அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்! – எம்.ஏ.பேபி
yesterday

முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் முயற்சியை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம் என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயமுறுத்திவிடலாம் அல்லது பினராயி விஜயனை முடக்கிவிடலாம் என்று அமலாக்கத்துறை நினைத்தால், அது மிகப்பெரிய தவறு!

கேரள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, நாட்டின் மூன்று நீதிமன்றங்கள் — லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் — ஏற்கனவே தள்ளுபடி செய்து குப்பையில் வீசிய அதே வழக்கில், தோழர் விஜயனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கேரள காவல்துறையை அமலாக்கத்துறை கட்டாயப்படுத்த முயல்கிறது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை, குறிப்பாக அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF அரசு தங்கள் விருப்பப்படியே செயல்பட வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது; கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்.

நாளுக்கு நாள், கேரளாவில் யார் யாருக்கெல்லாம் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது. இத்தகைய தீய நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.