மகளிர் நலன் முதல் மாற்றுத்திறனாளிகள் நலன் வரை; விவசாயிகள் பிரச்சனை முதல் சமூக நீதி பிரச்சனைகள் வரை எளிய மக்களின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றுவீர்: சட்டப் பேரவையில் டி.லதா எம்எல்ஏ வலியுறுத்தல்
1 Sept 2026, 8:30 pm

மகளிர் நலன் முதல் மாற்றுத்திறனாளிகள் நலன் வரை; விவசாயிகள் பிரச்சனை முதல் சமூக நீதி பிரச்சனைகள் வரை எளிய மக்களின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றுவீர்: சட்டப் பேரவையில் டி.லதா எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று மாற்றுத்திறனாளிகள் துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன்-மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ டி.லதா உரையாற்றினார். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், அங்கன்வாடி-சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரின் பிரச்சனைகளை எடுத்துரைத்து, அவர்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மகளிர் நலன் கோரிக்கைகள்

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி, விடுபட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் வழங்க வேண்டும்.முதியோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி, விண்ணப்பித்துக் காத்திருப்போருக்கு உடனடியாக வழங்க வேண்டும். மார்பகம், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏழைப் பெண்கள்அதிகம் உயிரிழப்பதால், ஆரம்ப கண்டறிதல்-சிகிச்சை வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் துரிதப்படுத்த வேண்டும். தோழி விடுதிகளை அனைத்து மாவட்டங்களிலும், தொழில்நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் கூடுதலாக அமைக்க வேண்டும். கலப்புத் திருமணங்களுக்கு ரூ.2 லட்சமும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ரூ.3 லட்சமும் நிதியுதவியும், அரசு வேலையில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும்; தையல்தொழில் செய்யும் ஏழைப் பெண்களுக்கு இலவசமின்சாரம் வேண்டும். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சிறு-குறு நிறுவனங்களில் உள்ளகக் குழுக்களை அரசு கட்டாயமாக்கவேண்டும்; அமைக்காதோர் மீது நடவடிக்கை வேண்டும். திருநர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வீட்டு வசதியில் முன்னுரிமை, உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தவேண்டும். மகளிர் ஆணையத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கி, விசாரணைகள், சட்ட முகாம்கள், விழிப்புணர்வு, டிஜிட்டல் பிரச்சாரப் பணிகளை வலுப்படுத்த வேண்டும். 1098 குழந்தை அவசர சேவையில்பணிபுரியும் 550-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதமாகச் சம்பளமும், மாதந்தோறும் போக்குவரத்துப்படியும் வழங்கப்படாததால், அவற்றை முறையாக வழங்கி பணி நிரந்தரமும் செய்யவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

மாற்றுத் திறனாளிகளுக்கு அண்டை மாநிலங்களைப் போல மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கி, காத்திருக்கும் 2 லட்சம் பேருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2006-ஐ அனைத்துத் துறைகளிலும் கறாராகஅமல்படுத்தி, காலிப்பணியிடங்களில் 4% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அரசாணை20/2023-ன்படி சிறப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தி, பார்வையற்றோர், செவி மற்றும் பேச்சுத்திறன் குறையுள்ளோருக்கு தலா 1% வேலைவாய்ப்பும், தனியார் நிறுவனங்களில் 5% இடஒதுக்கீடும் அமல்படுத்த வேண்டும். டிசம்பர் 3 உலக ஊனமுற்றோர்தினத்தில் ஊதியத்துடன் விடுப்பும், போக்குவரத்துத் துறை மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மாற்றுப் பணிகளும் வேண்டும். உதவித்தொகை பெறும் பெண்மாற்றுத்திறனாளிகளுக்கும் மகளிர்உரிமைத்தொகை வழங்கி, அனைத்து மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் நலன்

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வுபெற்றோருக்கு ரூ.7,850 ஓய்வூதியம், அகவிலைப்படி, பண்டிகைக் கால முன்பணம்,அரசே சந்தா செலுத்தும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். அங்கன்வாடியில் 30,000-ம், சத்துணவுத் துறையில் 60,000-ம் காலியாக உள்ளபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைத்து, உணவு மானியத்தை மாணவர் ஒருவருக்கு ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எஸ்.சி., பி.சி. குழந்தைகளுக்குத் தனித்தனியாக அரிசி, மளிகைப் பொருள்பதிவேடு வைக்கும் சாதிய பாகுபாட்டை உடனடியாக ரத்து செய்து, தரமான அரிசி, பருப்பு, முட்டைவழங்க வேண்டும். மோசமான நிலையில் உள்ளஅங்கன்வாடி கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள், நவீன வகுப்பறைகள், தளவாடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

மதுவிலக்கு, டாஸ்மாக் ஊழியர் நலன்

மது அருந்துவோர் எண்ணிக்கையும் அதனால்ஏற்படும் குற்றங்களும் அதிகரித்து வருவதால்,மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். கல்வி வளாகங்கள், மருத்துவமனைகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் மனமகிழ்மன்றங்களை மூடி, மனமகிழ் மன்ற அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றபின் 717 மதுக்கடைகள் மூடியிருப்பதை வரவேற்றாலும், முதல்வர் அறிவித்த பல கடைகளில் இன்னும் விற்பனை நடக்கிறது; அவற்றை மூட வேண்டும்; எனதுதொகுதி கீழ்வேளூர் ரயில்வே கேட் அருகிலுள்ள மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். போதைமறுவாழ்வுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தனி மையங்களை, தனிக்கட்டிடம், மருத்துவர், உளவியல் ஆலோசகர், சத்தான உணவுடன் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். 23 ஆண்டுகளாகப் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்; காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் பணியைக் கைவிடவேண்டும்; ஓய்வு வயதை58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்; ஊழியர்க்கு சாதகமான நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக முந்தைய அரசுகள் செய்த மேல்முறையீடுகளைத் திரும்பப் பெற வேண்டும்.

