tamilnadu

img

கடவுளின் தேசத்தில் மக்களின் சேவை...

கேரளம் ஒரே நேரத்தில் மூன்று பேரிடர்களை சந்தித்துள்ளது. 1. கோவிட் தொற்று. 2. பெரு மழை/ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு. 3. கோழிக்கோடு விமான விபத்து. இந்த பேரிடர்களை எதிர்கொண்டு மீள்வதற்கு அசாத்திய நம்பிக்கையும் வலிமையும் தேவை. அத்தகைய நம்பிக்கையையும் வலிமையையும் கேரளாவில் இன்றைய ஆளும் அரசியல் தலைமை மட்டுமல்ல; மக்களும் கொண்டுள்ளனர் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. தாமாகவே மக்கள் முன்வந்து 
உதவிகள் செய்ததும் அதன் காரணமாக பாதிப்புகள் குறைந்ததும் இந்தியாவில் மட்டுமல்ல; வெளி நாடுகளிலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளன.

இதற்கு நேர்மாறாக சங் பரிவாரங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த பேரிடர்களில் உதவிக்கரம் நீட்ட மறுத்தது மட்டுமல்ல; இத்தகைய இழப்புகள் நேர்வது நல்லதுதான் எனும் ஒரு வன்மமான மனோ நிலையை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

விமான விபத்து- மக்களின் மகத்தான உதவிகள்
ஆகஸ்டு ஏழாம் தேதி அன்று மாலை சுமார் 7.30 மணி அளவில் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடில் தரை இறங்கிய பொழுது ஓடுபாதையின் முனை தாண்டி பள்ளத்தில் விழுந்து இரண்டு பகுதிகளாக உடைந்தது. கோழிக்கோடு விமான ஓடுபாதை “டேபிள் டாப்” எனப்படும் வகையை சேர்ந்தது. ஓடுபாதையின் ஒரு முனை அல்லது இருமுனைகளுக்கும் அப்பால் பள்ளம் இருக்கும். எனவே பல்வேறுபாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டு இருக்கும். மேலும் விமானிகள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் இருப்பது அவசியம். இந்தியாவில் கோழிக்கோடு/ மங்களூர்/ சிம்லா/ பேகாங்க்(சிக்கிம்)/ லெங்குயி(மிசோராம்) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் இத்தகைய ஓடுபாதைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு  மங்களூரிலும் இதே போன்று பெரும் விபத்து நிகழ்ந்தது. விமானிகளின் உரையாடலை பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி மூலம் விபத்துக்கானகாரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அதன் பிறகுதான் ஏன் விபத்து நிகழ்ந்தது என்பது தெளிவாகத் தெரியும்.

விபத்து நடந்த சில நிமிடங்களில் பல உள்ளூர் மக்கள் அங்கு விரைந்தனர். தொடக்கத்தில் ஒரு சிலரே இருந்தனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். விமானத்தின் உடைந்த பகுதிகளுக்குள் சென்ற அவர்கள் அங்கு சிக்கியிருந்த பலரை மீட்டனர். அங்கு கிடைத்த பொருட்களை பயன்படுத்தி தற்காலிக ஸ்ட்ரெட்சர்களை உருவாக்கி, அதில் காயம் அடைந்தவர்களை வெளியில் கொண்டு வந்தனர். அதற்குள் ஏராளமான பேர் தமது கார்கள்/மினி வேன்கள்/ சிறியரக லாரிகள் ஆகியவற்றை கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அந்த வாகனங்களில் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில குழந்தைகளின் பெற்றோரை காணவில்லை. எனவே அங்கு மீட்புப் பணிக்கு வந்தவர்கள் அந்த குந்தைகளை தமது தோள்களில் சுமந்து கொண்டனர். குழந்தைகளுக்கு உணவு அளித்தனர். அவர்களுடன் விளையாடி அவர்களது சோகத்தை மறக்க வைக்க முயன்றனர். பின்னர் குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு கூட்டிச் சென்று அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

