science

img

அறிவியல் கதிர் - ரமணன்

நீல நிறத்தின் ரகசியம்

திராட்சை, புளூ பெரி போன்ற பழங்கள் நீலமாக தெரிவது ஏன்? அதன்  மேல்பரப்பிலுள்ள மெழுகு போன்ற நுண் அமைப்புகள் ஊதா மற்றும்  புற ஊதா வண்ணங்களை பிரதிபலிப்பதனால் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனி தர்களுக்கு இது ஊதாவாக தெரியும். பறவைகளால் புற ஊதாக் கதிர்களையும் பார்க்க  முடியுமென்பதால் அவைகளுக்கு சுவையான இந்தப் பழங்கள் ஊதாவாகவும் புற ஊதாவாகவும் தெரியும். நீல வண்ணம் இயற்கையில் சாதாரணமாக தென்படும் ஒன்று  அல்ல. சில பழங்கள் ஊதா நிறத்தில் இருந்த போதிலும் அவற்றில் சிலவற்றில் மட்டுமே  வண்ண நிறமிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக புளூ பெரியில் ஆன்தோசயானின் எனும் வேதிப்பொருள் குவியலாக உள்ளது. இது தோலுக்கு அடர் சிவப்பு வண்ணத்தை  கொடுக்க வேண்டும். ஆனால் அவற்றின் மேற்பரப்பில் உள்ள மெழுகுபரப்பு நீல  வண்ணத்தை உருவாக்க முடியும். இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியிலுள்ள டிரெஸ்டென் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த  இயற்பியலாளர் ராக்ஸ் மிடில்டன். மற்றும் அவரது சகாக்கள், பல்வேறு பழங்களை  பரிசோதித்ததில் மெழுகு போன்ற மேல்பரப்பில் உள்ள நுண்ணிய மூலக அமைப்பு கள் ஊதா மற்றும் புற ஊதாக் கதிர்களை சிதற அடிப்பதைக் கண்டனர். மேல்பரப்பை  நீக்கியபின் அதனடியில் முற்றிலும் கருமை நிறமாக இருப்பதைக் கண்டனர். ஒரே கான் திராட்சியின் மேல் தோலை குளோரோஃபார்மில் கரைத்த உடன் அது ஒளி ஊடுரு வும் பொருளாக மாறியதும் பின்னர் அதை மீண்டும் படிகங்களாக்கிய போது அவை  நீல வண்ணதிற்கு மாறுவதும் காணப்பட்டது. இந்த முறையை பின்பற்றி எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் மேக் அப் சாத னங்களுக்கு நீல ஒளிர்வை கொடுக்க இயலும். இவை கறையை ஏற்படுத்து வதில்லை என்பதால் சிறந்தது என்கிறார் ராக்ஸ் மிடில்டன்.

