ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு
10 hours before

ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு

கோவை, செப்.14-கோவையில், பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கோவை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சனியன்று புகார்அளிக்கப்பட்டது.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காஞ்சிகோணம்பாளையம்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளைப் பறிமுதல் செய்வதற்காக, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீஸ் குழுவினர் ஞாயிறன்று மாலைதவசியை ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளைத் திடீரென எடுத்த தவசி, ஆய்வாளர் சுவர்ணவள்ளியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

அங்கிருந்து அவர் தப்பியோட முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் அவரைத் தடுக்க முயன்றனர். அப்போது, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசாரின் உயிருக்கு ஏற்பட்டஉடனடி ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தவசியின் இடது காலில் குண்டு பாய்ந்தது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.