எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!
yesterday

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை (FCRA) திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். அதில்,

"வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தற்போதைய வடிவில், FCRA பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல், பதிவு இரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற அரசிடம் காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநிலஅரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு ஒன்றிய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.

எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கைநீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு,கல்வி, மருத்துவ, மத, கலாச்சார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.

எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.