வறட்சியால் கென்யாவில் தீவிரமடையும் பால் தட்டுப்பாடு : இந்தியாவிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்ய அரசு பரிசீலனை
20 Nov 2026, 6:27 pm

வறட்சியால் கென்யாவில் தீவிரமடையும் பால் தட்டுப்பாடு – விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

இந்தியாவிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்ய கென்யா அரசு பரிசீலனை

நைரோபி, கென்யா: கென்யாவில் நிலவி வரும் கடும் வறட்சியால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய நகரங்களுக்கு பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் முதல், பால் விநியோகத்தை நம்பியுள்ள வணிக நிறுவனங்கள் வரை பால் தட்டுப்பாட்டின் தாக்கம் ஒட்டுமொத்த பால் உற்பத்திச் சங்கிலியிலும் எதிரொலிக்கிறது.

வறட்சியால் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்பு:

நைரோபிக்கு தென்மேற்கே உள்ள கஜியாடோ (Kajiado) மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக நீடிக்கும் வறட்சியால் பால் உற்பத்தி கடுமையாகக் குறைந்துள்ளதாகப் பால் பண்ணை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள பிசில் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், “எனது பண்ணையில் தினசரி பால் உற்பத்தி 120 லிட்டராக இருந்தது. தற்போது அது 50 லிட்டராகக் குறைந்துவிட்டது. இயற்கையான மேய்ச்சல் புல்வெளிகள் வறண்டு வருவதால், கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோலை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. சில கால்நடைகளை மேய்ச்சல் நிலம் தேடி அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளேன்” என்றார்.

மேலும், “இயற்கையாகக் கிடைக்கும் குறைந்த அளவு புல்லுடன் வைக்கோலையும் சேர்த்துக் கால்நடைகளுக்கு வழங்குகிறேன். ஒரு வைக்கோல் கட்டு தற்போது 100 முதல் 150 ஷில்லிங் (சுமார் ரூ.73–ரூ.110) வரை விற்கப்படுகிறது. ஆனாலும், ஒரு வளர்ந்த கால்நடையின் ஒரு நாளைய உணவுத் தேவைக்கக்கூட அது போதுமானதாக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

கஜியாடோ மாவட்டம் மட்டுமின்றி, வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்களும், முக்கிய பால் உற்பத்திப் பகுதிகளான மலைப்பகுதிகளில் உள்ள பால் பண்ணை விவசாயிகளும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால் தட்டுப்பாட்டால் பெரிய பால் நிறுவனங்களின் விநியோக மையங்களில் பல மணி நேரம் காத்திருந்து, கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாலைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நைரோபியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அரசின் நடவடிக்கை:

கென்யாவின் வேளாண்துறை அமைச்சர் முதாஹி காக்வே கூறுகையில், நீண்டகால வறட்சியால் மேய்ச்சல் நிலங்கள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் தண்ணீர் கிடைப்பது குறைந்துள்ளதே தற்போதைய பால் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம். இதனால் கால்நடைகளின் உற்பத்தித் திறனும், பால் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விவசாயிகள் வழங்கும் பாலின் அளவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கென்யாவின் பால் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இருப்பினும், சமீபத்திய புள்ளிவிவரங்கள் பால் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குச் செல்லும் பாலின் அளவு குறைந்து வருவதைக் காட்டுகின்றன. 2025ஆம் ஆண்டில் மாதந்தோறும் சராசரியாக 8.345 கோடி லிட்டர் பால் விநியோகிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பரில் அது 7.409 கோடி லிட்டராகக் குறைந்துள்ளது.

இதனால் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கக்கூடிய யுஎச்டி (UHT) பால் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட பால் வகைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி, பதப்படுத்தும் நிறுவனங்களின் இருப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை மற்றும் சில்லறை விற்பனை விலை ஆகியவற்றை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எருமை மாடுகள் இறக்குமதி செய்ய திட்டம்:

பால் உற்பத்தித் துறையில் நீண்டகால சவால்களைச் சமாளிக்கவும், விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் கென்ய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

இதற்கிடையில், உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவில் இருந்து நாட்டு எருமைகளை இறக்குமதி செய்து பால் உற்பத்தியில் ஈடுபடுத்தலாம் என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ முன்வைத்துள்ள திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் காக்வே கூறுகையில், இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. முதலில் கால்நடைகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் இறக்குமதி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அதன்பிறகு, பொருத்தமான எருமை இனங்களைத் தேர்வு செய்து, குறைந்த எண்ணிக்கையிலான எருமைகளை இறக்குமதி செய்து, அந்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு அவை எந்த அளவுக்கு ஏற்றதாக உள்ளன என்பதையும் பால் உற்பத்தித் திறனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

இருப்பினும், இந்திய எருமைகளை இறக்குமதி செய்யும் திட்டம் தற்போதைய பால் தட்டுப்பாட்டுக்கான உடனடித் தீர்வாக இருக்காது என்றும், மத்திய மற்றும் நீண்டகாலத் திட்டமாகவே இதைக் கருத வேண்டும் என்றும் காக்வே தெரிவித்துள்ளார்.