விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும்! – முதலமைச்சர் அறிவிப்பு
yesterday

கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு பினவருமாறு:

“நமது அரசு பொறுப்பேற்ற மே 10-ஆம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாக சேவையாற்றி வருகிறது. மக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மதித்து, சட்டத்திற்குட்பட்டு மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான சூழலை இந்த அரசு உறுதிப்படுத்தி வருகிறது.

ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் தங்களது வாழ்வாதாரம். உரிமைகள் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு உரிய அனுமதிகள் மறுக்கப்பட்டதோடு. இன்று வரையிலும் அவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகளால் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

உழவர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக விளங்கும் சமூகத்தின் முதுகெலும்பாகப் போற்றப்பட வேண்டியவர்கள் ஆவர். அவ்வாறான உழவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. அதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள்மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. அதேபோன்று, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள்மீதும் முந்தைய அரசால் மனிதநேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கல்வியின் ஒளியை ஏற்றி சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்கள் நாட்டின் வளர்ச்சியின் அடித்தளமாக உள்ளனர். ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராடியபோதும், அவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் கோரிக்கைகளுக்காக விவசாயிகள் ஆசிரியர்கள் மற்றும் அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும். அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்.

இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.