அமெரிக்க ஆளும் வர்க்கமும், நவ-பாசிச போக்குகளும்! - ஆர்.எஸ்.செண்பகம்
yesterday

அமெரிக்க ஆளும் வர்க்கமும், நவ-பாசிச போக்குகளும்! - ஆர்.எஸ்.செண்பகம்

அமெரிக்க சமூகம் பொருளாதார ரீதியாக எவ்வளவு பிரிந்தாலும், அதன் ஜனநாயகம் பாதிக்கப்படுவதில்லை என்பது தாராளவாத ஜனநாயகம் பேசுவோர் கொண்டிருக்கும் மாயை ஆகும். உண்மையில், மூலதனத்தின் நலன்களே அமெரிக்க வெளியுறவிலும், உள்நாட்டு அரசியலிலும் தொடர் ஆதிக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டின் அரசியலில், அவை தனதுமிகப்பெரும் பொருளாதார ஆற்றலின் மூலம் நேரடிநிதி நிர்பந்தங்கள், லாபக் கொள்ளைக்காக அரசியல்செல்வாக்கைப் பயன்படுத்தல், சிந்தனையைக் கட்டமைத்தல் மற்றும் கைக்கூலிக் குழுக்களுக்கு நிதிஆதரவு, அரசு மற்றும் தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான “சுழல் கதவு” போன்ற செயல்பாடு, கலாச்சாரம் மற்றும் ஊடக அமைப்புகளில் கட்டுப்பாடுபோன்ற பல வழிகளில் இந்த ஆதிக்கத்தை மேற்கொள்கிறார்கள்.

சோவியத் பொருளாதார நிபுணர் ஸ்டானிஸ்லாவ் மென்ஷிகோவ் 1962 இல் அமெரிக்க ஆட்சியை பற்றிய ஆய்வைமேற்கொண்டார். அதற்காக ஒரு பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டிருந்த 25வணிக வங்கிகளில் 13வங்கிகளின் தலைவர்களையும், மேலும் டஜன் கணக்கான நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தார்.அப்போதே, நிதி மூலதன சக்திகள் ஆளும் வர்க்கத்தில் கொண்டிருந்த தாக்கத்தை அவர்வெளிப்படுத்தினார்.“அமெரிக்காவில் அரசாங்க இயந்திரம் பல பத்தாண்டுகளாக ஏகபோகங்களுக்காகவே சேவை செய்துவருகிறது;பொருளாதாரத்தில் அவற்றின் ஆதிக்கம் சந்தேகமில்லாமல் நிலைத்திருக்கிறது. நிதிதன்னலக்குழுக்களின் பொருளாதார அதிகாரம் படிப்படியாக அரசியல் அதிகாரமாக மாறுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

1966ல் பால் ஏ. பரான் மற்றும் ஸ்வீஸி ஆகிய பொரு ளாதார அறிஞர்கள், “பெரும் பொருளாதார அதிகாரத்தின் மீது நிற்கும் சிறிய தன்னலக்குழு, சமூகத்தின் அரசியல் மற்றும் கலாச்சார அமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவை ஒரு உண்மையான ஜனநாயக நாடாகக் காண்பது மிகப்பெரிய தவறாகும்” எனத் தங்கள் நூலில் கூறினர்.

உலகமயமாக்கலும் தொழில்துறைச் சிதைவும்

இந்த ஆய்வுகள் நடந்த காலம் ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ எனப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த நெருக்கடிகளும், பின்னர் 1980களில்உலகமயமாக்கலுடன் தொடங்கிய மாற்றங்களும் முக்கியமானவை. வட அமெரிக்க தாராள வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) போன்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சீனா உலக வர்த்தக மையத்தில் நுழைந்தது போன்றவை குறைந்த தொழிலாளர் செலவுகளைத் தேடி அமெரிக்கா தனது உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்ற வழிவகுத்தன. குறைந்த உற்பத்திச்செலவுகள், அதிகரித்த லாபம் மற்றும் மலிவான கூலி உழைப்பு கிடைக்கும் நாடுகளுக்குப் பெரு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் தளங்களை மாற்றியமைத்தன. இது “உலகத் தொழிலாளர் சமநிலை” என்று அழைக்கப்படுகிறது.

இதன் விளைவாக அமெரிக்கா தொழில்துறைச் சிதைவின் (deindustrialization) பாதையில் சென்றது. தொழிற்சங்க சிதைவு (deunionization), நிதிமயமாக்கல் (financialization) மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை உருவாகியதால் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்தன. அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தின் வருமானத்தில் 50 ஆண்டுகளாக ஒரு தேக்க நிலை உருவானது.

