நீட் போராட்டமும் சில கேள்விகளும் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
30 Jul 2026, 10:17 pm

நீட் போராட்டமும் சில கேள்விகளும் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

நீட் போராட்டம் துவங்கிய நாள் முதல் களத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் - இளைஞர் அமைப்புகள் தேசத்தின் நான்கு முனைகளிலும் நின்று போராடி வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அநேகமாக அனைத்து இடங்களிலும் களத்தில் நின்றது. கடந்த மே மாதம் நீட்டுக்கு எதிராக ஆங்காங்கே துவங்கிய போராட்டம் ஜூலை இறுதியில் ஜந்தர் மந்தரில் மிகப்பெரும் போராட்டமாக உருவெடுத்தது. அவர்களுடன் இடதுசாரி மாணவர்களும் கரம் கோர்த்தனர்.

பல இடங்களில் இடதுசாரி தோழர்கள் காவல்துறையின் தாக்குதலை எதிர்கொண்டனர்; மண்டை பிளக்கப்பட்டனர்; கை, கால் முறிக்கப்பட்டனர். எனினும் சமரசம் இல்லாமல் முதல் கட்ட வெற்றி கிட்டும் வரை களத்தில் நின்றனர். துணை ராணுவமும், காவல்துறையும், கண்ணீர் புகைக் குண்டுகளும், ஆணி அடிக்கப்பட்ட லத்தி கம்புகளும் இளம் தலைமுறையின் உடல்களைக் கிழித்தாலும் அவர்கள் முன்னேறிச் சென்றனர். ஆனால் இந்த நாட்களில் திமுக, அதிமுக, தவெக கட்சிகள் எந்த இடத்திலும் போராட்டங்களை நடத்தாததை தமிழக மக்கள் அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், இணைய அறிவாளிகள் பலர் போராட்டத்தின் பக்கம் முகத்தைத் திருப்பாமல், இடதுசாரிகளை வசைபாடுவதிலேயே நேரத்தைக் கடத்தினர்.

தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தாலும் போராட்டக் களத்தில் சமரசம் இல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் போராடியதை சிலர் திசைதிருப்ப முயன்றனர். திமுக ஆட்சியிலும் போராடிய எமது தோழர்கள் தாக்கப்பட்டனர், வழக்குகள் போடப்பட்டன. அப்போதும் காவல்துறை அடக்குமுறைகள் இருந்ததுடன், காவல் சிறை மரணங்களும் நடந்தன. ஆனால் இவற்றை மட்டுமே முன்வைத்து தி.மு.கவுடனான உறவை மார்க்சிஸ்டுகள் முறித்துக் கொள்ளவில்லை. நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டே இருந்தோம். 8 மணி நேர வேலை நேரத்தை அதிகப்படுத்தும் மசோதா வந்த போது சட்டமன்றத்தில் எதிர்த்து வெளிநடப்பு செய்தது இடதுசாரிகள்தான். ஒட்டுமொத்த தேசம் பாஜகவின் படுபாதகத் திட்டத்தால் சீரழியக்கூடாது என்பதற்காகவே அன்றைக்கு தி.மு.கவுடன் உறுதியுடன் நின்றோம். இப்போதும் ஆர்எஸ்எஸ் - பாஜக எதிர்ப்புப் போர் என்பது தனித்த ஒன்றல்ல.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற போராட்டங்களின் மீது தவெக அரசின் காவல்துறை தாக்குவதைக் கண்டித்தபோது, தவெக இணையப் போராளிகள் வசைபாடினர். அக்கட்சி தன்னிடம் உள்ள இளைய பட்டாளத்தை நீட் எதிர்ப்புப் போராட்டக் களத்தில் அவர்கள் இறக்கி அவர்களை அரசியல்மயமாக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், ஒன்றிய அமைச்சர் பிரதான் ராஜினாமா செய்ததையே சிலிர்ப்பில்லாமல் கிண்டல் அடித்தனர். போராட்டத்தின் வீரியம் தாங்காமல்தான் மோடி ஆட்சியின் வரலாற்றில் முதன்முதலாகப் போராட்டங்களுக்குப் பணிந்து ஒரு அமைச்சர் தனது பதவியைத் துறந்துள்ளார். தங்களைத் தேவ பலம் கொண்ட ஆட்சியாளர்களாகக் கட்டமைத்துக் கொண்டவர்களுக்கு எதிரான இந்த வெற்றியை, நீட் ஒழிப்புப் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றியாகத்தான் இடதுசாரிகள் பார்க்கின்றனர்.

நீட்டை நிரந்தரமாக ஒழிப்பதும், மருத்துவப் படிப்பு தனியார் கைகளில் இல்லாமல் கட்டணமில்லாமல் கிடைப்பதும் நமது இறுதி இலக்காகும். அதை உரத்துச் சொல்லி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், த.வெ.க மற்றும் இடதுசாரிகள் கூட்டாக களம் காண வேண்டியது காலத்தின் கட்டாயம்!