தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை சீரழிக்காதீர்; தொழிலை முறைப்படுத்தி வாழ வழி செய்வீர்! - ஆர்.ராஜா

30 Jul 2026, 10:12 pm
சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை சீரழிக்காதீர்; தொழிலை முறைப்படுத்தி வாழ வழி செய்வீர்! - ஆர்.ராஜா

சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை சீரழிக்காதீர்; தொழிலை முறைப்படுத்தி வாழ வழி செய்வீர்! - ஆர்.ராஜா

தமிழகத்தில் வார, மாத சந்தைகள், கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் கடைவீதிகளில் தள்ளுவண்டிகள், சாலையோரத் தரைக்கடைகள் மற்றும் தலைச்சுமைகளில் சில்லரை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளனர். நகர்ப்புற மக்கள் தொகையில் 2.5 விழுக்காடு உள்ள இவர்கள், நிரந்தர வேலை கிடைக்காதோர், சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களாவர். காய்கறி, பழம், பூ, பொம்மைகள், பிளாஸ்டிக் சாமான்கள், ஆயத்த ஆடைகள், உணவு மற்றும் பலகாரங்கள், இளநீர், நுங்கு, கம்மங்கூழ், தர்பூசணி போன்ற சாலையோர வியாபாரத்தில் மட்டுமே விற்கப்படும் பொருட்கள் ஏராளமாகும்.

“ஐந்து வயதுடைய மைந்தனும் உழைப்பான் அஷ்ட மாதக் கர்ப்பிணி அழுதழு துழைப்பாள் தந்தையும் ராப்பகல் நொந்துதான் உழைப்பான் சஞ்சலம் தரித்திரங்கள் மிஞ்சி உழைப் போரைத் தின்னும்” என்கிற ஜீவாவின் கவிதையைப் போல் குடும்பமே உழைத்து வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருப்பவர்கள்தான் சாலையோர வியாபாரிகள். ஆனால், இந்த எளிய மக்களைக் காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், ஆளுங்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் ரவுடிகள் என பலரும் மிரட்டுவதும் வியாபாரம் செய்யவிடாமல் தடுப்பதுமான செயல்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.

மாமூல் கொடுமையும் பொய் வழக்குகளும்

ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்யவேண்டுமென்றால் மேற்கண்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ‘மாமூல்’ என்ற பெயரில் தினம் ஒரு தொகை அல்லது மொத்தமாகப் பணம் வழங்கிவரும் சூழல் உள்ளது. காவல்துறை வாரம் ஒரு வழக்கு, மாதம் இரண்டு வழக்கு எனப் பொய் வழக்குகளைப் போட்டு நீதிமன்றத்துக்கு அலைக்கழிப்பதும் நாளும் நடைபெறுகிறது. சாலையோர வியாபாரிகள் முழுவதுமே ஏதோ ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் குற்றவாளிகள் போன்று காவல்துறையாலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் பொருட்களைப் பறிமுதல் செய்வது, அடித்து நொறுக்குவது போன்ற செயல்களில் உள்ளாட்சி அமைப்புகளும் காவல்துறையும் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய அரசும் புதியதாகப் பொறுப்பேற்றவுடன் எந்தவித சட்ட பாதுகாப்புப் புரிதலும் இல்லாமல், போதிய அவகாசம் கூட வழங்காமல் சாலையோரக் கடைகளை மிகக் கொடூரமாக அகற்றுவதைப் பார்க்க முடிகிறது.

வாழ்வாதாரச் சிக்கல்களும் கந்து வட்டியும்

இந்தத் தொழிலாளர்கள் குறித்து ‘முறைசாரா தொழில் புரிபவர்களுக்கான தேசிய குழுவானது’ வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, சாலையோர ஆண் வியாபாரிகள் தினந்தோறும் 70 ரூபாய் வரையிலும், பெண்கள் 40 ரூபாய் வரையிலும் மட்டுமே வருமானம் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எளிய மக்கள் தொடர்ந்து ஏழைகளாகவே தவிக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணம், வியாபார முதலீட்டுக்காகவும் மருத்துவம், குழந்தைகள் கல்வி, திருமணம் மற்றும் விசேஷங்களுக்காக கந்து வட்டிக்காரர்களை நாடுவதும், சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் இழந்து கடனாளிகளாக மாறுவதும்தான்.

சட்டப் பாதுகாப்பும் சிஐடியு முன்னெடுப்பும்

இத்தகைய சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக, நிம்மதியாக, சுயமரியாதையுடன் வியாபாரம் செய்வதற்கு சிஐடியு தலைமையேற்று பல்வேறு களப் போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. தில்லி மாநகர சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாகக் கிடைத்த நீதிமன்ற உத்தரவும், சென்னையில் மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை மற்றும் திருச்சியில் மூத்த வழக்கறிஞர் ஜமீல் அரசு ஆகியோர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பெற்றுக்கொடுத்த உயர்நீதிமன்றத் தடை உத்தரவுகளும் அத்துமீறல்களை ஓரளவு குறைக்க உதவின.

உச்சநீதிமன்றம் 1989-ல் விதி 19(1)-ன் கீழ் நடைபாதை, தெருக்கள் மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளில் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்யப் பாதுகாப்பான விற்பனை மையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு, ‘சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம்-2014’ நிறைவேற்றப்பட்டது.

தமிழகச் சட்டமும் அவசர கோரிக்கைகளும்

தமிழகத்தில் பேரூராட்சிகளையும் இணைத்து, 2015 நவம்பர் 2 அன்று அரசாணை வெளியிடப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், தேர்தல் நடைபெறாத நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் வியாபாரிகள் சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். எனவே, மத்திய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் தமிழக அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

தமிழகத்தில் ஒன்றிய, மாநிலச் சட்டப்படி மாநிலத் தொடர்பு அதிகாரியை உடனடியாக நியமித்திட வேண்டும். மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமித்து, சட்டம் குறித்த புரிதலை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையினருக்கு உருவாக்க வேண்டும். விற்பனைக் குழு, மண்டலம், உரிமம் மற்றும் அடையாள அட்டை வழங்காமல் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விற்பனைக்குழுவில் 16 பேரில் 10 பேர் சாலையோர வியாபாரிகளாக இருக்கும்படி சட்டத் திருத்தம் செய்திட வேண்டும்.

தமிழக அரசு வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சாலையோர வணிகத்தைப் பாதுகாக்கும் விதமாக மேற்கண்ட ஆலோசனைகளைப் பரிசீலித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க முன்வர வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.