கூத்துபரம்பு இரத்தசாட்சிகளும் நீட் எதிர்ப்பு போராளிகளும் கல்வி வியாபாரத்தை எதிர்த்து களம் கண்ட போராட்டங்கள் - கே.ஆர்.லெனின்
yesterday

கூத்துபரம்பு இரத்தசாட்சிகளும் நீட் எதிர்ப்பு போராளிகளும் கல்வி வியாபாரத்தை எதிர்த்து களம் கண்ட போராட்டங்கள் - கே.ஆர்.லெனின்

தில்லியில் தொடங்கி நாடு முழுவதும் இளம் தலைமுறை நடத்திய நீட் எதிர்ப்புப் போராட்டத்தை உலகமே உற்றுநோக்கியது. இளை ஞர்களின் வீரியமிக்க போராட்டத்தால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இந்த உரிமைப் போராட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.கருத்தாலும் கரத்தாலும் வலுப்பெற்று ஜனநாயகப் போராட்டத்தில் முன்னின்ற மாணவர்களின் இரத்தத் துளிகள் துணை ராணுவப் படையின் லத்திகளால் சிந்தியது. மின்சாரம் பாய்ச்சப்பட்ட லத்திகளால் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டன; பெல்லட் குண்டுகளால் முகங்கள் சிதைக்கப்பட்டன. தில்லியைத் தொடர்ந்து நாடு முழுவதும் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள், லத்தித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு என காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. பீகாரில் 15 வயது மாணவர் ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இத்தனை விலைகளை மாணவர்கள் கொடுப்பதற்குக் காரணம் என்ன?

கல்வி வியாபாரமும் கூத்துபரம்பு இரத்த சாட்சிகளும்

1991-ல் அன்றைய காங்கிரஸ் ஆட்சி

யாளர்களால் அமலாக்கப்பட்ட தாராளமய, உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளால் கல்வி முற்றிலும் வியாபாரப் பொருளாக மாறியது. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிதிகள் குறைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான சுயநிதி கல்வி நிறுவனங்கள் தோன்றின. இதனை எதிர்த்து இந்திய மாணவர் சங்கமும் வாலிபர் சங்கமும் தொடர்ந்து போராடி வந்தன.

1994-ல் கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் கருணாகரன் முதலாளித்துவக் கல்வி நிறுவனங்களுக்குச் சேவை செய்ய முயன்றபோது, வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். கண்ணூருக்கு வருகை தந்த அமைச்சர் எம்.பி. ராகவனை முற்றுகையிட முயன்ற உழைக்கும் வர்க்க இளைஞர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 5 தோழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதுகெலும்பில் குண்டு பாய்ந்து பாதிக்கப்பட்ட ஆறாவது தோழரான புஷ்பன், படுக்கையிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். கல்வி வியாபாரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த முதல் பெரும் போராட்டம் இதுவாகும்.

மாணவர்களின் தற்கொலைகளும் கார்ப்பரேட் கல்விக் கொள்கைகளும்

1991 முதல் 2026 வரை இடதுசாரி அமைப்புகள் கல்வி வணிகமயமாக்கலை எதிர்த்து இடைவிடாமல் தொடர்ந்து வீரியத்துடன் போராடிவருகின்றன. இந்தியாவில் கல்வி வணிகமயமாக்கல் மற்றும் தேர்வுப் பயம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) 1.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள்தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. 35 விழுக்காட்டிற்கும் அதிகமானமாணவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களைச் சார்ந்துள்ளதால், நடுத்தரக் குடும்பங்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகியுள்ளன.நீட் தேர்வு பயம் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் (2021-2026) குறைந்தது 93 மாணவர்கள்தற்கொலை செய்துள்ளனர். குறிப்பாக நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகளில் மாணவர்களின் சொந்த மாநிலங்களின்அடிப்படையில் பீகார் (19.8%), ராஜஸ்தான் (18.7%), தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் (தலா 15.4%) ஆகிய மாநிலங்கள்முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் கார்ப்பரேட் ஆதரவுக் கல்விக்கொள்கைகளே இந்தக் கொடுமைகளுக்குக் காரணமாகும். பாஜக அரசு அதை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.

மாற்றத்திற்கான இடதுசாரிகளின் மாற்றுவழி

“பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவர் இல்லாததுவே எனது கனவுச் சுதந்திர இந்தியா” என்ற பகத்சிங்கின் சிந்தனை இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஜென் ஸி (Gen Z) தலைமுறை பகத்சிங்கின் படத்தை உயர்த்திப்பிடித்து ஒன்றிய அரசை அடிபணிய வைத்துள்ளது. 1994-ல் கூத்துபரம்பில் தொடங்கிய போர் 2026-ல் தில்லி வரை நீடிக்கிறது. கல்வி வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த,

• ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான மற்றும் இலவசக் கட்டாயக் கல்வி கிடைக்க வேண்டும்.

• தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்.

• பாடத்திட்டங்கள் பகுத்தறிவு மற்றும் அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்தும் இடதுசாரிகள் அமலாக்கிய மாற்றுக் கல்விக் கொள்கையால் மட்டுமே சாத்தியமாகும். நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்த்து, இந்திய மாணவச் செல்வங்களைப் பாதுகாக்க எப்போதும் முன்வரிசையில் நிற்போம்!