தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்ஸ்டா அரசியலும் புதிய தலைமுறையின் எழுச்சியும் இந்திய ஜனநாயகத்தின் புதிய திருப்புமுனை - ராஜ்தீப் சர்தேசாய்

28 Jul 2026, 10:14 pm
இன்ஸ்டா அரசியலும் புதிய தலைமுறையின் எழுச்சியும் இந்திய ஜனநாயகத்தின் புதிய திருப்புமுனை - ராஜ்தீப் சர்தேசாய்

இன்ஸ்டா அரசியலும் புதிய தலைமுறையின் எழுச்சியும் இந்திய ஜனநாயகத்தின் புதிய திருப்புமுனை - ராஜ்தீப் சர்தேசாய்

நாட்டின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என் பது வெறும் ஒரு அமைச்சரை மட்டும் குறிப்பது அல்ல. சில காலத்திற்கு முன்பு மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் “எதிர்க்கட்சிகள் நிலை குலைந்து விட்டன” என்று கூறியது போல, எதேச்சதிகாரப் போக்குடன் இருந்த மோடி அர சாங்கம், ஒரு தன்னிச்சையான இளைஞர்களின் எழுச்சி காரணமாக அரசியல் ரீதியாக பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை இது முதல் முறையாகக் காட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் ஒரு வருட விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னர் தான் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் இந்த முறையோ அதிரடியாகவும், மிக விரைவாகவும் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இறுதிவரை அரசாங்கத்தால் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு மூத்த மத்திய அமைச்சர், பொது மக்களின் கோபத்திலிருந்து தப்ப முடியவில்லை. மக்களின் அரசியலைத் தாண்டி, கடந்த இரண்டு வாரங்களாக நடந்த நிகழ்வுகள் நினைவு கூரத்தக்கவை. இந்தியாவின் முதல் இன்ஸ்டா அரசியல் மற்றும் ஜென்ஸி எனப்படும் இளைய தலைமுறையின் எழுச்சி புரட்சியின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான பாடங்கள் உள்ளன.

1 இளைஞர்களின் சக்தியை எப்போது குறைத்து மதிப்பிடாதீர்கள்

பல ஆண்டுகளாக இந்தியாவின் இளை ஞர்கள், குறிப்பாக இருபதுகளில் உள்ளவர் களும் இளம் வயதினரும் அரசியலில் அக்கறை இல்லாதவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்ட னர். அவர்கள் அரசியலை விரும்புவதில்லை என்றும், யதார்த்தத்தை விட ஸ்மார்ட்போன் களிலும் ரீல்ஸ்களிலும் மூழ்கிக் கிடப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ முன்னெடுத்த போராட்டங்கள் அந்த ஸ்டீரியோ டைப் கருத்துக்களைத் தலைகீழாக மாற்றி விட்டன. இளைஞர்களை திசைதிருப்பும் சாத னங்களாக வர்ணிக்கப்பட்ட அதே சமூக ஊடகத் தளங்கள்தான், இங்கு மக்களைத் திரட்டும் கருவி களாக மாறின. இன்ஸ்டா ரீல்ஸ்கள், மீம்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூடியூப் லைவ் ஸ்ட்ரீம்கள் ஆகியவை எந்தவொரு அரசியல் கட்சியையும் விட வேகமாகத் தகவல்களைப் பரப்பின. இது சித்தாந்த முதிர்ச்சி பெற்ற மூத்த தலைவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல; தேர்வு ஊழல்களாலும் நிர்வாக திறமை யின்மையாலும் எதிர்காலம் கேள்விக்குறி யாக்கப்பட்ட சாதாரண இளம் முகங்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் தலைவர்கள் வாக்குகள் அல்லது அதிகாரத்திற்காக அலைந்த அரசியல்வாதிகள் அல்ல, மாறாக அதிகாரத்திடம் உண்மையை உரக்கச் சொன்ன சாதாரண இந்திய குடிமக்கள். உண்மையில், அவர்களின் அடையாளம் தெரியாத தன்மையே அவர்களின் மிகப்பெரிய பலமாக மாறியது. அவர்களுக்குப் பாதுகாக்க வேண்டிய அரசியல் சுயமோ, தாஜா செய்ய வேண்டிய கட்சித் தலைவர்களோ, பாது காக்க வேண்டிய சித்தாந்தப் பின்னணியோ இல்லை. தாங்கள் இழப்பதற்கு இனி ஒன்று மில்லை என்று நம்பும் குடிமக்களின் தைரி யத்துடன் அவர்கள் பேசினர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் கொள்ள வேண்டும்: இளைஞர்களை, குறிப்பாக அவர்களின் விரக்தி கூட்டு நடவடிக்கை யாக மாறும் போது, ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்.

