சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம்
14 Aug 2026, 11:09 pm

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம்

சென்னை, ஆக. 14- 80-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை வழக்கறிஞர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் அது பாடப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நடைமுறையாகும். தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை, கூட்டாச்சி, அரசியலமைப்பு மாண்பு மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாதது அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளுக்கு எதிரானது எனச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மாநில அரசின் கீழ் செயல்படும் கீழமை நீதிமன்றங்கள் உட்பட தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும் சுதந்திர தின விழாக்கள் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உயர்நீதிமன்ற நிர்வாகம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ. கோதண்டம் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ச. சிவக்குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.