tamilnadu

img

மின் ஊழியர்கள் கொதிப்பு

காவல்துறையினரால் தினந்தோறும் இழிவுபடுத்தப்படும் அவலம் - தமிழக அரசு கவனிக்குமா?

சென்னை, ஜுன் 25- தமிழக மின்வாரிய ஊழியர்கள், இதில் குறிப்பாக  களப் பணியாளர்கள், மின் அளவீடு செய்யும் கணக்கீட்டு பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து காவல்துறையினரால் இந்த ஊரடங்கு காலத்தில் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இது மின் ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அத்தியாவசிய துறையான மின்சார துறையில் பணியாற்றும் ஊழியர்களை இழிவாக நடத்துவதும் ஏளனம் செய்வதும் வன்மையான கண்டனத்திற்குரியது என தமிழக காவல்துறைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பு (சிஐடியு). அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு பணியில் அரசின் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டுமென்றால் பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டுமெனில் தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்க வேண்டியது மின்வாரியத்தின் பணி. அந்தப் பணியை செய்யவிடாமல் காவல்துறை தடுப்பது என்பது அரசின் ஊரடங்கு உத்தரவை அமலாகாமல் இருப்பதற்கே வழி செய்யும்.

இந்தக் கொடிய நோய்  தொற்று தடுப்பு   பணியில் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் மின்வாரிய ஊழியர்கள் இரண்டாம் கட்ட போர் வீரர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவல் துறைக்கு அடுத்து மின் வாரிய ஊழியர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதுவரை எவ்வித சலுகையும் மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசால் அளிக்கப்படவில்லை. இது மின் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களிலிருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்ல அரசின் இ பாஸ் அவசியம் என தெரிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு செல்வதற்கு விண்ணப்பித்தால் ஒரே மண்டலமாக இருப்பதால் தேவையில்லை என சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. வாரிய நிர்வாகம் அடையாள அட்டை வழங்காத காரணத்தால் இவர்களும் தொடர்ந்து காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில் தற்போது உள்ள சூழ்நிலையில் மின் ஊழியர்கள் நீண்ட தொலைவிலிருந்து பணிக்கு வர வேண்டி உள்ளது. அவ்வாறு பணிக்கு வரும் ஊழியர்களை பாதுகாப்பாக அனுமதிப்பது காவல்துறையின் பணி என்பதை மறந்து மின் ஊழியர்களை தாக்குவது என்பது எந்த விதத்திலும் நியாயம் அல்ல என்பதை தமிழக காவல்துறை புரிந்துகொள்ள வேண்டும்.. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்பொழுது சென்னையில் காவல்துறையினர் மின்வாரிய  ஊழியரை தாக்கிய சம்பவத்தை மனித உரிமை ஆணையம் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.

மின்வாரிய தலைவரும் வாரிய உயர் அதிகாரிகளும் மின்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக பேசிய பின்பும் திங்கள்கிழமை மாலை மின்  ஊழியர்களின் வாகனத்தில் இருந்த ஸ்டிக்கர்களை கிழித்து அவர்களை அவமானப்படுத்தி காவல்துறையினர் அச்சுறுத்தியிருப்பது மின் ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் வாரியப் பணிக்காக இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றமைக்காக அபராதம் விதித்துள்ளனர். தளவாட சாமான்களை ஒரே வண்டியில் எடுத்துக் கொண்டு ஒருவர் ஓட்டிச் செல்வது என்பது சாத்தியமல்ல என்பதை காவல் துறை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று எங்களை பணி செய்ய விடுங்கள்; அல்லது எங்களுக்கும் விடுப்பு அளித்து விடுங்கள் என்ற கோரிக்கை  மின் ஊழியர் மத்தியில் எழுகிறது. தமிழக காவல்துறையினர் மின்வாரிய ஊழியர்கள் மீது இனி தாக்குதல் நடத்தினால், அதனால் மின் வினியோகம் தடைபட்டால் அதற்கு தமிழக காவல்துறையே பொறுப்பேற்க வேண்டுமென  தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தமிழக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் காவல்துறை தலைவர் அவர்களுக்கு மின் ஊழியர்களின் பணி நிலையை விளக்கி தகுந்த உத்தரவை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;