மழை கட்டுக்கடங்காமல் பெய்து கொண்டிருந்தது. ஆனால் மக்கள் கவலை கொள்ளவில்லை. கோவிட் தொற்று ஆபத்து இருந்தது. ஆனால் அவர்கள் பயப்படவில்லை. தமது வாகனங்களை பயன்படுத்தினால் பெட்ரோல் அல்லது டீசல் செலவாகும். எனினும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. காயம் அடைந்தவர்களை கார்களின் இருக்கைகளில் உட்கார வைத்தால் இருக்கைகள் வீணாகும். அது குறித்தும் அவர்கள் கவலை கொள்ளவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் எவ்வளவு  முடியுமோ அவ்வளவு உயிர்களை பாதுகாப்பது மட்டும்தான்! விபத்து நடந்த இரண்டே மணி நேரங்களில் அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் மீட்கப்பட்டுவிட்டனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! அதுதான் நடந்தது.காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்படுமே! அதற்கான விவரங்கள் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன. இரவு 12 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஏராளமானவர்கள் மருத்துவமனைகளில் குவிந்தனர். தமது இரத்தத்தை தானமாக தர முன்வந்தனர். காயம் அடைந்தவர்கள் இருந்த 5 மருத்துவமனைகளிலும் நீண்ட கியூ வரிசை நின்றது. அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் நின்றனர். கோவிட் தொற்று காரணமாக இரத்தம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் பொறுமையாக நின்று இரத்தம் தானம் செய்தனர். 

 இதனை நேரில் கண்ட ஒருவர் தனது டுவிட்டரில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டார்:

“அவர்கள் லக்கேஜ்களை கொள்ளையடிக்கவில்லை
எதிர்ப்பில்லாத அவர்களின் பைகளில் எதுவும் கிடைக்குமா என துளாவவில்லை
தொப்பியிட்டவரா திருநீறுள்ளவரா 
சிலுவை உள்ளவரா என 
அவர்களின் கண்கள் 
துளைத்து துளைத்து தேடிப்பார்க்கவில்லை
பெட்ரோலின் விலையைப்பற்றியும்
கவலை கொள்ளாமல் 
பைக் ஆட்டோ கார்களின்
பின் சீட்டுகள் கேடாகுமென்று
கவலை கொள்ளாமல்
வாகனங்கள்
ஹாஸ்பிடலும் 
ஏர்போர்ட்டுமாக
பறந்துகொண்டேயிருந்தன...
கோவிட் 19 ஐ பற்றி பயப்படவில்லை
ரத்த வங்கிகளின் முன்பில்
அவர்கள் வரிசையில்
நின்றனர்
வரிசையில் நிற்கும் நேரமும் அர்த்தராத்திரி 
பேய்மழையும்
கூர் இருட்டையும்
கவனமே கொள்ளாமல்
மீட்புச் செயல்களில் 
அவர்கள் பம்பரமாய்ச் 
சுழன்றனர்
மாநில பேரிடர் படையோ
மத்திய பேரிடர் படையோ
வருவதற்கு முன்பே 
பல உயிர்களை பாதுகாத்த
அவர்கள் யார்...??
அவர்கள்தான் 
மலப்புரம் கேரளவாசிகள்..”
உள்ளூர் மக்களின் இந்த மகத்தான உதவி மனப்பான்மைதான் உயிரிழப்பை வெகுவாக குறைத்தது.

பிரமிக்க வைத்த தொண்டு 
மக்களின் தன்னார்வம் பலரையும் பிரமிக்க வைத்தது. பத்திரிகையாளர் சுபின் டென்னிஸ் கீழ்க்கண்டவாறு பதிவிட்டார்:“மீட்புப் படைகள் வருவதற்கு முன்பே மீட்புப் பணிகள்! 190 பயணிகளும் ஊழியர்களும் இரண்டே மணி நேரத்தில் மீட்கப்பட்டனர். மருத்துவமனைகளில் நடுநிசியில் இரத்தம்தானம் செய்ய நீண்ட வரிசைகள்! மலப்புரத்தை வெறுப்பவர்களே பெருமூச்சு விடுங்கள்”வெளிநாட்டில் இருந்த கேரளவாசி பதிவிட்டார்:“நான் கேரளாவை சேர்ந்தவன்; மனிதம்தான் எனது மதம்” . இந்த பதிவை ஆயிரக்கணக்கானவர்கள் மறுபதிவு செய்தனர். பல தமிழர்களும் “நான் தமிழன்; மனிதம்தான் எனது மதம்” என பதிவு செய்தனர்.பத்திரிகையாளர் சகாரிக்கா கோஷ் பதிவிட்டார்:“சோகத்திலும் நம்பிக்கைக் கீற்று. குடிமக்களும் மருத்துவர்களும் வேறுபாடுகள் பாராமல் மீட்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். கேரளா மாடலின் மகத்தான அம்சம் வெளிப்பட்டது. விமான நிலையத்தின் 25 கி.மீ. சுற்றளவுக்குள் 5 பெரிய மருத்துவமனைகள். எத்தனை இந்திய நகரங்களில் இந்த வசதிகள் உள்ளன?”

