற்கு உதவுகின்றன. நானோபோர்(nanopore) எனும் நுண்துளை நுணுக்கத்தின் மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு பயோமார்க்கர்களை ஆய்வு செய்யும் முறையை பிரிட்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியும் ஆக்ஸ்ஃபோர்ட் நுண்துளை தொழில்நுணுக்க கழகமும் இணைந்து கண்டுபிடித்துள்ளன. இதன் மூலம் நோயாளியின் வியாதி குறித்து மருத்துவர்கள் அதிக தகவல்களை அறிய இயலும். இந்த ஆய்வு செப்டம்பர் மாத நேச்சர் நானோ டெக்னாலஜி இதழில் வெளிவந்துள்ளது.
 

ஆழ்கடலில் மிதக்கும் காற்றாலையை சீனா நிறுவி இயக்கி வருகிறது. இந்த மிதக்கும் மேடையானது தெற்கு சீனாவிலுள்ள சுஹாய் நகரிலிருந்து ஹைனான் மாநிலத்திற்கு தனது பயணத்தை மே மாதம் தொடங்கியது. இதன்மூலம் கடலில் எண்ணெய் எடுப்பதற்கு தேவைப்படும் மின்சாரம் வழங்கப்படுகிறது. கார்பன் உமிழ்வை குறைக்கும் ஒரு நடவடிக்கை இது.

உயிரினங்கள் மூப்பு அடையக் காரணமான செல்களில் தனித்துவமான செல்குழுவை சீன அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘செல்’ எனும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

உவர்நிலங்களிலும் தாக்குப்பிடிக்க பயிர்களுக்கு உதவும் முக்கிய மரபணு ஒன்றை சீன அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு AT-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. உவர் மற்றும் கார நிலங்களில் பயிர்களின் விளச்சலை அதிகரிக்க இது உதவும் என்கிறார்கள்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் புதிய தாது உப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள். நியோபோபாடைட் எனப் பெயரிடப்பட்டுள்ள இதை சர்வதேச தாது உப்பு சங்கம்(IMA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. 70 வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட சீனாவின் நியூகிளியர் புவியியல் அமைப்பின் 13ஆவது புதிய தாது உப்பாகும்.

சர்வதேச அறிவியலாளர் குழு ஒன்று மனித மூளையின் மரபணு, செல் அமைப்பு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். இது குறித்த 24 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு சயின்ஸ், சயின்ஸ் அட்வான்ஸ் மற்றும் சயின்ஸ் ட்ரான்ஸ்லேஷனல் மருத்துவம் இதழ்களில் வெளிவந்துள்ளது.

46000 ஆண்டுகளுக்கு முன் சைபீரிய உறைபனியில் உறைந்து போன உருண்டைப் புழு ஒன்றை ரஷ்ய அறிவியலாளர்கள் உயிர்ப்பித்துள்ளார்கள். இந்தப் புழு நிலத்தினடியில் 40 மீட்டர் ஆழத்தில் ஆழ் உறக்கத்தில் இருந்தது. இது குறித்த செய்தி சிஎன்என்னில் ஜூலை மாதம் வெளிவந்துள்ளது.
 

ஜூபிட்டர் கோளின் பனி படர்ந்த நிலவுகளை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஜூஸ் என பெயரிடப்பட்ட ஆய்வுக்கலம் ஏப்ரல் 14ஆம் தேதி ஏவப்பட்டது. இது எட்டு ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தும். பூமியின் அழகிய பின்புலத்தில் விண்கலத்தின் பகுதியைக் காட்டும் முதல் புகைப்படத்தை அதன் கண்காணிப்பு கேமிரா படம் எடுத்து அனுப்பியுள்ளது.

;