tamilnadu

img

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்திடுக... அமைச்சர் மனோ தங்கராஜிடம் சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தல்....

சென்னை;
ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டுமென்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் த.மனோ தங்கராஜை சந்தித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், யுனைட் அமைப்பின் செயலாளர் வெல்கின், நிர்வாகிகள் சுகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அளித்த மனுவின் சுருக்கம் வருமாறு: 

சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொடர்பு துறையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள், ஐடிஇஎஸ் (ஐடி எனேபல் சர்வீஸ்), பிபிஒ (பிசினஸ் புராசசிங் அவுட்சோர்சிங்), மெடிகல் கோடிங், டேட்டா என்ட்ரி, அரசுக்கு சொந்தமான இ-சேவை மையங்கள், ஆதார் மையங்கள், அரசு அலுவலகங்களில் தரவு உள்ளீட்டாளர்கள் என பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் உள்ளிட்டு பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இந்திய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மறுக்கின்றன. இ-சேவை மைய ஊழியர்களுக்கு உரிய ஊதியம், வருங்கால வைப்பு நிதி,மருத்துவ வசதி வழங்கப்படாமல் உள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பு தொழிலாளர் துறையில் தொழிற் தாவா எழுப்பப்பட்டும், தீர்வு காணப்படாமல் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சார்பு தொழில் (ஐடிஇஎஸ்) நிறுவனங்களில் பணிபுரியும் இளம் ஊழியர்கள் எந்தவித சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். 

ஐடி ஊழியர் நலவாரியம்
ஐடி பன்னாட்டு நிறுவனங்கள் தவிர 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு தகவல் தொடர்பு நிறுவனங்களில், குறிப்பாக அவுட் சோர்சிங்  நிறுவனங்களில் எந்தவித சமூக பாதுகாப்பின்றி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் கேரள அரசு இந்த துறை ஊழியர்களுக்கு நல வாரியம் அறிவித்துள்ளது. அதே போன்று தமிழகத்திலும் நல வாரியம் அமைக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம்
தகவல் தொடர்பு சார்பு துறை, பிபிஒ, இ-சேவை, தரவு உள்ளீட்டாளர்கள், கிராபிக் டிசைனர்ஸ் என பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். 

முத்தரப்புக்குழு
ஐடி துறை ஊழியர்கள் பணி பாதுகாப்பின்றி, தொழிலாளர் சட்ட பாதுகாப்பின்றி பணியாற்றுகின்றனர். பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு பலன்கள், விடுப்புகள் வழங்குவது, கர்ப்பிணி ஊழியர்களை மீண்டும் வேலைக்குச் சேர்ப்பது போன்றவற்றில் பிரச்சனை உள்ளது. பெஞ்ச் முறை அமல்படுத்தி வேலையிழப்பு நடவடிக்கை, சம்பள பட்டுவாடா என்பதற்கு மாறாக சிடிசி (காஸ்ட் டு கம்பெனி) என புதிய முறையை கையாள்வது போன்றவற்றிற்கு தீர்வு காண வேண்டும். பணி பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். 

இ-சேவை மைய ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் கீழ் இயங்கும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக 7778 ரூபாய் மாத ஊதியத்திற்கு வேலை செய்து வருகின்றனர். பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், பிஎப் மற்றும் இஎஸ்ஐ போன்ற அடிப்படை சலுகைகள் வழங்கப்படவில்லை. தேவையான, போதுமான உபகரணங்கள் கூட வழங்கப்படுவதில்லை.வேறு எந்த தொழிலிலும் இல்லாத ஊழியர் கண்காணிப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது நாளொன்றுக்கு ஐந்து முறை வருகை பதிவை பதிய வேண்டி உள்ளது. இவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

வீட்டிலிருந்து வேலை 
ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்ய ஐடி ஊழியர்கள் ஐடி மற்றும் அதன் சார்பு தொழில் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை பயன்படுத்தி ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரித்து வருகின்றனர். வேலையிழப்பு, வேலை நீக்கம், ஊதியம் குறைப்பு, அலவன்சுகள் குறைப்பு செய்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.இந்த பின்னணியில் டிசிஎஸ், இன்போசிஸ், அசெஞ்சர்,எச்சிஎல், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்கள் வரும் மாதங்களில் ஊழியர்களை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, அரசு தலையிட்டு தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தி ஐடி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்
இந்த சந்திப்பின்போது, 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

;