குடகு மலையில் பிறந்து... தமிழ் மண்ணில் தவழ்ந்து... - நாகை மாலி
30 Jul 2026, 10:08 pm

குடகு மலையில் பிறந்து... தமிழ் மண்ணில் தவழ்ந்து... - நாகை மாலி

இயற்கையின் கொடை மலைகள். உலகின் உயரமான சிகரங்களைக் கொண்டது இமய மலை. மேற்குத் தொடர்ச்சி மலை இந்திய நாட்டின் மிக முக்கியமான மலைத் தொடர் ஆகும். இதில் 126 சிறிய மற்றும் பெரிய ஆறுகளாக உற்பத்தி யாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவா கும் நதிகளில் காவிரிக்கு தனிச் சிறப்புண்டு. காவிரி ஆற்றின் பெருமையை கம்பராமாயணத்தில் காண்டங் கள் தோறும் கம்பர் பாடியுள்ளார். கங்கைக்கரை கதை வால்மீகி ராமாயணம் எனில், காவிரிக்கரை கதை கம்ப ராமாயணம் ஆகும். காவிரி நாடு எனில் அது கழனிகள் உள்ள நாடு என்கிறார் கம்பர். காவிரி ஆற்றை அது பிறப் பெடுத்த இடம் முதல் கலக்கும் கடல் வரை விரிவாகப் பாடி, தமிழ் பண்பாட்டின் அடையாளமாக கம்பர் சித்த ரிக்கிறார். காவிரி குறிஞ்சியில் தொடங்கி, முல்லையில் நடந்து, மருதத்தில் விளைச்சலைத் தந்து, நெய்தலில் கலந்து, பாலையை இல்லாமல் ஆக்குகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையானது மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னி யாகுமரி மாவட்டம் வரை 1600 கி.மீ. நீளமும், 1,29,037 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற பெரிய ஆறுகளும், வைகை, பெரியாறு, தென்பெண்ணை போன்ற சிற்றா றுகளுமாக 126 ஆறுகள் இங்கு உற்பத்தியாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான நதிகள் உருவாகி ஓடினாலும், காவிரி பிறப்பிடத்தில்தான் அதிக அளவு மழை பெய்கிறது. சிரபுஞ்சிக்கு அடுத்து அதிக மாக மழை பொழியும் இடம் காவிரியின் பிறப்பிடமாகும். காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு ‘சோழவனம்’ என்று பெயர். காவிரி தனது ஓடுபாதையை பலமுறை மாற்றியிருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ‘கா’ என்றால் சோலை என்றும், ‘விரி’ என்றால் விரி வடைதல் என்றும் பொருள். சோலைகள் விரிந்த இடம் காவிரி என்று அழைக்கப்படுகிறது. காவிரி உருவாக்கிய வளமை ‘டெல்டா’ (வண்டல் படிந்த வளமான மண்) என அழைக்கப்படுகிறது. எகிப்தின் நைல் நதி உருவாக்கிய வளமைக்கு நிகரானது காவிரியின் டெல்டா பகுதி யாகும்.

மேட்டூர் அணை வரலாறு

காவிரி மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ‘குடகு’ என்ற இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் உற்பத்தி யாகிறது. சோழர்கள் ஆட்சி நீண்டகாலம் நீடித்ததற்கு காவிரி தந்த வளமே முதல் காரணம். சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் முழு மையாக வந்ததற்கான அடையாளச்சான்றாகத்தான், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதி அமைந்துள்ள இடத்தி ற்கு இன்றும் ‘சோழவனம்’ என்றே பெயர். 1956-இல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது குடகு மாநி லம் கர்நாடகத்தோடு இணைக்கப்பட்டது. குடகு பகு தியில் வாழ்ந்தவர்கள் குடகர்கள் என்றழைக்கப் பட்டனர். சுதந்திர இந்தியாவின் முதல் இராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா குடகர்தான் என்ற பெரு மையும் உண்டு.

