தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காசாவின் 99 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதிகள் நச்சு மாசுபாட்டால் சீரழிந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

1 hour before
காசாவின் 99 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதிகள்  நச்சு மாசுபாட்டால் சீரழிந்துள்ளதாக  ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இஸ்ரேல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் காசா பகுதி சுற்றுச்சூழல் பேரழிவைச் சந்தித்துள்ளது. இஸ்ரேலின் வெடிகுண்டுகள் மற்றும் தீப்பற்ற வைக்கும் ஆயுதப் பயன்பாட்டால் காசாவின் 99 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்பாம் (Oxfam) தொண்டு நிறுவனமும், மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பும் (CEOBS) இணைந்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

குடிநீர், உணவு, காற்று, மண் என அனைத்தும் நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதால், 23 லட்சம் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆக்ஸ்பாம் சர்வதேச நிர்வாக இயக்குநர் அமிதாப் பெஹர் கூறுகையில், “காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக, அங்குள்ள சுற்றுச்சூழலின் மீதும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் போர்க்குற்றங்களாகும். மேலும், தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இவை வாழ்வாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் நேரில் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், செயற்கைக்கோள் படங்கள், தொலைநிலை உணர்தல் தொழில்நுட்பம், அறிவியல் ஆய்வுகள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

காசா முழுவதும் பரவிய நச்சு மாசு

குண்டுவீச்சுகள், கட்டட இடிபாடுகள், தீ விபத்துகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றால் உருவாகும் நச்சுப் பொருட்கள் காசா மக்களின் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் நீரிலும், உண்ணும் உணவிலும் கலக்கின்றன.

குண்டுவெடிப்புகளாலும் கட்டடங்கள் இடிக்கப்படுவதாலும் வெளியேறும் மாசுப் பொருட்கள் இடிபாடுகளிலும் மண்ணிலும் படிகின்றன. காற்று, வாகனப் போக்குவரத்து மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் மூலம் இவை மீண்டும் காற்றில் பரவுகின்றன. காசா நகரம், ஜபாலியா மற்றும் வடக்கு காசா ஆளுநரகப் பகுதிகளில் நச்சு மாசின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

6.1 கோடி டன் கட்டட இடிபாடுகள்

2025 அக்டோபர் 11ஆம் தேதி நிலவரப்படி, காசாவின் மொத்தப் பரப்பளவான 365 சதுர கிலோமீட்டரில் சுமார் 283 சதுர கிலோமீட்டர் பகுதி இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது காசாவின் மொத்தப் பரப்பளவில் 78 சதவிகிதமாகும்.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் மதிப்பீட்டின்படி, 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்களால் காசாவில் சுமார் 6.1 கோடி டன் கட்டட இடிபாடுகள் குவிந்துள்ளன. தற்போது காசாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 29 டன் இடிபாடுகள் என்ற அளவில் இது உள்ளது.

இந்த இடிபாடுகளை அகற்றுவதற்கு சுமார் 21 லட்சம் லாரிப் பயணங்கள் தேவைப்படும். பூமியின் சுற்றளவை 736 முறை சுற்றி வருவதற்குச் சமமான தொலைவை இந்த லாரிகள் கடக்க வேண்டியிருக்கும் என ஆக்ஸ்பாம் மதிப்பிட்டுள்ளது.

காசாவின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பலமுறை இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீர் ஆதாரங்கள் கடும் பாதிப்பு

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவின் குடிநீர் விநியோகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபருக்கு முன்பு நாளொன்றுக்கு 3,34,107 கன மீட்டராக இருந்த குடிநீர் விநியோகம், 2024 ஜூன் மாதத்தில் 54,747 கன மீட்டராகக் குறைந்தது. இது சுமார் 84 சதவீத வீழ்ச்சியாகும்.

2026 ஏப்ரல் மாதத்தில் அவசரகாலப் பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு நீர் விநியோகம் நாளொன்றுக்கு 1,30,315 கன மீட்டராக அதிகரித்தாலும், போருக்கு முந்தைய அளவைவிட இன்னும் 61 சதவீதம் குறைவாகவே உள்ளது.

காசாவின் 61 நீர்த்தேக்கங்களில் 9 மட்டுமே செயல்படுகின்றன. அவற்றில் உள்ள நீரைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 18 லிட்டர் மட்டுமே வழங்க முடியும்.

நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சியது, கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவியது, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் விவசாயக் கழிவுகள் ஆகியவை நீர் மாசுபாட்டை மேலும் அதிகரித்துள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவின் ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் நாளொன்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன மீட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இது ஒலிம்பிக் அளவிலான 16 நீச்சல் குளங்களை நிரப்புவதற்குச் சமமாகும்.

விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் சீர்குலைவு

போருக்கு முன்பு காசா மக்களுக்குத் தேவையான புதிய காய்கறிகளில் சுமார் 95 சதவிகிதத்தை அங்குள்ள விவசாயப் பண்ணைகளே உற்பத்தி செய்தன. ஆனால், 2025 இறுதிக்குள் காசாவின் விவசாய நிலங்களில் 87 சதவிகிதத்துக்கும் அதிகமானவை சேதமடைந்துள்ளன. வெறும் 3 சதவீத விவசாய நிலங்கள் மட்டுமே பாதிப்பின்றி பயன்பாட்டுக்குக் கிடைத்துள்ளன.

7,200-க்கும் அதிகமான பசுமைக் குடில்கள் (Greenhouses) சேதமடைந்துள்ளன. பாலஸ்தீனியர்களின் பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து விநியோகித்து வந்த மையங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

2024 அக்டோபர் நிலவரப்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான ஆலிவ் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

2026 ஜூலை நிலவரப்படி, காசாவில் சுமார் 12 லட்சம் பேர், அதாவது மக்கள்தொகையில் 59 சதவிகிதத்தினர், கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது அதைவிட மோசமான பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் முற்றிலும் முடக்கம்

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடுமையாக சரிந்துள்ளது. விவசாயப் பண்ணைகள், தொழிற்பட்டறைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதால் மக்கள் வருமானத்தையும் மீண்டும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்.

காசாவின் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டவற்றில் 92 சதவீதம் சேதமடைந்துள்ளன. அவற்றில் 72 சதவீதம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. இணைந்து நடத்திய மதிப்பீட்டின்படி, 2025 அக்டோபர் வரையிலான நேரடி உட்கட்டமைப்புச் சேதம் 35,200 கோடி டாலராகவும் (ரூ.₹29.4 லட்சம் கோடி), பொருளாதார இழப்பு 22,700 கோடி டாலராகவும் (ரூ.18.95 லட்சம் கோடி) உள்ளது.

காசாவை மீண்டும் கட்டமைக்க அடுத்த பத்தாண்டுகளில் 71,400 கோடி டாலர் (ரூ.59.62 லட்சம் கோடி) தேவைப்படும் என்றும், இதில் முதல் 18 மாதங்களில் மட்டும் 26,300 கோடி டாலர் (ரூ.21.96 லட்சம் கோடி) தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

நோய்களும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளும்

காசாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் சுவாச நோய்கள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் அதிகரித்துள்ளன.

2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான தீவிர சுவாசத் தொற்று பாதிப்புகளும், 81 ஆயிரம் தீவிர நீர்ப்போக்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2025ஆம் ஆண்டில் மட்டும் 4.96 லட்சத்துக்கும் அதிகமான தீவிர நீர்ப்போக்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2024ஆம் ஆண்டு காசாவின் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் ஒரு குழந்தைக்குப் பக்கவாதத்தை ஏற்படுத்தும் போலியோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சுகாதார மையங்களின் நீரிலும் பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணையம் 2025 செப்டம்பரில் தெரிவித்திருந்தது. சர்வதேச நீதிமன்றத்திலும் இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கு விசாரணையில் உள்ளது.

காசாவில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையான, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆக்ஸ்பாம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், நச்சுப் பாதிப்புகளைக் கண்டறிந்து மக்களைப் பாதுகாப்பது, மாசடைந்த பகுதிகளைச் சீரமைப்பது, அபாயகரமான கழிவுகளை அகற்றுவது, குடிநீர் மற்றும் விவசாயக் கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குவது உள்ளிட்ட ஐந்து கட்ட மீட்புத் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.

போரின் அழிவுகள் கட்டடங்களோடு முடிந்துவிடவில்லை; காசாவின் மண்ணையும் நீரையும் காற்றையும் நச்சாக்கியிருப்பதால், பாலஸ்தீன மக்களின் எதிர்காலத் தலைமுறைகளும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.