தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 hour before

டாஸ்மாக் முறைகேடு வழக்கு:மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, போக்குவரத்து டெண்டர் வழங்கியது ஆகியவற்றில்முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். குதிரைப்பேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளிலேயே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. நீதிபதி லட்சுமி நாராயணன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரியதையடுத்து, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆக.25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மின் கட்டண உயர்வு: திமுக குற்றச்சாட்டுஅமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சென்னை: மின்வாரிய மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழக ஆட்சி வந்த பிறகு மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட விமர்சனங்களை முன்வைத்தார்.விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரியம் தானாக முன்வந்து 3,70,000 இணைப்புகளை மறு ஆய்வு செய்தபோது 2,719 இணைப்புகளில் மட்டுமே ‘மிஸ்மேட்ச்’ ஏற்பட்டதாகவும், தவறான மீட்டர் கணக்கீடே காரணம் எனவும், நேரடியாகச் சென்று ரீடிங் எடுக்க அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். 45 டெண்டர்களில் முறைகேடு கண்டறியப்பட்டு வழக்குப் பதிவாகி விசாரணை நடப்பதாகவும், 2021-இல் மின்துறை அமைச்சர் சிறை சென்ற பின் ஐந்தாண்டுகளில் நான்கு அமைச்சர்கள் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். புள்ளிவிவரங்களை முன்வைத்த அவர், 2016–21-இல் 9,613 பேர் பணியமர்த்தப்பட்டு 359 துணை மின் நிலையங்களும் 84,000தளவாடங்களும் அமைக்கப்பட்டதாகவும், 2021–26-இல் 343 பேர் பணியமர்த்தப்பட்டு 122 துணை மின் நிலையங்களும் 99,000 டிரான்ஸ்பார்மர்களும் வாங்கப்பட்டதாகவும், தற்போது தேவைப்படும் 593 துணை மின் நிலையங்களில் இந்தாண்டு 209, அடுத்த ஆண்டு 263அமைக்கப்படும் எனவும் விவரித்தார். மறுமொழியாக செந்தில் பாலாஜி, கொள்கை விளக்கக் குறிப்பில் 5 பக்கங்களில் மட்டுமே தரவு உள்ளதாகவும், 3,437 கேங்மேன் பணியிட மாறுதல் கூறப்பட்டாலும் இதுவரை யாரும் விடுவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எம்எல்ஏக்களுக்கு அவைக்கு வெளியேயும் பாதுகாப்பு வேண்டும்: மனோஜ் பாண்டியன்

சென்னை: மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அவையில் உள்ள உறுப்பினர்களைப் பாதுகாக்கிறீர்கள், ஆனால் வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை எனவும், சமீபத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி அதன் உள் விவகாரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை எனவும் கூறினார். பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசும்போது வழக்குகள் பதிவாகின்றன எனவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தை நாடும் உரிமை உள்ளதாகவும் கூறினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளிக்கவில்லை என மனோஜ் பாண்டியன் குறிப்பிட்டார். உறுப்பினர் மார்க்கண்டேயன், தனிநபர் பேச்சுரிமையையும் சட்டமன்ற உரிமையையும் உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளதாகவும், அவ்வழக்கு அக்டோபரில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கூறினார். முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அனைத்து உறுப்பினர்களையும் கருத்தில் கொண்டே இக்கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், விதிகள் உருவாக்கி அவைக்கு வெளியேயும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஊழல் கோப்புகளை முதல்வர் திறப்பது எப்போது?

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது குறிப்பிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் மேசையில் இருக்கும் 3முக்கிய துறைகளின் ஊழல் கோப்புகளை எதற்காக இன்னும் திறக்காமல் இருக்கிறார்? யார் சொன்னால் திறப்பார்?” ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். சினிமா மாதிரி பஞ்ச் டயலாக் பேசினால், நாங்கள் பயந்து விடுவோமா? என்றும் கேட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட நிகழ்வுகளை தமிழ்நாடே பார்த்திருக்கிறது, எப்போது நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்” என்றார். அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதலமைச்சர் விஜய் வெளியிடுவார், எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார். கோப்புகளைத் திறப்பதில் முதல்வருக்குத் தயக்கமில்லை” என்றார்.

ஜெயலலிதா சிலையை பராமரிக்க கோரிக்கை

சென்னை: அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.ஜெ. அம்மா மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும் என்றும், சிலைக்கு முன் செல்ல உரிய பாதை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பராமரிப்புச் செலவைதாங்களே ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும், இது தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர், இந்தக் கோரிக்கை முக்கியமானது எனவும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.