குடகிலிருந்து தொடங்கும் காவிரி, தலைக்காவி ரியாக வெளிப்பட்டு மைசூர் அருகிலுள்ள ‘கிருஷ்ண ராஜசாகர்’ அணையை அடைகிறது. கர்நாடக எல்லை மேகதாட்டு பகுதியுடன் முடிகிறது. மேகதாட்டு வில்தான் கர்நாடகா தடுப்பணைகட்டி தமிழகத்தை அழிக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. மேக தாட்டு, ஒகேனக்கல்லிலிருந்து 15 கி.மீ., மேட்டூரி லிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. காவிரியின் பயணப்பாதையானது தொடங்கும் மலை முதல் சென்று சேரும் கடல்வரை 800 கி.மீ. ஆகும். கர்நா டகத்தில் 320 கி.மீ., தமிழகத்தில் 416 கி.மீ., எல்லையில் 64 கி.மீ. பாய்ந்தோடுகிறது. தமிழகத்தில்தான் காவிரி அதிகதூரம் பயணிக்கிறது. எனவே, காவிரியில் தமிழ கத்திற்கே அதிக சொந்தம் உள்ளது எனலாம்.

காவிரியைத் தடுத்து அணை கட்டும் திட்டத்தை முதலில் 1828-இல் ஆராய்ந்தவர் பொறியாளர் ஆர்தர் காட்டன். மேஜர் லா போர்டு என்பவர் 1856-இல் ஒரு திட்டத்தை உருவாக்கினார். ஆர்தர் காட்டன் உரு வாக்கிய திட்டத்திற்கு 1910-இல் அரசு ஒப்புதல் வழங்கி யது. 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1925-இல் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம்தான் மேட்டூர் அணைத் திட்டமாகும். மேட்டூர் அணைக்காக கையகப்படுத்தப் பட்ட நிலத்தின் அளவு 18 லட்சத்து 43 ஆயிரத்து 584 ஏக்கர் ஆகும். இதற்காக காலி செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 146 ஆகும். 21 கிராமங்கள் முற்றிலுமாக காலி செய்யப்பட்டன. இதற்கான இழப் பீட்டுத் தொகை 29 லட்சத்து 66 ஆயிரத்து 284 ரூபாய் மட்டுமே ஆகும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தோடு இழப்பீட்டுத் தொகையை ஒப்பிட்டால் ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் 50 காசுகள்தான் அன்றைக்குத் தரப்பட்டது. 1800 குடிசைகள் அமைத்து, நாளொன்றுக்கு 11 ஆயி ரத்து 800 பேர் ஆண்களும் பெண்களும் உழைத்து, ஆண்களுக்கு 7 அணாவும் பெண்களுக்கு 4 அணாவும் கூலியாகக் கொடுத்து உருவாக்கப்பட்டதுதான் மேட்டூர் அணை.

பொங்கிவரும் வெள்ளத்தில் அணை கட்டுவது என்பது எளிதானதல்ல. 1930-ல் பெருக்கெடுத்த வெள் ளம் அணையின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரம் இல்லை என்றாலும், 23 ஆயிரத்து 804 பேர் காயம டைந்து மருத்துவ சிகிச்சை பெற்றதாக ஆவணங்க ளில் உள்ளது. இத்தகைய வலிகளையும் வேதனைக ளையும் தாங்கி கட்டப்பட்ட மேட்டூர் அணை 1934 ஆகஸ்ட் 21-இல் அன்றைய சென்னை மாகாண ஆளுநர் ஸ்டான்லியால் திறந்துவைக்கப்பட்டது. மேட்டூர் அணை ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடிக் கப்பட்டது. கட்டுமானப்பணிக்கு ஒதுக்கிய நிதி 7 கோடியே 37 லட்சம் ஆகும். ஆனால் செலவான தொ கையோ 6 கோடியே 60 லட்சம்தான். ஒதுக்கீட்டில் மிச்சம் 70 லட்சம். ஆயிரக்கணக்கான மக்களின் தியாகத்தா லும் உழைப்பாலும் உருவானதுதான் மேட்டூர் அணை யும் அதையொட்டிய அடுத்தடுத்த வளர்ச்சியுமாகும்

கல்லணையின் சாதனை

இந்தியாவின் புகழ்மிக்க கங்கைக் கால்வாய் திட்டத்தை உருவாக்கிய பேயர் ஸ்மித், 1853-இல் கல்ல ணையைப் பார்த்து வியந்துபோகிறார். அவர் எழுதிய ‘தென்னிந்தியாவின் பாசனம்’ எனும் நூலில் மானுடத்தின் மகத்தான பொறியியல் சாதனை எனக் கல்லணையைக் குறிப்பிடுகிறார். ஆர்தர் காட்டன் கல்லணை குறித்த ஆய்வுகளைத் தொடங்கி, 1839-இல் கோடைகாலத்தில் அணையைப் பிரித்து பார்க்கத் தொடங்கினார். 12 அடி ஆழத்திற்கு அணை தோண் டப்பட்டபோது, பெரும் பாறைகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இரண்டு பாறைகளை இணைப்பதற்கு எவ்வித கான்கிரீட் கலவைகளும் பயன்படுத்தப்படாமல், பாறைகளை ஒட்ட ஒருவித களிமண் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தார்.

