மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உழைக்கும் வர்க்கம்
10 Aug 2026, 8:18 pm

மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உழைக்கும் வர்க்கம்

1942 ஆகஸ்ட் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகங்களை நினைவூட்டும் வகையில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் சார்புப் போக்குகளுக்கு எதிராக மத்தியத் தொழிற்சங்கங்களும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து நடத்திய நாடு தழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 1000 க்கும்அதிகமான மையங்களில் திரண்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்களும்,விவசாயிகளும், தொழிலாளர்களும் கைது நடவடிக்கைகளை எதிர்கொண்டு தங்களின் கொதிப்பையும் எதிர்ப்பையும் வீரியமாகப் பதிவு செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப் பெருக்கையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டதும், தமிழ்நாட்டில் 31,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 142 மையங்களில் தொழிற்சாலை பணிகளைப் புறக்கணித்ததும், கேரளாவில் கொட்டும் மழையிலும் மக்கள் திரள் திரளாகக் களமிறங்கியதும் மோடிஅரசுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகும். மேற்கு வங்கம் ஹூக்ளியில் பாஜககுண்டர்களின் தாக்குதல்களையும், காவல்துறையின் தடியடிகளையும் தாண்டி உழைக்கும் வர்க்கம் காட்டிய எழுச்சி அபாரமானது. தொழிலாளர் விரோத நான்கு தொழிலாளர் தொகுப்புகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை மறுப்பது, விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பது போன்றவற்றுக்கு மக்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

உழைக்கும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் சீர்குலைக்கும் எதேச்சதிகாரப் போக்கை ஒன்றிய அரசு கையாண்டு வருகிறது.மாணவர் போராட்டங்களை ஒடுக்குவது மற்றும் மதவாதப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயல்வது போன்ற சதித்திட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

இத்தகைய அடக்குமுறைகளையும்; நாட்டின் விவசாயத்தையும், சிறு, குறு, நடுத்தரதொழில்களையும் சுயசார்பு பொருளாதாரத்தையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் சமரச ஒப்பந்தங்களையும் எதிர்த்துத் தொழிலாளர்களும் விவசாயிகளும் இன்று எழுந்து நின்றிருக்கிறார்கள்.

இன்றைய போராட்டம் வெறும் தொடக்கமே தவிர முடிவு அல்ல; தேசத்தையும் மக்களையும் பாதுகாக்கத் தொடர் போராட்டங்கள் வெடிக்கும். உழைக்கும் மக்களின் இந்த வீரியமான எழுச்சி, எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரானமாபெரும் சரித்திர எச்சரிக்கையாகவும் திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.