states

சுயமாகச் செயல்படுமா ஆணையம்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி, வெள்ளி, நிலம்,  பணம் அனைத்தையும் பறித்து இஸ்லாமிய ருக்கு கொடுத்து விடுவார்கள் என்று மோடி ராஜஸ்தானில் பேசிய பேச்சுக்கு எதிராக நட வடிக்கை எடுக்க மனமில்லாத இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா (உத்தவ்தாக்கரே) கட்சி அதற்கு ஒதுக்கப்பட்ட சின்னமான சுடர் (எரியும் ஜோதி) சின்னத்திற்கான தேர்தல் பரப்புரையாக வெளி யிடப்பட்ட பாடலில் இந்து, ஜெய் பவானி என்ற  வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது; இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோன்று அருணாச்சலப் பிரதேச கிறிஸ்டியன் ஃபோரம் (ACF), மதமாற்றத் தடைச்  சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. தவாங் என்னும் இடத்தில் தேவாலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில முதல்வர் பீமாகாண்டுவிடம்  கடந்த ஆண்டில் கோரிக்கை மனு அளித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இக் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கா விட்டால் அருணாச்சலப் பிரதேச கிறிஸ்தவ சமுதாயம் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தங்களின் கோரிக்கைகளை நினைவில் கொண்டு செயல்படும் என்றும் எச்சரித்தது. இன்று வரையில், இதுகுறித்து அருணாச்சலப் பிரதேச  மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே   அருணாச்சலப் பிரதேச கிறிஸ்தவ ஃபோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும்   காங்கிரசை வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்தது. உடனே முதல்வர் பீமாகாண்டு காங்கிரஸ் கட்சி மதத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜுஜு கிறிஸ்துவ அமைப்புகள் பாஜகவுக்கு எதி ராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். உடனடி யாக அருணாச்சலப் பிரதேச தேர்தல் ஆணை யம் செயலில் இறங்கியது. இந்திய தேர்தல் ஆணைய தலைமையிடம் இருந்தும் உத்தரவு பெற்றிருக்கலாம். அருணாச்சலப் பிரதேச கிறிஸ்தவ ஃபோரத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத நிறுவனத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதற்குரிய விளக்கத்தை அருணாச்சல பிரதேச கிறிஸ்துவ ஃபோரம் தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா  (உத்தவ் தாக்கரே),  அருணாச்சலப் பிரதேசத்தில் கிறிஸ்தவ அமைப்பு மீது மத உணர்வுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக நடவடிக்கை எடுக்கும்  இந்தியத் தேர்தல் ஆணையம் மோடியின் அப்பட்டமான மத வெறியை தூண்டும் பேச்சுக்களுக்கு எதிராக  தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அணுகுண்டுகளை எதற்காக வைத்திருக்கிறோம்? தீபாவளிக்கா வைத்திருக்கிறோம்? என்று அப்பட்டமாக தேசிய  வெறியை தூண்டும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசினார். அந்தப் பேச்சு தேர்தல் நடத்தை  விதிகளுக்கு எதிரானது என்றும் அதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா கோரினார். அடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளராக வரவிருந்த அவர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் துன்புறுத்தப்பட்டு பிலிப்பைன்சுக்கு செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டார். அவருக்கு இருந்த நேர்மையும், தைரியமும், இந்திய தேர்தல் ஆணையத்தின் சுயேச்சை தன்மையை நிலைநிறுத்தியாக வேண்டும் என்ற கடமை உணர்வும் மோடியின் கைப்பாவையாகிவிட்ட இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இல்லை.

- ம.கதிரேசன்

;