tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்.... தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

சென்னை:
மாநிலத் தலைமைக் கூட்டுறவுவங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்கக் கோரி புதனன்று (ஆக.5) தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா நடத்தினர்.

கூட்டுறவு வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் (பெஃபி) சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.வங்கிகள் ஒழுங்குமுறை அவசரச் சட்டம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும், தனியார்மயமாக்க வழிவகுப்பதாகவும் உள்ளது. எனவே, மாநில அரசு இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும். 123 நகரக்கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து மாவட்டத்திற்கு ஒரு வங்கியாக மாற்ற வேண்டும் என்று போராட் டத்தில் வலியுறுத்தப்பட்டது.கூட்டுறவு வங்கிகளிலுள்ள அரசு அதிகாரிகளின் பதவி நிலைகளை உயர்த்தக்கூடாது, நேரடி நியமனம் மூலம் உதவி மேலாளர் பணியிடத்தை  நிரப்பக்கூடாது, உதவி மேலாளர் பதவி உயர்வு அனைத்தையும் முதுநிலைப் பட்டியல் அடிப்படையில் வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண் டும், 2015-16ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு முதுநிலை பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தர்ணாவில் வலியுறுத்தப்பட்டது.

இதன் போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை பாரிமுனையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பும் தர்ணா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் தி.தமிழரசு, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வங்கி ஒழுங்கு முறை சட்டத்தில் திருத்தம் மேற் கொள்ளப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும், கூட்டுறவு வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது என்றார்.இந்தப்போராட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன், பெஃபி பொதுச் செயலாளர் ராஜகோபால், எம்சிசி வங்கி ஊழியர் சங்கத் தலைவர் ராஜகேசி, பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;