யுவஇன்போடெய்ன்மெண்ட் (YuvaInfotainment) எனும் யூடியூப் அலைவரிசை கூறியது:“விமான விபத்து மீட்புப் பணிகளில் கேரளாவின் உத்வேகம் உயர்ந்த இடத்தை தொட்டதை உலகமே வியப்புடன்பார்த்தது. கடும் மழையும் சரி- வைரஸ் பயமும் சரி- எதுவும் அவர்களை தடுக்க முடியவில்லை. “முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிவிட்டார்;“உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புப் பணியினரின் வேகமான செயல்கள்தான் பெரும் உயிரிழப்பை தடுத்தது. பெரு மழையையும் கோவிட் பயத்தையும் பொருட்படுத்தாது சக மனிதர்களை அவர்கள் காப்பாற்றினர். இரத்ததானம் செய்ய நின்ற நீண்ட வரிசை இன்னொரு உதாரணம்”

வாலிபர் சங்கத்தின் மகத்தான பணி
கேரளம் சந்தித்த இன்னொரு பேரிடர் மூணாறில் நிகழ்ந்த நிலச்சரிவு ஆகும். இதுவரை  சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரில் சிக்கியவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாட்டா குழுமத்தின் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்தவர்கள். அங்கு உடனடியாக உதவிக்கு ஓடிவந்தவர்கள் வாலிபர் சங்க தோழர்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவு இடத்தில் செயலாற்றுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் மீண்டும் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படலாம். மேலும் மிக கன மழை பெய்து கொண்டே இருந்தது. எனினும் இத்தகைய ஆபத்துகளை பொருட்படுத்தாமல் வாலிபர் சங்க தோழர்கள் மீட்புக் குழுவினருடன் இணைந்து தன்னலம் பாராது செயலாற்றி வருகின்றனர்.
அதேபோல கோழிக்கோடு விமானவிபத்து காரணமாக பல விமானங்கள் கண்ணூர் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. கால தாமதமாக இரவு நேரங்களில் விமானங்கள் வருவதால் மக்கள் உணவு இன்றி தவிப்பர் என்பதை அறிந்த வாலிபர் சங்க தோழர்கள் உடனடியாக ஏராளமான உணவு பொட்டலங்களை தயார் செய்து இலவசமாக தந்தனர்.  பேரிடர் காலங்களில் இத்தகைய தன்னலமற்ற பணிகள்தான் சவால்களை எதிர்கொள்வதில்  பெரும் நம்பிக்கையை தருகிறது.

சங் பரிவாரங்களின் வன்மம்
இந்த பேரிடர்களில் எதிர்மறையான மனோ நிலையை வெளிப்படுத்தியவர்கள் சங் பரிவாரங்கள்தான். விமான விபத்தில் அவர்கள் எந்த உதவியையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல; வன்மத்தை வெளிப்படுத்தினர். ஒருவர் பதிவிட்டார்:
“ஐயப்பனின் கோபம் இன்னும் தீரவில்லை. இது  தொடரும்”சுவாமி ஐயப்பனை இதைவிட கேவலப்படுத்த இயலுமா?“மலப்புரம்வாசிகளுக்கு இது பொருத்தமான தண்டனை”- இது இன்னொருவரின் பதிவு.ஒரு பா.ஜ.க. தலைவர் பதிவிட்டார்:
“கேரளாவின் சாபம் பினராயிதான்! இவர் முதல்வராக தொடரும் வரை அழிவுகளும் தொடரும்.”இத்தகைய வன்மங்கள் உருவாகும் மனம் எத்தகையது? நிச்சயமாக பாசிசம் வேரூன்றியிருக்கும் மனங்களில்தான் இத்தகைய சிந்தனைகள் உருவாகும். ஐக்கிய அரபு அமீரகம்/ நேபாளம்/ வங்கதேசம் என பல தேசங்களும் தமது அனுதாபத்தை வெளிப்படுத்தின. நமது எதிரிநாடு என கருதப்படும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் கூட வருத்தம் வெளியிட்டார். ஆனால் இதற்கு நேர்மாறாக உள்ளூர் சங் பரிவாரத்தினர் சிந்தித்தனர். சிலர் கேரளா அரசாங்கம் ஏன் விமானம் தரை இறங்க அனுமதி தந்தது என கேள்வி கேட்டனர். விமான நிலையங்கள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பதை மறைத்து விஷமப் பிரச்சாரம் செய்தனர்.
கேரளம் சங் பரிவாரங்களின் தேசம் அல்ல! சிலர் இதனை கடவுளின் தேசம் என அழைக்கின்றனர். சிலர் இதனை 

கடவுள் மறுப்பு தேசம் எனவும் அழைக்கின்றனர். இரண்டும் வெவ்வேறு கோணங்களில் உண்மையாக இருக்கலாம். ஆனால் கேரளம் மனித நேயம் கொண்ட தேசம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது!
 

===அ. அன்வர் உசேன்===

;