ஏகபோக நிதி மூலதனம் உருவான கட்டத்தில் நிதித்துறை வேகமாக வளர்ந்தது, ஆனால் பொருள் உற்பத்தி தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட சுமையே பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டது. குடும்பக் கடன், காப்பீட்டுச் செலவுகள் மற்றும்சுகாதாரச் செலவுகள் அதிகரித்தன. ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டன. இவை அனைத்தும் மக்கள் வருமானத்தினை அபகரிக்கும் பெரிய சுரண்டல் வழிமுறைகளாக மாறின. பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்தாலும், செல்வந்தர்களின் செல்வம் ஆச்சரியமானவேகத்தில் உயர்ந்தது.

அமெரிக்கப் பொருளாதாரம் முரண்பாடுகளால் நிறைந்த 21ஆம் நூற்றாண்டின் தேக்க நிலைக்குள் நுழைந்தது. இந்த நெருக்கடியை 2007–2009 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை மேலும்தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு இன்னும் அசமத்துவமானதாகவும், பலவீனமானதாகவும் ஆனது. இதன் காரணமாக அமெரிக்கா 21ஆம் நூற்றாண்டில் மூன்று பெரிய நிதி வீழ்ச்சிகளை அனுபவித்தது:

1. 2000 இல் தொழில்நுட்ப பங்குச் சந்தை வீழ்ச்சி

2. 2007–2009 இல் வீட்டு கடன் குமிழியின் வெடிப்பால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி

3. 2020 இல் கோவிட் 19 பெருந்தொற்றினால் தூண்டப்பட்ட ஆழமான மந்தநிலை

பாசிசமும், நவ-பாசிசமும்

பெரும் மந்தநிலையின் தாக்கத்தில் முதலாளித்துவ உலகம் சிக்கித் தவித்த 1930களில் என்னநடந்ததோ, அதுவே இன்றும் நடக்கிறது.

தற்போதைய முரண்பாடுகளுக்கு வழிமுறைகளைக் கண்டுபிடிக்க நவ-பாசிசக் குழுக்களின் மூலம் முதலாளித்துவம் முயல்கிறது. நவ-தாராளமய நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் அரசியல் விளைவே நவ-பாசிசம் ஆகும்.

நவ-தாராளமய நெருக்கடியால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி உணர்வினைச் சுரண்டிட,நவ-பாசிச சக்திகளும் அதிதீவிர வலதுசாரிகளும் தம் ஜனரஞ்சக வாய்ச்சவடாலைப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நவ-தாராளமய கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெ

டுக்கிறார்கள்.நவ-பாசிச கட்சிகள் தம் அரசியல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேர்தல்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதுபழைய பாணி பாசிசத்திலிருந்து மற்றொரு வேறுபாடாகும். ஆட்சிக்கு வந்த பின்னரும் அவை தேர்தலைக் கைவிடுவதில்லை.

தேர்தல் முறையைப் பராமரித்துக் கொண்டே, எதிர்க் கட்சிகளைஒடுக்கவும் ஆதாயங்களைத் திரட்டவும் சர்வாதிகார முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். அரசுக் கட்டமைப்பிற்கு உள்ளிருந்தே இயங்கி, அதில் நீண்டகால - தங்களுக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நவ-பாசிச திருப்பம்

பெரும் நிதி நெருக்கடி அமெரிக்க நிதி தன்னலக்குழு மற்றும் அரசியல் அமைப்பு முழுமைக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. லெஹ்மான் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் சரிவுக்குப் பின் முழு நிதி அமைப்பும் தள்ளாடியதால், அமெரிக்க மத்திய வங்கி முன்னிலையில் மிகப்பெரும் அளவிற்குநிதியை வாரியிறைத்து மீட்பு முயற்சி அரசால்ஆரம்பிக்கப்பட்டது. நிதி மூலதனத்தை நிலைநிறுத்தஅரசுப் பணம் அச்சிடப்பட்டு சந்தையில் டிரில்லியன் டாலர்களைச் செலுத்தியது.

பெரும் நிதி நெருக்கடியின் காலத்தில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்துக்கு மிகவும் அச்சமூட்டிய விஷயம் என்னவென்றால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரங்கள் ஆழ்ந்தமந்தநிலைக்குள் விழுந்திருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம் மிகச்சிறிதளவே தடுமாற்றத்தை சந்தித்துமீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டதுதான். சீனாவின் தடுக்க முடியாத வளர்ச்சி, டாலரின்மேலாதிக்கத்தையும் அமெரிக்க ஏகபோக நிதி மூலதனத்தின் நிலையையும் அச்சுறுத்தத் தொடங்கியது.

