ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை: மியான்மர் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
19 Nov 2026, 6:14 pm

மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம் சமூகமான ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்துள்ளது.

2017ஆம் ஆண்டு மியான்மர் ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை நடவடிக்கையால் 7.3 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றனர். இந்த நடவடிக்கை தொடர்பான வழக்கில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா தலைமையிலான அமர்வு, 9-6 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மியான்மரின் வடக்கு ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டதாகவும், 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் மியான்மர் தனது கடமைகளை மீறியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

சர்வதேச நீதிமன்றத்தில் ஓர் அரசின் மீது இனப்படுகொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அந்நாடு பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாவது இதுவே முதல்முறையாகும். நாஜி படுகொலைக்குப் பிறகு, ஓர் சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை நடைபெற்றதாகத் தீர்ப்பளிப்பது இது நான்காவது முறையாகும்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா 2019ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தொடர்ந்தது. ரோஹிங்கியா மக்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் மியான்மர் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டிய காம்பியா, 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும், இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தது.

ஆனால், அரக்கான் ரோஹிங்கியா விடுதலை ராணுவம் (ARSA) என்ற ஆயுதக் குழுவினர் காவல் நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தங்களது ராணுவ நடவடிக்கை அமைந்ததாக மியான்மர் வாதிட்டது.

மியான்மர் ராணுவத்தினர் 10 ஆயிரம் ரோஹிங்கியா மக்களைக் கொன்றுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக நீதிமன்றத் தலைவர் இவாசாவா தனது மூன்று மணி நேரத் தீர்ப்பு வாசிப்பின்போது குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மியான்மர் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களைக் கொன்றுள்ளனர். பரவலான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் மீதும் கொடூரமான வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர். வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா மக்களையும் தாக்கியுள்ளனர்” என்றார்.

குறிப்பிட்ட சில சம்பவங்களில் மியான்மரின் நடவடிக்கைகள் இனப்படுகொலை நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

மியான்மர் பாதுகாப்புப் படையினர் பரவலாக நிகழ்த்திய கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களைப் பரிசீலித்ததில், ரோஹிங்கியா சிறுபான்மை மக்களில் கணிசமான ஒரு பகுதியினரை அழிக்கும் நோக்கமே இருந்தது என்பதுதான் ஒரே நியாயமான முடிவு என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ராணுவ நடவடிக்கையில் ஆயுதம் ஏந்திய பொதுமக்களும் பங்கேற்றபோது, இனப்படுகொலை நடைபெறுவதற்கான அபாயம் இருப்பதை மியான்மர் அரசு அறிந்திருக்க வேண்டும் என்றும், இனப்படுகொலையைத் தடுப்பதற்கான தனது கடமையை அந்நாடு மீறியுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.

மியான்மரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டிய கடமை அந்நாட்டுக்கு இருப்பதாக நீதிமன்றத் தலைவர் தெரிவித்தார்.

ரோஹிங்கியா மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதில் பின்வரும் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது:

- ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும் தங்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் சொந்த இடங்களுக்குத் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

- சேதப்படுத்தப்பட்ட அனைத்து பொதுச் சொத்துகளையும் மீட்டுத் தர வேண்டும் அல்லது மாற்றாக வழங்க வேண்டும்.

- காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளுக்கு உதவுவதுடன், உயிரிழந்தவர்களை உரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும்.

- உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

- ரோஹிங்கியா மக்கள் மீண்டும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நீதிக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருப்பு

இந்தத் தீர்ப்பில் குறைந்தபட்சம் நான்கு வகையான இனப்படுகொலைச் செயல்களான, பொதுமக்களைப் பெருமளவில் கொலை செய்தல், லட்சக்கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துதல், குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஹேக் நகரிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டுக்கு முன்பே ரோஹிங்கியா மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களைக் கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திலும் ஈடுபடுத்தியதாக செய்தியாளர் தெரிவித்தார்.

“இந்தத் தீர்ப்பு ரோஹிங்கியா மக்களுக்கு மிகவும் முக்கியமானது. எந்தவொரு நீதியும் கிடைக்காமல் அவர்கள் 10 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இனப்படுகொலையை நிரூபிப்பது மிகவும் கடினமானது என்பதால், இந்தத் தீர்ப்பு ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இனப்படுகொலை வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்கம் இருந்தது என்பதை நிரூபிப்பதே மிகவும் கடினமான அம்சம் என்று சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் டோபி கேட்மேன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை செய்யும் குறிப்பிட்ட நோக்கம் ஓர் அரசுக்கு இருந்ததாக சர்வதேச நீதிமன்றம் இதற்கு முன்பு ஒருபோதும் தீர்ப்பளித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

“மியான்மரில் நீண்டகாலமாகத் தாமதமாகி வந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் தொடக்கமாக இந்தத் தீர்ப்பு அமையும் என நம்புகிறோம்” என்று சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனினும், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடாது என்று வழக்கறிஞர் டோபி கேட்மேன் தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்குக் கொண்டுசெல்லப்படுமா, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமா அல்லது தீர்ப்பைச் செயல்படுத்த வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதில்தான் அடுத்தகட்ட முன்னேற்றம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. தகவலின்படி, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 13 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் இன்னும் அகதிகளாகவும் இடம்பெயர்ந்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 12 லட்சம் பேர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

தொடர்ந்து நீடிக்கும் மோதல்கள், குறைந்து வரும் மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆபத்தான கடல் பயணங்கள் ஆகியவற்றால் ரோஹிங்கியா மக்கள் தொடர்ந்து துயரங்களையும் பாதுகாப்பற்ற சூழலையும் எதிர்கொண்டு வருகின்றனர்.