2 இந்தியாவின் கல்வி நெருக்கடி இறுதியில் ஒரு அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது

பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள், தாமதமான தேர்வு முடிவுகள், பயிற்சி மையங்க ளின் சுரண்டல் மற்றும் அதிகரித்துக் கொண்டே செல்லும் கல்விக் கட்டணங்கள் ஆகியவை தனிப்பட்ட சம்பவங்களாக கருதி கடந்து செல்லப் பட்டன. எப்போதுமே அடுத்தடுத்த தேர்வுகள் காத்திருந்ததால் மாணவர்கள் சிறிது நேரம் போராடிவிட்டு அமைதியானார்கள். ஆனால் இந்த முறை நிலை மை வேறு. தங்களால் கல்விக் கட்டணத்தைச் செலு த்த முடியாத, லட்சியக் கனவு களுடன் உள்ள லட்சக்கணக்கான இளைஞர் களுக்கு இந்தியாவின் கல்வி முறை தோல்வி யடைந்துவிட்டது என்ற ஒட்டுமொத்த கருத்தை இந்த போராட்டம் ஒருங்கிணைத்தது. கல்விக்கான அணுகல் மட்டுமல்லாமல், அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மையும் ஒரு உண்மையான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது எதிர்காலத் தேர்தல்களையே பாதிக்கலாம்.

ஒவ்வொரு அரசாங்கமும் இந்தியாவின் மக்கட்தொகை வளர்ச்சியின் பலனை (demographic dividend) பற்றிப் பெருமையாகப் பேசுகிறது; ஆனால் அதனுடன் சேர்ந்து வரும் மக்கட்தொகை கவலைகளையும் (demographic anxiety) அது எதிர்கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான லட்சிய இளைஞர்கள் நல்ல வேலைகளைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், ஆனால் மிகக் குறைவான வேலை வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் போராடும் நிலைதான் யதார்த்தமாக உள்ளது.

3 அரசாங்கங்களால் என்றைக்கும் மறுப்பு வாதங்கள் மூலமாகவே ஆட்சி செய்ய முடியாது

கடந்த 12 ஆண்டுகளில் கடுமையான போராட்டங்களுக்கு மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான எதிர்வினை ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. அதாவது, விமர்சகர்களைப் புறக்கணிப்பது, அவர்களின் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவது, சதித்திட்டங்கள் என்று முத்திரை குத்துவது போன்றவற்றைச் செய்து விட்டு ஊடகங்கள் அடுத்த செய்திக்குச் சென்று விடும் என்று காத்திருப்பது. அவர்களை நக்சல்கள், காலிஸ்தானிகள், நகர்ப்புற நக்சல்கள், தேசவிரோதிகள் என்று அழைப்பதை மக்கள் முன்பே பார்த்துள்ளனர். ஆனால் இந்த முறை அந்த வியூகம் தோல்வியடைந்தது. போராட்டக்கா ரர்களை அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்லது தேசவிரோதிகள் என்று சித்தரிக்கும் முயற்சிகள் தகர்ந்து போயின. ஏனெனில் இந்த விஷயத்தில் பிரச்சனை உண்மையானது.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் எவரை யாவது ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் அறியும். திறமையின்மை காரணமாக அல்லாமல், முறை கேடுகளால் ஏற்படும் தொடர்ச்சியான தோல்வி களின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் நிதிச் சுமையை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து வைத்துள்ளனர். தவறுகளை, பாசாங்கு செய்யா மல், ஆரம்பத்திலேயே ஒப்புக்கொள்வதன் மூலமே அரசாங்கங்கள் நம்பகத்தன்மையைப் பெற முடியும். கடைசியாக நடந்த நீட் வினாத் தாள் கசிவு தொடர்பாக தேர்வுகள் மீண்டும் நடத்தப் படுவதை உறுதி செய்வதற்காக மோடி அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டது உண்மைதான். ஆனால், அமைச்சகம் அதற்கான பொறுப்பை ஏற்று, இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறப்பதற்குள் பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது.