பெரும் மந்தநிலையின் முடிவில் ஜனநாயகக் கட்சிவேட்பாளர் பாரக் ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயத்தில், வலதுசாரி தீவிர அரசியல் இயக்கமும் திடீரென எழுந்தது. இந்த இயக்கத்தின் பிடிமானம் பெரும்பாலும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தில் இருந்தது.

டீ பார்ட்டி இயக்கம்

அந்தப் பின்னணியில் “டீ பார்ட்டி இயக்கம்” உருவானது. தொடக்கத்தில் ஒரு விடுதலை நோக்கமுடைய இயக்கமாக இருந்ததை பெரும் மூலதனம்தன்வசப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி பில்லியனர்களான கோக் சகோதரர்கள் உருவாக்கிய செல்வந்தர் கூட்டமைப்பு இதற்குநிதியுதவி அளித்தது. இதன் விளைவாக ரிபப்ளிக்கன் டீ பார்ட்டி உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசின் மக்கள் நலச் செலவினங்களைத் தடுப்பதுடன், இன வெறுப்புச் சதிகோட்பாடுகளையும் இந்த இயக்கம் பரப்பியது.

டீ பார்ட்டி இயக்கம் அடிப்படையில் ஒரு மக்கள் இயக்கம் அல்ல; அது வலதுசாரிகளின் அரசியல்பொம்மலாட்டமாகும். ஏகபோக நிதி மூலதனத்தின் பிரிவுகள் தங்கள் நலனுக்காக வெள்ளை கீழ்த்தட்டு நடுத்தரவர்க்கத்தை இயக்கும் திறனை இது வெளிப்படுத்தியது. இவ்வகுப்பினர் நவீன தாராளவாதத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், தேசியவாதம், இனவாதம் மற்றும் பாலினப் பாடுஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவர்கள்.

2016 இல் இது டிரம்ப்பின் “மேக் அமெரிக்கா கிரேட் அகெயின் (MAGA)” என்ற இயக்கமாக மாறியது.இது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் மற்றும் இயக்கத்தில் இணைந்த கீழ்த்தட்டு நடுத்தரவர்க்கத்தின் நெருக்கமான கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட முழுமையான நவ-பாசிச அரசியல் அமைப்பாகும். இதன் விளைவாகவே டிரம்ப் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

நவ-பாசிசத்தை ஆதரிக்கும் பெரும் மூலதனம்

அமெரிக்க ஏகபோக மூலதன வர்க்கத்தில் மையப்படுத்தப்பட்டுள்ள உலகளாவிய உபரி மதிப்பின் காரணமாக, அதற்கு ஈடு செய்ய முடியாத ஒரு நிதி தன்னலக்குழுவிற்கு அரசின் ஆதரவுதேவைப்படுகிறது. உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபத்திற்கும் சொந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அமெரிக்க இராணுவச் செலவுகளே பெரிதும்உதவுகின்றன. டிரம்ப்பின் அரசியலுக்கான முக்கிய ஆதரவு பங்குச்சந்தை நிறுவனங்கள் மூலமாகவும், தனியார் பில்லியனர்கள் மற்றும் தனியார் இக்விட்டி நிறுவனங்களிடமிருந்தும் வந்தது.

2024 தேர்தலுக்கான அவரது முக்கிய நிதியுதவியாளர்களாக டிம் மெலன், ஐக் பெர்ல்மட்டர், பீட்டர் தியல், மார்க் ஆண்ட்ரீசன், பென் ஹோரோவிட்ஸ், மிரியம் அடெல்சன், ரிச்சர்ட் யூஹ்லைன் மற்றும் எலான் மஸ்க் போன்ற உலகின் முன்னணி பில்லியனர்கள் இருந்தனர். பில்லியனராக இருந்தாலும் டிரம்ப் ஒரு முகமூடி மட்டுமே — ஒரு “தேசிய-மக்கள் இயக்கம்” என்ற போர்வையின் கீழ் நடக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல்-இடமாற்றத்தின் பிரதி

நிதியாகவே அவர் உள்ளார்.

2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க அரசியல் முழுவதுமாக வலதுசாரி திருப்பத்தை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது. இன்று, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவு நவ-பாசிச ஆட்சியின்சித்தாந்த-அரசு இயந்திரத்தை வெளிப்படையாகக் கட்டுப்படுத்துகிறது. மூலதனம்கோலோச்சும்சமூகத்தில் அரசியல்வாதிகள் சுதந்திரத்தை முன்வைப்பதில்லை; அவர்கள் வாக்காளர்களுக்காக அல்ல, நிதி மூலதன சக்திகளுக்காகவே செயல்படுகிறார்கள்.

இத்தகைய சூழலில், வர்க்கப் போராட்டத்தின் தீவிரமும் சோசலிச முழக்கங்களின் தேவையும் அதி

கரித்து வருவதை உழைக்கும் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.