தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2026-2027 - முக்கிய அறிவிப்புகள் என்ன?
yesterday

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல் வேளாண் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இதில், 2026–27ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.7,432 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர்களில் தன்னிறைவை எட்டும் நோக்கில் ரூ.203.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்ணின் வளத்தைப் பாதுகாக்க "தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்" திட்டத்திற்கு ரூ.122.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் "பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" திட்டத்திற்கு ரூ.27.21 கோடியும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்கும் திட்டத்திற்கு ரூ.7.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் விருதுக்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி மற்றும் பனைப் பொருட்கள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும், 300 ஆழ்துளை மற்றும் குழாய்க் கிணறுகளுக்கு சூரிய சக்தி மின்மோட்டார் பம்புசெட்டுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெயிலிலிருந்து விளைபொருட்களைப் பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடியை விரிவுபடுத்த ரூ.9 கோடி மதிப்பில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்காக ரூ.34.72 கோடியும், 17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியமாக ரூ.9.36 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மாடித்தோட்டம், காய்கறி மற்றும் பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைப்பதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 100 பெண்கள் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி வழங்கவும், பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கவும் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், விவசாய உற்பத்தி, இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.