tamilnadu

என்எல்சி பழிவாங்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

கடலூர், மே.17-என்எல்சி நிறுவனம் தொழிற் சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது.என்எல்சி நிறுவனத்தில் நடந்த தொழிற் சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு சங்கம் வெற்றிப் பெற்று முதன்மை சங்கமாக திகழ்கிறது. இந்த சங்கத்தின் முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிர்வாகத்துடன் ஏற்படுத்தியது. தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் உள்ளேயும், வெளியேயும் போராடி வருவது நிர்வாகத்திற்கு பெரும் பிரச்சனையாகவுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த என்எல்சி நிர்வாகம் சிஐடியு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.திருஅரசை தொடர்ச்சியாக பழிவாங்கி வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது சிஐடியு சங்கம் உறுதியாக போராடும் காரணத்தினால், அதில் முன்னணியிலுள்ள எஸ்.திருஅரசு உள்ளிட்ட தலைவர்களை வேண்டுமென்றே பழி வாங்கி வருகின்றது.துணைத் தலைவர் எஸ்.திருஅரசை கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை நெய்வேலிக்குள் இடமாற்றம் செய்த போதிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது என்எல்சி நிர்வாகம். பொருந்தாத காரணங்களைக் கூறி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியது. முகநூல் பதிவில் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டார் என ராஜஸ்தான் மாநிலம் பர்ஷங்டர் என்ற இடத்திற்கு எஸ்.திருஅரசை இடமாறுதல் செய்து உத்தரவிட்டது.நெய்வேலிக்குள் இடமாறுதலை ஏற்றுக்கொண்டு பணிசெய்து வந்த அவரை, வேறு மாநிலத்திற்கு இடமாறுதல் செய்தததை சிஐடியு ஏற்கவில்லை. இதையே முன்னுதாரணமாக கொண்டு மற்ற தொழிலாளர் களையும் வேறு வேறு மாநிலங்களுக்கு பந்தாடுவதற்கு சிஐடியு சங்கம் அனுமதிக்காது எனக் கூறியதோடு அந்த உத்தரவை ரத்து செய்து தொழில் அமைதிக்கு நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கைக்காக உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம், வாயிற் கூட்டம் உள்ளிட்ட பல் வேறு வடிங்களில் போராடியது.தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கும் வகையில் வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை எதிர்த்து சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்க துணைத் தலைவர் எஸ்.திரு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் என்எல்சி நிறுவனத்தின் இடமாறுதல் உத்தரவிற்கு இடைகால தடைவிதித்த அவர், அடுத்தக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், கே.சி.காரல்மார்க்ஸ் ஆகியோர் ஆஜரானார்கள்.

;