சீரமைக்கப்படாத சாலையால் விபத்து அபாயம் குழாய் பதிக்கும் பணி நிறைவு
1 hour before

சீரமைக்கப்படாத சாலையால் விபத்து அபாயம் குழாய் பதிக்கும் பணி நிறைவு

திருப்பூர், ஆக.14-திருப்பூரில் பிரதான குடிநீர் விநியோகக்குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, அவிநாசி சாலை கடந்த வியாழனன்று முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை முறையாக சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரம், அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து 60 அடி சாலை சந்திப்பு வரை பிரதான குடிநீர் விநியோகக் குழாய்பதிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முதல் 60 அடி சாலை சந்திப்பு வரையிலும், குமார் நகர் மற்றும் பங்களா பஸ் நிறுத்தம் வரையிலுமான அவிநாசி சாலைப் பகுதி மூடப்பட்டது. இதனால், அவிநாசி சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் 60 அடி சாலை, பி.என். சாலை வழியாக புஷ்பா சந்திப்பை நோக்கி திருப்பி விடப்பட்டன. ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் அவிநாசி சாலை மற்றும் பி.என். சாலைகளில் இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக நெரிசல் மேலும் அதிகரித்தது. இதனால், குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சீரமைக்கப்படாத சாலைஇதையடுத்து, குழாய் பதிக்கும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை முதல் அவிநாசி சாலை, குமார் நகர், பங்களா பஸ் நிறுத்தம் வழியாக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த போதிலும், சாலை முழுமையாக சீரமைக்காக தோண்டப்பட்ட பகுதிகள் குண்டும் குழியுமாகவும், மேடு பள்ளங்களுடனும் காணப்படுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுவதுடன், இரவு நேரங்களில் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. மேலும், சாலையின் சீரற்ற தன்மையால் வாகனங்களும் பாதிக்கப்படும் நிலைஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்த பகுதிகளில் சாலையை உடனடியாக முழுமையாக சீரமைத்து, வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் தார் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

போக்குவரத்து மாற்றம் வேண்டாம்சாலையை சீரமைக்கும் பணியை தாமதப்படுத்தாமல் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது போக்குவரத்துக்குதிறக்கப்பட்டுள்ள சாலையை மீண்டும் அடைத்து சீரமைக்கும் நிலை ஏற்பட்டால், பொதுமக்களுக்கு மீண்டும் கால விரயமும், அவிநாசி சாலை மற்றும் மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். எனவே, தற்போது திறக்கப்பட்டுள்ள அவிநாசி சாலையை மீண்டும் மூட வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், சாலை சீரமைப்புப் பணியை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.