கிராமப்புற வேலை உறுதித் திட்டம் : சராசரி வேலைநாட்கள் வீழ்ச்சி ஒன்றிய அரசு பதிலால் வெளியான உண்மை - ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!
yesterday

கிராமப்புற வேலை உறுதித் திட்டம் : சராசரி வேலைநாட்கள் வீழ்ச்சி ஒன்றிய அரசு பதிலால் வெளியான உண்மை - ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!

புதுதில்லி, ஜூலை 31-மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்படும் சராசரி வேலைநாட்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருந்து வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய வினாவுக்கு (நட்சத்திரக் கேள்வி எண்: 136), ஒன்றிய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஜூலை 28 அன்று பதிலளித்தார்.

வேலை உறுதித் திட்டத்தின் சராசரி வேலைநாட்களும் நிதி நிலைமையும்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட போதிலும், குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்கள் 50 நாட்களைச் சுற்றியே நீடித்து வருவது குறித்து ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், ‘விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரஉத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G Act, 2025) மூலம் சட்டப்படியான வேலை உத்திரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நீர் பாதுகாப்பு, கிராமப்புறஉள்கட்டமைப்பு மற்றும்தீவிர வானிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் திட்டத்தின்

எல்லை விரிவாக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசு சமர்ப்பித்த அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சராசரி வேலைநாட்களின் விவரம்:

• 2008-09: 38 நாட்கள்

• 2014-15: 40 நாட்கள்

• 2020-21: 52 நாட்கள்

• 2023-24: 52 நாட்கள்

• 2024-25: 50 நாட்கள்

• 2025-26: 43 நாட்கள்

• 2026-27 (ஜூன் 2026 வரை): 24 நாட்கள்

2026-27 நிதியாண்டில் ஜூலை 1, 2026 முதல் மார்ச் 31, 2027 வரையிலான 9 மாத காலத்திற்கு இத்திட்டத்திற்கு ₹95,692.31 கோடி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்,மாநிலங்களின் பங்கையும் சேர்த்தால் மொத்த நிதி ஒதுக்கீடு ₹1.51 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு ₹30,000 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்

ஒன்றிய அரசின் இந்தப் பதிலை சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.சட்டப்படி 100 நாட்கள் வேலை தரப்பட வேண்டும் என்ற சூழலிலும், சட்டத்தை உயர்த்தியதாக அரசு கூறினாலும், கடந்த 18 ஆண்டுகளில் ஒருஆண்டு கூட கிராமப்புற குடும்பங்களுக்குச் சராசரியாக 55 நாட்களுக்குமேல் வேலை வழங்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை அரசுத் தரவுகளே தெளிவுபடுத்துவதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

125 நாட்கள் வேலை மற்றும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு என ஏட்டுச் சுரைக்காயாகப் பேசும் ஒன்றிய அரசு, களத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக 100 நாட்கள் வேலையைக் கூட உறுதி செய்யத் தவறிவிட்டது என்றும்

அவர் சுட்டிக்காட்டினார். நிதி ஒதுக்கீட்டை உண்மையிலேயே உயர்த்தி, தாமதமின்றி ஊதியம் வழங்குவதோடு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.