இயற்கையை வென்ற மனிதன்… வாழ்வை இழக்கிறானா? வனம் சொல்லும் மௌனக் குரல்
14 Aug 2026, 10:29 pm

இயற்கையை வென்ற மனிதன்… வாழ்வை இழக்கிறானா? வனம் சொல்லும் மௌனக் குரல்

“காட்டில் நான் கண்டது மரங்களையும் விலங்குகளையும் மட்டுமல்ல; மனிதனின் அலட்சியத்தால் மெதுவாக உயிரிழந்து கொண்டிருக்கும் ஒரு இயற்கையைத்தான்!”இயற்கை என்பது மனிதன் வாழ்வதற்கான ஆதாரம் மட்டுமல்ல; உயிரோடு இருப்பதற்கான மூச்சும் கூட. ஆனால், ‘வளர்ச்சி’ மற்றும் ‘பொழுதுபோக்கு’ என்ற பெயரில் மனித சமுதாயம் இயற்கையை நாளுக்கு நாள் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

மனதை உலுக்கிய ஒரு செய்திசெய்தித்தாளில் படித்த ஒரு துயரச் செய்தி என் மனதை மிகவும் உலுக்கியது. கர்ப்பமாக இருந்த ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வில், அதன் வயிற்றுக்குள் பல கிலோ மக்காதபிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. தன் குட்டியை சுமக்க வேண்டிய வயிற்றில், மனிதன் வீசிய பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்தன என்ற செய்தி ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. “நாம் அலட்சியமாக வீசும் ஒரு பிளாஸ்டிக்பை, ஒரு உயிரின் இறப்பிற்கு காரணமாகலாமா?” என்ற கேள்வி என்னைத் தொடர்ந்து துரத்தியது.

அந்த கேள்விக்கான பதிலைத் தேடி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ‘வைல்ட் விங்ஸ் வனப் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நல அறக்கட்டளை’ அமைப்பின் தன்னார்வலர்களுடன் இணைந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பயணிக்கத் தொடங்கினேன்.அழகிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனைபண்ணாரி, திம்பம், கேர்மாளம், கடம்பூர், குன்றி, டி.என்.பாளையம், விளாத்திகொம்பை, ஏலத்தூர் குளம்,மல்லியம்மன் பள்ளத்தாக்கு எனப் பல பகுதிகளில் களப்பணியாற்றியபோது வனத்தின் நிஜ முகம் தெரிந்தது.

சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட் உறைகள், குடிநீர் பாட்டில்கள், சுக்குநூறாக உடைந்த மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பழைய செருப்புகள், வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் மற்றும் வாகன டயர்கள் என வனத்தின் மடியில் மனிதனின் குப்பைகள் குவிந்துகிடந்தன.

தலைவர் பாலகுமார் தலைமையில், வார இறுதி நாட்களில் பிளாஸ்டிக் அகற்றும் பணிகளில் ஈடுபட்டோம். பண்ணாரி வனப்பகுதியில் ஒரே நாளில் பாறைகளுக்கிடையிலும்,மரங்களின் வேர் இடுக்குகளிலும் இருந்து நாங்கள் சேகரித்த மக்காத கழிவுகளின் எடை சுமார் 2 டன். 2 டன்என்பது வெறும் எண் அல்ல; அது 2 டன் மனித அலட்சியம்!விலங்குகளின் மரணப் பொறிகடம்பூர் மலைப்பாதையில் மல்லியம்மன் கோயில் அருகே குரங்குகள் உணவிற்காக காத்திருக்கின்றன. மனிதர்கள் வீசும் பிஸ்கட், சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் கற்பூர டப்பாக்களை உணவின் வாசனைக்காக அவை உட்கொள்கின்றன. உணவின் வாசனை வீசும் பிளாஸ்டிக் கவர்களை குரங்குகள் கிழித்து கடிப்பதுடன், பிளாஸ்டிக் பைகள்அவற்றின் தலையிலும் கழுத்திலும் மாட்டிக்கொண்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.மேலும், சுற்றுலாப் பயணிகள் தரும் துரித உணவுகளால் வனவிலங்குகள் இயல்பாக இரை தேடும் பழக்கத்தை இழந்து, மனிதர்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

யானை வழித்தடங்களிலும், மல்லியம்மன் பள்ளத்தாக்கு பகுதியிலும் யானை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உணவென்று நினைத்துவிழுங்குகின்றன. இது ஒரே நாளில் நடப்பதில்லை. தினமும் சிறிது சிறிதாக வயிற்றுக்குள் சேரும் பிளாஸ்டிக், செரிமானத்தைத் தடுத்து, பசி இருந்தும் சாப்பிட முடியாமல், வலியை வெளியே சொல்ல முடியாமல் விலங்குகளை மெல்ல மெல்லக் கொல்கிறது. மனிதனுக்கு வரும் புற்றுநோயைப் போல, பிளாஸ்டிக்வனவிலங்குகளுக்கு கொடூரமான வேதனையை தருகிறது.

மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை

வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் இத்தகைய கழிவுகளை உருவாக்குவதில்லை. பொழுதுபோக்குக்காக வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளே இதற்குக் காரணம். மழைநீரில் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன; மண்ணின் வளத்தை கெடுக்கின்றன. அதே நீரைக் குடிக்கும் விலங்குகளும், கீழ்நிலைப் பகுதி மக்களும் நோய்களுக்கு ஆளாகிறார்கள்.வனத்தில் வாழும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்கிறார்கள். அங்கு வசிக்கும் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு வைல்ட் விங்ஸ் அமைப்பு மூலம் பள்ளிச் சீருடை, நோட்டுப் புத்தகங்கள், உணவுப் பொருட்களை வழங்கினோம். வனத்தை உண்மையாக காப்பவர்கள் அந்த மக்களே தவிர, சுற்றுலா வரும் நாமல்ல.

வனம் ஒரு சுற்றுலாத் தலம் அல்ல!

வனம் என்பது சுற்றுலாத் தலம் அல்ல; அது யானையின் வீடு, புலியின் எல்லை, மானின் உணவகம், பறவைகளின் உலகம். விருந்தினராகச் செல்லும் நாம், அங்கு குப்பைகளை விட்டுச் செல்வது பெருந்தவறு.“குப்பைத்தொட்டி இல்லை” என்பது சாட்டப்படும் சாக்கடே தவிர, நியாயமல்ல. கையில் கொண்டு சென்ற பொருளை, காலிப் பையில் திரும்ப எடுத்து வரக்கூடாதா?கடந்த ஓராண்டில், 52 வாரங்களில் 30 வாரங்களுக்கும் மேலாக களப்பணியாற்றி, வனவிலங்குகளுக்கான நீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டோம்.

னிதன் விண்வெளியை வென்றிருக்கலாம்; அறிவியலில் சாதனைகள் படைத்திருக்கலாம். ஆனால், தன்னை வாழவைக்கும் இயற்கையை பாதுகாக்கத் தவறினால் அந்த வெற்றிகள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும்.வனத்திற்கு செல்லும்போது, நீங்கள் கொண்டு செல்லும் குப்பையை மீண்டுமாக உங்களுடனேயே எடுத்து வாருங்கள். அது சிறிய செயல்; ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்றும் மிகப்பெரிய கடமை.“வனத்தில் நாம் விட்டுச் செல்ல வேண்டியது நமது காலடித் தடங்கள்மட்டுமே; பிளாஸ்டிக் கழிவுகள் அல்ல!”- பிரித்தா கிருஷ்ணன்,வைல்ட் விங்ஸ் அறக்கட்டளை, கோபிசெட்டிபாளையம், ஈரோடு