அரசு மளிகைக் கடைகளில் 30% தள்ளுபடி: நியூயார்க் மேயரின் அசத்தல் அறிவிப்பு!
28 Jul 2026, 3:14 pm
<p>நியூயார்க் நகராட்சி நிர்வகிக்கும் ஐந்து மளிகைக் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழக்கமான சில்லறை விலையை விட 30 சதவீதம் குறைவான விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என மேயர் ஜோரான் மம்தானி அறிவித்துள்ளார்.</p><p>இந்தத் திட்டத்தின் கீழ், புதிய காய்கறிகள், பழங்கள், இறைச்சி, கடல் உணவுகள் உள்ளிட்ட பொருட்களுடன், சீஸ், பால், ரொட்டி உள்ளிட்ட மேலும் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.</p><p>ஒவ்வொரு மாதமும், நகராட்சி நடத்தும் ஐந்து மளிகைக் கடைகளில் இந்தப் பொருட்களின் விலை வழக்கமான சில்லறை விலையை விட 30 சதவீதம் குறைவாக நிர்ணயிக்கப்படும். ஒருமுறை நிர்ணயிக்கப்படும் இந்த விலை, அந்த மாதம் முழுவதும் மாற்றமின்றி அமலில் இருக்கும் என்றும், இதற்கு எந்தவித மறைமுக நிபந்தனைகளோ அல்லது விதிவிலக்குகளோ இருக்காது என்றும் மம்தானி தெரிவித்துள்ளார்.</p><p>வாரம் தோறும் விலை உயர்வு அல்லது கட்டண கவுன்டரில் எதிர்பாராத விலை அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், குறிப்பாக நிலையான வருமானத்தில் வாழும் மூத்த குடிமக்கள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.</p>