கொடுத்ததை விட எடுத்தது அதிகம்

அணுப்பிளவின் மூலம் ஆற்றலைப் பெறு வதைப் போல அணுச்சேர்க்கையின் மூலமும்  சக்தியை பெற இயலுமா என்று அறிவிய லாளர்கள் பல காலமாக முயற்சி செய்து கொண்டி ருக்கின்றனர். சிறிய அணுக்கருக்கள் ஒன்று சேர்ந்து  பெரிதாக மாறுவதையே அணுச்சேர்க்கை என்கின்ற னர். இதில் முக்கிய விசயம் அணுச்சேர்க்கைக்கு தேவைப்படும் ஆற்றலைவிட அதிலிருந்து பெறப்படும் ஆற்றல் அதிகமாக இருந்தால் மட்டுமே உபயோக கர மானது. கலிஃபோர்னியாவிலுள்ள லாரென்ஸ் லிவர்மோர் தேசிய சோதனைக் கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டிசம்பர் 2022இல் இதை சாதித்துள்ளனர்.  ஒரு சிறிய கலத்தை 192 லேசர் ஒளிக்கற்றை கள் தாக்கியபோது அணுச்சேர்க்கை உண்டாகி தொடக்கத்தில் செலுத்திய ஆற்றலை விட கூடுதல் ஆற்றலை வெளிவிட்டன.. இந்த சோதனையின் விவரங்கள் இப்போது ஃபிசிக்கல் ரெவ்யூ லெட்டர்ஸ்  மற்றும் ஃபிசிக்கல் ரிவ்யூ E ஆகிய ஆய்வு இதழ்களில் ஃபிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. இந்த  சோதனைக்கு மிக அதிகமான நேர்த்தி தேவைப்பட்ட தாம். இந்த சோதனையில் நாம் பயன்படுத்தும் அழி ரப்பர் அளவுள்ள ஒரு கலத்தில் வைர உறைக்குள் டிட்டி ரியம் மற்றும் ட்ரிட்டியம் எனப்படும் ஹைடிரஜனின் இரண்டு ஐஸோடோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.  இவை லேசர் கதிர்களால் தாக்கப்பட்டபோது 3 மில்லியன் செல்சியஸ் அளவு வெப்பம் ஏற்பட்டது.  இதனால் எக்ஸ் ரே கதிர்கள் உண்டாயின. இந்தக் கதிர்களினால் வைர உறை ஆவியாகி ஹைடிரஜன் மூலக்கூறுகள் சிதைந்து அணுச்சேர்க்கை ஏற்பட்டது. இதை சாதிக்க ஆய்வாளர்கள் லேசர் கதிர்களின் துடிப்பையும் அலை நீளத்தையும் வைர உறையின் கனத்தையும் நானோ அளவில் மாற்றினர். இதன் மூலமே கூடுதல் ஆற்றல் பெறப்பட்டது. இந்த மிக  நுணக்கமான தொழில்நுட்பங்களையே மற்ற ஆய்வா ளர்கள் வியந்து பாராட்டுகின்றனர். இதில் உட்செலுத்தப்பட்ட ஆற்றலைப் போல் 1.5 மடங்கு அதிக  ஆற்றல் வெளிவந்தது. ஜூலை 2023இல் நடத்தப்பட்ட  இன்னொரு ஆய்வில் 2 மடங்கு ஆற்றல் கிடைத்தது.  எதிர்காலத்தில் 10 மடங்கு ஆற்றல் பெற திட்டமிடப் பட்டுள்ளதாம். இந்த வகை ஆற்றல் மிகவும் கவர்ச்சிகரமானது. ஏனெனில் இதிலிருந்து பசுமைக் குடில் வாயுக்கள் வெளிவராது. இப்போது உள்ள அணுப்பிளவு முறை  போல இது அபாயகரமான நீண்ட காலம் நிலைத்தி ருக்கக் கூடிய அணுக்கழிவுகளையும் ஏற்படுத்தாது. அணுச்சேர்க்கை என்பது சூரியனில் நடக்கும் ஒரு நிகழ்வுதான். நட்சத்திரங்கள் வெடிக்கும்போது ஏற்படும்  சூப்பர் நோவா என்பதை ஒத்த நிகழ்வுகள் இந்த சோத னையில் நடக்கின்றன என்கிறார் இந்த ஆய்வின் ஒரு ஆசிரியர் ரோசென்.

கடல் பஞ்சின் தற்காப்பு

ஜெல்லி மீன், பவளம் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் தூரத்து உறவான கடல்பஞ்சு (sea anemone) தன்னை உண்ண வரும் இறால்வகை மீன்களிடமிருந்து தப்பிக்க Nv1 எனும் நஞ்சைப் பெற்றிருக்கின்றன. இந்த நஞ்சானது மம்மிசோக் எனும் மீனையும் கவர்கிறது. அவைகளின் இரை இறால் மீன்கள் ஆகும். ஆக, கடல் பஞ்சு இரண்டு வகைகளில் தப்பித்துக் கொள்கிறது. இது குறித்து ஆய்வு செய்த ஹீப்ரூ பல்கலைக்கழக பேராசிரியர் யெஹு மோரன் இரண்டு விசயங்களைக் கண்டறிந்தார். ஒன்று இந்த நஞ்சை குறைக்கும் விதமாக மரபணு மாற்றம் செய்யும் முறை. இன்னொன்று இந்த நஞ்சு இல்லாத ஒரு வகை கடல் பஞ்சும் காணப்பட்டது. அவை தற்காப்பில் பலவீனமாக உள்ளன. ஆனால் அவற்றின் இனப் பெருக்கம் செய்யும் தன்மை கூடுதலாக காணப்பட்டது. படிநிலை வளர்ச்சியில் ஒரு அம்சத்தை இழந்தால் இன்னொரு அம்சத்தை உயிரினங்கள் பெறுகின்றன. இந்த ஆய்வின் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதும் சுற்றுசூழல் பாதுகாப்பில் எவ்வாறு நுணக்கமான விசயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது.
 


 

;