காவிரி நீர் உரிமை

காவிரியில் தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு,காவிரி மன்றத் தீர்ப்புக்கு முரணாக கர்நாடகா அரசு மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியை உறுதியாகத் தடுக்க வேண்டும்; ஒன்றிய அரசு புதியஅணைக்கு அனுமதி வழங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாத வாரியாகக் கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் நலன்

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்; கடன் முழுவதும் கட்டியபின் மட்டுமே தள்ளுபடி என்ற நிபந்தனையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். தட்கல் திட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்திக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி இழந்த டெல்டா மாவட்டவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000-ம், தொழிலாளர்களுக்கு ரூ.10,000-ம் நிவாரணம் வழங்கவேண்டும்; எல்நினோ பாதிப்பைக் கருத்தில் கொண்டு டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்களைத் தூர்வாரி முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க வேண்டும்; தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் வீதம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் இறக்குமதி தாராள வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய மாநில அரசு வலியுறுத்த வேண்டும்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்கொள்முதலும், சேகோ செர்வ் மூலம் மரவள்ளிக்கிழங்கு கொள்முதலும் செய்ய வேண்டும். கேரளாவைப் போல ரப்பருக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, ரப்பர் ஆராய்ச்சி மையத்தையும் உடனடியாகத் தொடங்க வேண்டும். ரேஷன் கடைகளில்பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்குப்பத்தாண்டுகளாக ரூ.6.50 மட்டுமே கூலி வழங்கப்படுவதால், அதை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். 2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, தேனிமாவட்டம் கடமலைக்குண்டு, வருசநாடு மலைப்பகுதியில் உள்ள 98 கிராம மக்களுக்கு நிலப்பட்டாவழங்கி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். காய்கறி, பழம், பூ அதிகம் விளையும் மாவட்டங்களில் குளிர்சாதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும்; திருவள்ளூர் மாவட்டத்தில்மாம்பழக் கூழ் தொழிற்சாலையைத் தொடங்கி, மாங்காய் கொள்முதல் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்.

தமிழகம்-கேரளாவுக்குச் சொந்தமான வாளையார் அணையில் வண்டல் மண் அகற்ற கேரள அரசுடன் பேசவேண்டும்.கீழ்வேளூரில் இடம் தேர்வும் வேலியும் அமைந்தும் இதுவரை தொடங்கப்படாத வேளாண்மைக் கல்லூரி கட்டுமானத்தை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். கரும்புஉற்பத்தி, சாகுபடி குறைந்து வருவதால் கூடுதல்கவனம் தேவை; 2018 அரசாணையை ரத்து செய்து, கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை தமிழக அரசே அறிவிக்க சட்டமன்றத்தில் திருத்தம்நிறைவேற்ற வேண்டும். 2013-17 காலகட்டத்தில் சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகளுக்கு வழங்காமல்வைத்திருக்கும் ரூ.1,217 கோடியைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்டுள்ள மதுரைஅலங்காநல்லூர், அமராவதி, ஆம்பூர், தலைஞாயிறு என்.பி.கே.ஆர். சர்க்கரை ஆலைகளையும், திருத்தணி கூட்டுறவு ஆலையையும் முழுமையாகப் புதுப்பித்து செயல்படுத்த வேண்டும்.

சமூக நீதி, பழங்குடியினர் கோரிக்கைகள்

நாகப்பட்டினம் ஏடிஜே பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர்களுக்கு ஓராண்டாகக் காலதாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு, தற்போது 5 மாதமாக நிலுவையில் உள்ள நிலையில், உடனடியாக ஊதியம்வழங்கி, கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் சாதிப்பெயரிலான ‘பறச்சேரி’ கிராமப்பெயர் சமூக சமத்துவத்திற்கு எதிரானது என்பதால், அதை உடனடியாக அகற்றி, ஊர் மக்கள் விரும்பும் ‘வடக்கு அச்சம் தவிர்த்தான்’ எனப் பெயர்மாற்ற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னி மேய்த்தால் மட்டுமே பன்னியாண்டி சமூகத்தினருக்கு எஸ்.சி. சான்றிதழ் என நிபந்தனை விதிக்கப்பட்டு, கல்லூரியில் சேர முடியாமல் ஒருமாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும்.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட மலைவேடன் மக்களுக்கு 20 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் எஸ்.டி. சான்றிதழை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்புலையன், குறவன்,வேட்டைக்காரன், காட்டு நாயக்கன், கொண்டாரெட்டிஸ், ஈரோடு மாவட்ட மலையாளி-குறவன் இனத்தின் 27 உட்பிரிவுகள், குறுமன்ஸ் இனத்தின்‘குறும்பா’ பிரிவையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய ஓய்வூதியர்களுக்கு 2022-லிருந்து நிறுத்தப்பட்ட 7 அகவிலைப்படி உயர்வுகளை வழங்கவேண்டும். கிருஷ்ணகிரி தளி தொகுதி அஞ்செட்டிவட்டம் பூஞ்சோலை கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழும் 29 குடும்பங்களை, ஊராட்சிஅலுவலகக் கட்டிடம் கட்டுவதற்காக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைந்து, 10 நாட்களாக மக்கள் போராடி வருவதால், அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்ட வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம் தற்போது ஆறுநாட்களே கிடைப்பதாகவும், டெல்டா மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் இதை நம்பியே வாழ்வதாகவும், கைரேகை-கருவிழிப் பதிவு கட்டாயமாக்கப்பட்டு பலருக்கு பதிவாகாத பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிவித்து, அரசும் அமைச்சரும் தலையிட்டு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.