states

img

பினராயி விஜயனுக்கு எதிராக கட்டாய வாக்குமூலம்... அமலாக்கத்துறை மீது வழக்கு பதிய கேரள காவல்துறை முடிவு...

திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் பெயரைக் கூறுமாறு, சொப்னா சுரேஷை கட்டாயப்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், மத்திய அமலாக்கத்துறை இயக்குநரக (Enforcement Directorate) அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதனொரு பகுதியாக, வழக்குரைஞர் ஜெனரலிடம் (டிஜிபி), கேரள உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சட்ட ஆலோசனை கோரியுள்ளார்.அமலாக்க இயக்குநரகம் பகுதியளவு - நீதித்துறை அந்தஸ்தைக் கொண்டிருப்பதால் சட்ட ஆலோசனை பெறப்பட்டது. சட்ட ஆலோசனைக்குப் பின்னர், அமலாக்க இயக்குநரக டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்வருக்கு எதிராக ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறும் சொப்னாவின் ஆடியோ பதிவு அண்மையில் வெளியானது. இது தனது குரல்தான் என்று சொப்னாவும் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டார். சொப்னாவின் பாதுகாப்புக்கு பொறுப்பான நான்கு பெண் காவல்துறை அதிகாரிகளும் விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளித்தனர். முதல்வருக்கு எதிராக பேசுமாறு சொப்னாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததை அவர்கள் உறுதி செய்தனர். சொப்னாவிடம் அமலாக்கத்துறையினர் கேள்வி எழுப்பியபோது, காவல்துறையினரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, முதல்வரின் பெயரைக் குறிப்பிட்டால் மன்னிக்கப்பட்ட சாட்சி (அப்ரூவர்) ஆக்கப்படலாம் என டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் சொப்னாவுக்கு உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

வழக்குடன் தொடர்பில்லாதவர்களின் பெயரைக் கூறவைக்க முயற்சிப்பது கடுமையான குற்றம். இது வழக்கைத் தகர்த்து திசை திருப்புவதாகும். இதுபோன்ற தகவல்கள் விசாரணைக் குழுவால் ஆராயப்பட்டு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். 
குற்றப்பிரிவு மாநில காவல்துறைத் தலைவரிடம் சமர்ப்பித்த அறிக்கை, தற்போது உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

;