tamilnadu

img

நீங்கள் தனியாக இல்லை... நாங்கள் இருக்கிறோம்.... வர்க்க கடமையாற்றும் சிஐடியு....

வணக்கம் சார்… இந்த நம்பர் வாட்ஸ்அப்புல நண்பர்கள் அனுப்பினாங்க. எங்க வீட்டில் எல்லோருக்கும் பாசிட்டிவ். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கிட மருத்துவமனையில் சொன்னாங்க. வெளியே எங்கேயும் போகமுடியல. சமைக்கவும் வழியில்ல ஏதாவது சாப்பிட கொண்டுவந்து கொடுக்க முடியுமா.

எத்தன பேர் இருக்கீங்க. உங்க முகவரி சொல்லுங்க. இரவு சுமார் 9 மணிக்கு வந்த ஒரு அழைப்பு.

அடுத்தநாள் காலை கோவை மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் சிஐடியு ஊழியர்கள் உணவு தயாரித்து கொண்டுள்ளனர். அங்கு வந்த இந்திய மாணவர் சங்க செயலாளர் தினேஷ் சிஐடியு நிர்வாகி மனோகரிடம் தோழர் எனக்கு இன்று நான்கு சாப்பாடு அதிகமாக வேண்டும். நேற்று இரவு எனக்கு போன் வந்தது. ஒரு குடும்பத்தினர் தனிமைப்படுத்திகொண்டுள்ளார்களாம். அவர்களுக்கு உணவு தரவேண்டும். முதலிலேயே சொல்ல வேண்டாமா. 705 பேர் பட்டியல் எடுத்தோம்அதற்கேற்பத்தானே சமையல் செய்து கொண்டிருக்கிறோம் எனஉரிமையோடு கடிந்து கொண்டார். பிறகு பரவாயில்லை இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக நமக்கு சேர்த்துத்தான் பன்னியிருக்கோம் அதில் இருந்து எடுத்துக்கோ…

சாம்பாரில் சின்ன வெங்காயம் போட்டா நல்லயிருக்கும். தோழர் ஒருத்தர் ஒரு மூட்டை சின்ன வெங்காயம் கொண்டு வர்ரேன்னு சொன்னார் இப்போது வரைக்கும் வரவில்லை.ஒரு நாளைக்காவது சிக்கன் பிரியாணி போட்டு கொடுக்கனும் தோழர்.
ஏப்பா நாம என்ன கல்யாணத்திற்கா சமையல் செய்யுரோம். நோய் பாதிச்சு வீட்டில தனிமையா இருக்கிறவங்க நாம தனியா இல்ல நம்ம கூட நிறைய பேரு இருக்குறாங்கன்னு அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறதுக்குத்தான்யா இந்த உணவு சப்ளையெல்லாம்.இதுபோன்ற உரையாடல்கள் இன்று மட்டுமல்ல கடந்த பத்தாம் தேதி ஊரடங்கு பிறப்பித்த நாளில் இருந்து உணவு சேவையாற்றும் சிஐடியு நிர்வாகிகளுக்கும், இதனை விநியோகிக்கும் தோழர்களுக்குமான அன்றாட உரையாடல்கள்.  

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் 175 பேருக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு, வயதான மூதாட்டிகளுக்கு, விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு என தற்போது 800 பேருக்கு அன்றாடம் சமைத்து உணவு விநியோகிக்கப்படுகிறது. சிஐடியு ஹோட்டல் சங்க தோழர்கள் உணவு சமைக்க, அதனை பார்சல் செய்யும் பணியில் சிஐடியு  ஊழியர்கள் ஈடுபட. மார்க்சிஸ்ட் கட்சியின் இடைக்குழு செயலாளர்கள்,மாணவர் சங்க தோழர்கள், தீக்கதிர் விநியோகிப்பாளர்கள் ஆகியோர் உணவுகளை எடுத்து நேரிடையாக சென்றுவிநியோகித்து வருகின்றனர். அன்றாடம் காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இரண்டு வேளை உணவு சமைத்துவிநியோகிக்கும் பணிகளை சுமார் 80 ஊழியர்கள் இந்த வர்க்க கடமையை செய்து வருகிறார்கள். இதன் அத்தனை பணிகளையும் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன்   ஒருங்கிணைத்து வருகிறார்.

உணவு விநியோகத்தோடு மட்டும் இந்த பணிகள் நின்றுவிடுவதில்லை. ஒவ்வொருவரையும் அழைத்து உங்கள் உடம்பு எப்படிஇருக்கிறது. ஏதாவது மருத்துவ உதவி வேண்டுமா. இன்று சாப்பாடுஎப்படி இருந்தது என்கிற நலம் விசாரிப்புகள் நாங்கள் தனிமையில் இல்லை எங்களோடு நெருக்கமாக முகம் பார்க்காத செங்கொடி அமைப்பினர் இருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்துகிறது. சிபிஎம் சிங்கை நகர செயலாளர் தெய்வேந்திரன் போகிற போக்கில் சொன்னார்.  நானும் மாஸ்க் போட்டிருக்கேன். சாப்பாடு  வாங்குறவங்களும் மாஸ்க் போட்டிருக்காங்க. ஆனால் அவங்க கண்ணுல ஒரு வெளிச்சத்த பார்க்க முடிஞ்சுது தோழர். அந்த திருப்தி எத்தன கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது தோழர் என்றார். நாளைக்கு என்ன சமையல் தோழர் என்கிற குரலையடுத்து எதிர் குரல் சொன்னது. ஸ்பான்சர்பொருள்கள் கிடைப்பதை பொருத்து முடிவு செய்யலாம் தோழர்…இப்படியாக நகர்கிறது ஊரடங்கு காலத்தில் கோவை மாவட்ட சிஐடியு தோழர்களின் வர்க்கப்பணி… 

;