டற்கரையில் கடல் அலைகள் பாதத்தைத் தொட்டு விட்டுச் செல்லும்போது பாதம் மண்ணுக்குள் இறங்கு வது போன்ற தொழில்நுட்பத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. ஓடும் நீரில் பெரும் பெரும் கற் களைத் தூக்கிப் போடுவது மண்ணின் அரிப்புக்கு கீழே சென்றுவிடும் என்பதால், ஆழங்காண முடியாத மணற் படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 40 முதல் 60 அடி வரை ஆகும். நீரின் வேகத்தில் அணை உடைந்துவிடக்கூடாது என்ப தற்காக பாம்பு போல நெளிவுகளுடன் இது கட்டப் பட்டுள்ளது. கல்லணையை கட்டியவர் கரிகால் பெரு வளத்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏரா ளம். தமிழகத்தின் பாசன வரலாற்றில் தனக்கென ஒரு அழியா இடம்பிடித்த சர் ஆர்தர்காட்டன், கல்ல ணைக்கு ‘மகத்தான அணை’ (Grand Anicut) எனப் பெயரிட்டு வியந்து போற்றினார்.

நதிநீர் உரிமையும் சிக்கல்களும்

தமிழ்நாட்டில் 33 பெரிய நதிப்படுகைகளும், 39,000 ஏரிகளும், 75 நீர்த்தேக்கங்களும் உள்ளன. 1971-ஆம் ஆண்டின் கணக்கின்படி, தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் பாசனப்பரப்பு 28,20,800 ஏக்கர்களாகவும், கர்நாடகத்தில் 6,68,000 ஏக்கர்களாகவும், கேரளத்தில் 6,300 ஏக்கர்களாகவும் மொத்தமாக 34,95,100 ஏக்கர் கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் தொன்றுதொட்டு பாசன வசதி பெற்றுவரும் காவிரி நீர்ப்பாசன உரிமை பெற்ற நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற விதி முறைகளைக் கருத்தில் கொள்ளாமல், கர்நாடக மாநி லம் புதிய பாசன கால்வாய்களையும் புதிய திட்டங்க ளையும் உருவாக்கியதால்தான் சர்ச்சைகள் உருவாகி யுள்ளன.

உலக அளவில் நைல், அமேசான், யாங்சே, மிசிசிபி போன்ற பல நதிகள் நாடுவிட்டு நாடு பாய்கின்ற போதி லும், எந்த சிக்கலும் இல்லாமல் நதிநீர் பங்கீடு முறைப் படுத்தப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியை சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கிடையே முறையாகப் பங்கீடு செய்யமுடிகிறது. ஆனால், இந்தி யாவிற்குள் மாநிலங்களுக்கிடையில் தீர்க்கப்படாமல் உள்ள தண்ணீர் வழக்குகளின் எண்ணிக்கை 26 ஆகும். காவிரி நதிநீரைப் பெற்றுக்கொடுக்காத ஒன்றிய அரசுதான், தமிழகத்திற்கு உரிமையே இல்லாத கங்கை நீரைக் கொண்டுவந்து கொடுக்கப்போகிறதா?

சர்வதேச நதிக்கொள்கையானது நதியின் பாரம் பரிய பயன்பாடு, நீர்ப்பாசன பரப்பு மற்றும் பாய்ந்தோ டும் நதியின் நீளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நதிநீரைப் பங்கிட வலியுறுத்துகிறது. கல்ல ணையைக் கட்டி இரண்டாம் நூற்றாண்டிலேயே பாசன முறைகளைக் கண்டவர்கள் தமிழர்கள்; பாசனப்பரப் பும் தமிழ்நாட்டில்தான் அதிகம்; பாய்ந்தோடும் நதி யின் நீளமும் தமிழகத்தில்தான் அதிகம்.

காவிரியாறு கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காகவே தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அடம்பிடித்து காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டத் திட்டமிட்டு, தஞ்சை மண்ணை பாலைவன மாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசையும், இரண்டு மாநி லங்களுக்கும் நீர் வழங்கவேண்டிய ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல் சித்து விளை யாட்டையும் எதிர்த்து ஒன்று திரண்டு குரல் எழுப்பு வோம்! தகவல் ஆதாரம்: எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதிய “காவிரி நீரோவியம்”