tamilnadu

img

150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடியது நமது தமிழ்மண்... முதல்வர்....

சென்னை:
150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 75 வது சுதந்திர தினத்தையொட்டி ஞாயிறன்று (ஆக.15)  சென்னை கோட்டை கொத்த
ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தலைமை செயலகம் வந்த முதலமைச்சரை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார். அங்கு தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். முதலமைச்சருக்கு  காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர்  பின்னர் கோட்டை கொத்தளத்தில்  தேசியக் கொடியை  ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரை வருமாறு:  

 75 ஆவது சுதந்திர நாளை நினைவுகூரும் வகையில் மிகப்பெரிய தூணை இன்று உருவாக்கி இருக்கிறோம். அது வெறும் கல்லாலும் சிமெண்டாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல. நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்களின் ரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டதுதான் அந்தத் தூண்! சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண். பூலித்தேவர், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, சின்ன மருது, பெரிய மருது, வ.உ.சி., மகாகவி பாரதி, சுப்பிர மணிய சிவா, டி.எஸ்.எஸ். ராஜன், தில்லையாடி வள்ளியம்மை, தந்தை பெரியார், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கம், ம.வெ.சிங்காரவேலர், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராசர், ஏ.எம்.ஈஸ்வரன், ஓமந்தூர் ராமசாமி, ஜீவா, கேப்டன் லட்சுமி, ம.பொ.சிவஞானம், கே.பி.சுந்தராம்பாள் இத்தகைய தமிழ்நாட்டுத் தியாகிகளின் மூச்சுக் காற்றைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த நினைவுத்தூண்.

ஓய்வூதியம் உயர்வு
மாநில அரசால் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 17 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாகஉயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியத் தொகை 8,500 ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என்பதை இந்த வேளையில் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு விடுதலைத் தியாகிகளை நினைவு கூர்வதில் நமது அரசு எப்போதும் தவறியது இல்லை என்றார் முதல்வர். இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

;