tamilnadu

img

இது பெருமையல்ல பெரும் சுமை!- க.கனகராஜ்

ஏப்ரல் மாதத்தில் ஜி எஸ் டி வருவாய் 'சாதனை' அளவாக ₹2,10,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டத்தே இதற்குக் காரணம் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். இன்று காலையில் ஒரு தேநீர் கடையில் பேசிக் கொண்டிருந்த இருவர் இந்த ஜிஎஸ்டி வருவாய் உயர்வு என்பது ஒன்றிய அரசாங்கத்தின் பெருமை என்றும் அது பாராட்டப்படத்தக்க செயல் என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்களுடைய உரையாடலில் ஒரு பெருமை மற்றும் பெருமிதம் தொனித்தது. ஆனால் இந்த மாதிரியான செய்திகளைப் பார்க்கிற போது பொதுவாக அதை தன்னுடைய வாழ்க்கையின் நிலைமைகளோடு அல்லது அது தன் மீது என்ன தாக்கத்தை செலுத்துகிறது பொதுமக்கள் மீது என்ன தாக்கத்தை செலுத்துகிறது என்பதைப் பற்றிய கவலை இன்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் நான் தலையிடவில்லை; ஏனென்றால் அவர்கள் இருவரும் எனக்கு மிகவும் புதியவர்கள்.

பிரச்சனை என்னவென்றால் பத்திரிகைகள் தலைப்பு கொடுக்கும் முறையிலும் செய்தியை கொடுக்கும் முறையிலும் ஒரு பெருமிதம் தொனிக்கிறது என்பது மிகப்பெரிய கொடுமை.

உதாரணத்திற்கு எந்தக் காலத்திலும் கார்ப்பரேட் வரிகள் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை பற்றி இவர்கள் பேசவில்லை 2019 ஆம் ஆண்டு கார்ப்பரேட் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்த போது மிகப்பெரிய அளவிற்கு அதையும் பெருமையாக கொண்டாடினார்கள். இதன் மூலமாக எல்லோரும் வரி கட்டி விடுவார்கள் புதிதாக தொழில்வரும் புதிய தொழில் வருவதன் மூலமாக மீண்டும் வரி வருவாய் அதிகரிக்கும் என்றெல்லாம் ஒரு கதை கட்டப்பட்டது. இந்த கதை ஒரு புறம் இருக்கிறது ஆனால் இந்த காலத்தில் எந்த நேரத்திலும் கார்ப்பரேட் வரிகள் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை பற்றி எந்தவிதமான புள்ளி விவரங்களையும் பளிச்சென்று சாதாரண மனிதன் படிக்கிற வகையில் சொல்வது கிடையாது. ஏனென்றால் உண்மையில் நேரடி வரி விகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது அல்லது ஜிஎஸ்டி எனப்படுகிற எனப்படுகிற மறைமுக வரி மிகப் பெரிய அளவுக்கு அதிகரித்து இருக்கிறது இப்போது ஜிஎஸ்டி ₹2.1 லட்சம் கோடி ஒரு மாதத்தில் வசூலாகி இருக்கிறது . இதனுடைய பொருள் என்ன சாதாரண மனிதனுக்கு இது எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பார்க்கலாம். ஒரு மாதத்தில் ₹2.1 லட்சம் கோடி என்பதன் பொருள் என்னவென்றால் ஒவ்வொரு நபரும் அதாவது இந்தியாவில் 144 கோடி மக்கள் தொகை என்று வைத்துக் கொண்டால் இந்தியர் ஒவ்வொருவரும் இந்த மாதத்தில் 1458 ரூபாய் 33 பைசா வரியாக செலுத்தி இருக்கிறார் .ஒரு குடும்பத்தில் இந்தியாவைப் பொறுத்த அளவில் சராசரி உறுப்பினர் எண்ணிக்கை 4.4 என்று கணக்கிடப்படுகிறது இதன்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு மாதத்தில் 6416 ரூபாய் வரியாக அரசாங்கத்திற்கு கட்டிக் கொண்டிருக்கிறது .இதை அப்படியே நாள் கணக்குக்கு மாற்றினால் ஒரு குடும்பம் ஒரு ₹ 213 வழியாக கட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதை மணிக்கணக்கில் கணக்கிட்டால் ஒரு மணி நேரத்திற்கு இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் ஒன்பது ரூபாய் வரியாக கட்டிக் கொண்டிருக்கிறது .இதுதான் நிலமை எனவே 2.1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் என்பதன் பொருள் ஒவ்வொரு இந்திய குடும்பமும் எந்தவித விடுமுறையும் இல்லாமல் குறைந்தபட்சம் ஒவ்வொரு மணி நேரமும் ஒன்பது ரூபாய் வரியாக செலவழித்துக் கொண்டிருக்கிறது ;கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறது என்று பொருள். இதைக் கவனிக்க தவறினால் அது அது ஐந்து லட்சம் கோடி ஆனாலும் அதைப்பற்றியான ஒரு பெருமிதம் தான் இருக்குமே தவிர சாதாரண மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பதை பற்றிய கவலை இருக்காது. இந்த வரி என்பது வருமானத்தில் அடிப்படையிலானது அல்ல. நுகர்வின் அடிப்படையிலானது எனவே எனக்கு வருமானம் இருக்கிறதோ இல்லையோ ஒரு பொருள் வாங்குகிற போது அதை கடன் வாங்கி நான் வாங்கினாலும் அதற்கு நான் வரி கட்ட வேண்டும். அப்படி கட்டுகிற வரி எல்லாம் நிறுவனங்கள் கட்டுவதாக தான் பொதுவாக நம்முடைய மனோநிலை தகவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிறுவனங்கள் இவற்றை வசூலித்து கட்டுகின்றனர் அல்லது கட்டிவிட்டு வசூலித்துக் கொள்கின்றனர். எனவே இரண்டு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி உயர்ந்துவிட்டது என்று பேசுவதன் பொருள் என்னவென்றால் சாதாரண ஏழை எளிய மக்களின் பாக்கெட்டில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் கடந்த மாதத்தில் மட்டும் ஒன்பது ரூபாய் ஒன்றிய அரசாங்கம் வழியாக பிடுங்கி இருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம் .எனவே இதில் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் இதில் கோபப்படுவதற்கும் கார்ப்பரேட் வரியை குறைத்து விட்டு ஏழைகளின் வயிற்றில் ஏன் அடிக்கிறாய் என்று கேட்பதற்குமான தர்க்கம் தான் இதில் அடங்கி இருக்கிறது. எனவே ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி வருமானம் என்பது ஏழைகளிடமிருந்து பிடுங்கப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது இதில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் இவர்கள் இப்படி ஏழைகளை கசக்கி பிழிவார்கள். இன்னொரு பக்கம் இப்படி வருகிற பணங்களை எல்லாம் அவர்கள் பெரும் முதலாளிகளுக்கு இதுவரையிலும் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி தள்ளுபடியாகள்ளிக்கொடுக்கிறார்கள். பத்தாண்டு காலத்தில் அது இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது .16 லட்சம் கோடியோ 17 லட்சம் கோடியோ ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சாதாரண மனிதர்களிடம் கசக்கி பிழிந்து வரியை பெற்றுக் கொண்டு அதை பெரும்பணக்கார்ர்களுக்கு கடனை தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இதில் பெருமை கொள்வதற்கு எதுவும் இல்லை

-க.கனகராஜ்

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்

;