4 இந்தியாவில் தலைமை என்பது அதிகார வர்க்கமாக இல்லாமல் எளியவர்களாகவும் இருக்கலாம்

இந்த இன்ஸ்டா அரசியல் இயக்கத்தின் மிக முக்கியமான அம்சம் ஒற்றைத் தலைவன் இல்லாமல் இருந்ததுதான். அதற்குப் பதிலாக டஜன் கணக்கான இளம் அமைப்பாளர்கள் இயற்கையாகவே உருவானார்கள். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் குறிப் பாக இடதுசாரி அமைப்புகள் மற்றும் பீம் ஆர்மி போன்ற குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்ட ங்களை ஒருங்கிணைத்தனர். அவர்கள் சான்று களைத் திரட்டினர், ஊடகங்களுடன் பேசினர், மேலும் அவர்களில் சிலர் மத்திய அமை ச்சர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

இது பெரிய ஆளுமைகளை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட பழைய அரசியல் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. புதிய டிஜிட்டல் ஜென்ஸி தலைமுறை பரவ லாக்கப்பட்ட தலைமையை ஏற்றுக்கொள்கிறது. அங்கு அதிகாரம் என்பது ஒருவரின் வயது, பதவி அல்லது குடும்பப் பின்னணியிலிருந்து வராமல் நம்பகத்தன்மை மற்றும் திறமையிலிருந்து பெறப்படுகிறது. தற்போதும் கூட படிநிலை, ஆதரவு மற்றும் ஆளுமை வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய அரசியல் கட்சிகள், களத்தில் நடக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

5 ஜனநாயகம் இன்றும் செயல்படுகிறது

சமீபத்திய ஆண்டுகளில் பல இந்தியர்கள் போராட்டங்களால் எந்த மாற்றமும் ஏற்படுவ தில்லை, அரசின் நிறுவனங்கள் பதிலளிப்ப தில்லை, பொதுமக்களின் கோபத்தை விட அர சாங்கங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று நம்பத் தொடங்கினர். ஆனால் இந்த இயக்கம் முற்றிலும் மாறுபட்ட செய்தியை வழங்கியது. அமைதியான மற்றும் உறுதியான திரட்டல் முறையானது அதிகாரத்தில் உள்ளவர்களைச் செவிமடுக்க வைத்தது. இது ஒரே இரவில் நடக்க வில்லை; இதற்குத் தைரியம், அமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு தேவைப்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் போன்ற காவல்துறையின் அடக்குமுறைகள் இருந்த போதிலும் போராட்டக்காரர்கள் உறுதியுடன் இருந்தனர். பிரதமர் தாமே நேரடியாக இரவு நேர செல்ஃபி வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அரசியல் உச்சக்கட்டம் எட்டப்பட்டது.

கீழிருந்து வரும் குரல்களை இனி உதாசீனப் படுத்த முடியாது என்பதைப் பிரதமரே ஒப்புக் கொண்டதையே இது காட்டுகிறது. ஒரு அமைச்சரின் ராஜினாமா மட்டும் இந்தியாவின் கல்வி முறையைச் சரிசெய்துவிடாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயம் என்பதால், மாநில அரசுகளும் கல்வித்து றைக்கு நிறைய பதிலளிக்க வேண்டியுள்ளது. ஒரு அரசாங்கம் தனக்குத் தானே எல்லையற்ற அதிகாரம் இருப்பதாக நம்பி இறுமாப்புடன் இருக்கும்போது, ஜனநாயகத்தில் இதுபோன்ற அடையாள வெற்றிகள் குடிமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை நினைவூட்டு வதனால் அவசியமாகின்றன.

இறுதியாக, ஊடகங்களின் ஏகபோகம் உடைக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம், தொலைக் காட்சி முதல் தற்போது டிஜிட்டல் வரை பாரம்ப ரிய ஊடக அதிகார மையங்களின் மாற்றம் தெளி வாகத் தெரிகிறது. வாரக்கணக்கில் பிரதான ஊட கங்கள் இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசவோ அல்லது சோனம் வாங்சுக்கின் உண்ணாவிர தத்தை ஒளிபரப்பவோ இல்லை. ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் மறைக்கப்பட்டதைப் போலத் தோன்றியது. இருப்பினும், பிரதான ஊடகங்களின் செருக்குமிக்க வாதங்களை மீறி போராட்டம் வேகம் எடுத்தது.

இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் இளை ஞர்கள் மத்தியில் தகவல்களைப் பரப்பும் ஊடக மாக மாறி, ஒரு மாற்று வெளி உருவாக்கப்பட்டது. டிஜிட்டல் யுகத்தில் அரசியல் என்பது இனி கட்சி அலுவலகங்களிலோ அல்லது தொலைக்காட்சி ஸ்டுடியோக்களிலோ மட்டும் தொடங்குவதில்லை.

எனவே இளைய தலைமுறையின் கருத்துகள் எதுவானாலும் காது கொடுப்பீர்! தமிழில் தொகுப்பு : ராஜூ பாய்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.