வனவிலங்குகள் நடமாட்டத்தால் வியாபாரிகள், மக்கள் அச்சம்
9 hours before

வனவிலங்குகள் நடமாட்டத்தால் வியாபாரிகள், மக்கள் அச்சம்

உதகை, ஆக.9-மஞ்சூர் பஜார் பகுதியில் சர்வ சாதாரணமாக கரடிகள், காட்டெருமைகள், பன்றிகள், குரங்குகள் சுற்றித்திரிவதால் வெளியில் நடமாட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கீழ்க்குந்தா, மேல்குந்தா, கரியமலை மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான குடும்பங்கள்வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி, யானை உட்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், சிறு கிராமங்கள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சுற்றித்திரிந்தன.

கடந்த சில நாட்களாக ஊரின் எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் சுற்றித்திரிந்த வனவிலங்குகள், தற்போது அதிகளவில் ஊருக்குள் வந்துவிட்டன. குறிப்பாக, மஞ்சூர் பகுதியில் பஜாரிலேயே கரடிகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் பெறுமளவு சுற்றித்திரிவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக ஊருக்கு அருகில் சுற்றித்திரிந்த காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள், தற்போது மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வருகின்றன. அப்போது வணிக நிறுவனங்கள் அருகில் வருவதால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். நீண்ட நேரமாக அதே பகுதியில் சுற்றித்திரிவதால்சில நேரங்களில் சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஊருக்குள் வரும் வனவிலங்குகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவித முயற்சியும் எடுப்பது கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன் குட்டி காட்டெருமையை சிறுத்தை வேட்டையாடி மரத்தின் மீது வைத்த சம்பவத்தால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பயத்தில், பல நாட்கள் பணிக்கு செல்லாமல் இருந்தனர். மஞ்சூர் பஜார் பகுதியில் இரவு நேரத்தில் இறப்பு வீட்டிற்கு செல்ல வந்த ஒருவரை கரடி கடித்து படுகாயமடைந்தார். எனவே, முதலில் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். மேலும், பஜார் பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், என்றனர்.